செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும் பொழுதில் எம் மனதிலிருந்து...

Posted: 2014-03-01 22:21:28 | Last Updated: 2014-03-02 20:47:14
மலரும் பொழுதில் எம் மனதிலிருந்து...

மலரும் பொழுதில் எம் மனதிலிருந்து...

மலர்வு என்பது -

நன்மையும் புதுமையும் நிறைவும்; சாத்தியமாவதைக் குறிக்கின்ற ஒரு சொல். ஒரு நேர்மறையான இறுதி விளைவு. அழிவு மலர்வதில்லை; மேம்பாடே மலரும்.

மலர்ச்சி என்பது -

ஆத்மாவுக்குக் கோலாகலத்தையும் அறிவுக்கு உயிர்ப்பையும் தருகின்ற ஒரு நிகழ்வு. அது பிரக்ஞையின் உற்பவம். துன்பம் மலர்வதில்லை; ஆற்றலே மலரும்.

மலரும் என்பது -

நற்சிந்தனைகள் பரவி, நற்தாக்கங்களை ஏற்படுத்தி, நல்விளைவுகள் வாழ்வில் நடந்தேறும் என்ற நம்பிக்கை; நடந்தே தீரும் என்ற திடம்; நடத்தியே ஆக வேண்டும் என்ற உறுதி.

இலங்கைத் தீவைத் தாயகமாகக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் வாழ்விலும் ஒரு மலர்வு நிகழ வேண்டும் என நாம் கொண்டிருக்கும் அபிலாசையாலும், அது நிகழும் என நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையாலும், அதற்கான எமது பங்கு உழைப்பை நேர்த்தியாக ஆற்ற வேண்டும் என நாம் கொண்டிருக்கும் முனைப்பாலும் எமது சிந்தனையில் முகிழ்ந்த கருதான் மலரும் இணையத்தளம்.

மலரும் இணையத்தளம் ஓர் எண்ணம்:

அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என்று எந்தப் பக்கமும் சாராமல் - மக்கள் பக்கமே இருந்து, அவர்களிடம் உண்மையை மட்டுமே எடுத்துச் செல்லும் ஊடகமாக நிலைக்க வேண்டும் என்ற எண்ணம்.

மலரும் இணையத் தளம் ஒரு தீர்மானம்:

பத்தோடு பதினொன்றாக ஆகிவிடாமல், அந்தப் பத்தும் விட்டுச் செல்கின்ற இடைவெளிகளையும் சேர்த்து இட்டு நிரப்பி, காலத் தேவைக்கேற்ற தெளிவை மக்களுக்கு குறைவற்று வழங்கிச் செல்ல வேண்டும் என்ற தீர்மானம்.

மலரும் இணையத்தளம் ஒரு நோக்கம்:

கோட்பாடுகள் சார்ந்தோ, சிந்தனைகள் சார்ந்தோ, துறை சார்ந்தோ - எந்த வட்டத்துக்குள்ளும் சுருங்கி விடாமல் - வெறும் அரசியல் மயப்பட்டதாகவும் ஆகிவிடாமல் - ஒரு பரந்த தளத்தில், தமிழ் பேசும் மக்களின் உயர்ச்சி சார்ந்த கருத்துக்களையும் முயற்சிகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கம்.

மலரும் இணையத்தளம் ஒரு விருப்பு:

தயக்கங்களின்றியும், சங்கடங்களின்றியும் - தமிழ் பேசும் மக்களின் நல்வாழ்வை நோக்கிய எந்தக் கருத்தையும் வெளிப்படையாகப் பேசவும், மாற்றுக் கருத்துக்களை மனமுவந்து வரவேற்கவும் ஏற்ற சூழலை தமிழ்ச் சமுதாயத்தில் உருவாக்க வேண்டும் என்ற விருப்பு.

மலரும் இணையத்தளம் ஒரு தேவை:

வெட்டிச் சிதைக்காமலும், பூசிமெழுகாமலும் - உள்ளதை உள்ளபடி அறியக் கொடுப்பதன் மூலம் - தங்கள் தலைவிதி சார்ந்த தெளிவான தீர்மானங்களைத் தாமே எடுக்கும் வல்லமையைத் தமிழ் பேசும் மக்களுக்கு ஊட்ட வேண்டும் என்ற தேவை.

மலரும் இணையத்தளம் ஒரு திடசித்தம்:

ஒளிவு மறைவுகள் இல்லாமலும், பாசாங்குகள் புரியாமலும், தலைசாய்த்தல்கள் செய்யாமலும், குறைகள் வைக்காமலும் - தமிழ் பேசும் மக்களின் அரசியலறிவுத் தேவையை நிறைவு செய்யவேண்டும் என்ற திடசித்தம்.

மலரும் இணையத்தளம் ஒரு பொறுப்புணர்ச்சி:

அடுத்தவர்களது அனுமதியின்றி அவர்களிடத்தில் பிரதியெடுத்த செய்திகளையும், தமதும் தாம் சார்ந்தவர்களதும் நலன்களுக்காகப் புனைந்தெடுத்த காவியங்களையும், பொருட்டே இல்லாத பொருள்களை வைத்துத் தமது நலன்களுக்காகக் கற்பனையில் கடைந்தெடுத்த கதைகளையும் - தகவல்களாக்கிப் பரப்பும் பொதுவான தமிழ் இணையப் பழக்கத்தினின்றும் மாறுபட்டு - சொல்லுகின்ற செய்திகளுக்கும், செய்கின்ற ஆய்வுகளுக்கும், அளிக்கின்ற வாக்குமூலங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி.

மலரும் இணையத்தளம் ஓர் இலட்சியம்:

மக்களின் துன்பங்களை மட்டுமே பேசியபடி இருக்காமலும், துன்பங்களைப் பேசுவதன் மூலம் வெறும் உணர்ச்சிவயப்பட்ட சிந்தனைகளுக்குள் அவர்களை ஆழ்த்தி வைக்காமலும், துன்பங்களைத் தொடர்ந்து பேசக் கூடாது என்பதற்காக நடைமுறைச் சாத்தியமற்ற நம்பிக்கைகயை அவர்களுக்கு ஊட்டியபடி இருக்கா மலும் - அவர்களது சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை உருவாக்குவது மட்டுமன்றி, அதற்காக உருப்படியாகச் செயலாற்றவும் வேண்டும் என்ற இலட்சியம்.

மலரும் இணையத் தளம் ஒரு வழிகாட்டி:

குடிமக்களுக்கு விழிப்பூட்டி, அவர்தம் சேவையாளர்களுக்கு அறிவூட்டி, அவர்தம் அரசியற் பிரதிநிதி களுக்குத் தெளிவூட்டி, மக்களதும் தலைவர்களதும் சிந்தனையைச் செதுக்கும் கருத்துருவாக்கிகளுக்குத் துணிவூட்டி - ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் மக்களின் சமூக - பொருளாதார - அரசியல் வாழ்வின் செல்நெறியைச் செப்பனிட்டுச் செல்லும் வழிகாட்டி.

மலரும் இணையத்தளம் ஒரு பிணைப்பு:

தமிழகத்திலும், ஈழத் தாயகத்திலும், தரணிப் பரப்பெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் எல்லோரையும் - உணர்வாலும், சிந்தனையாலும், அறிவாலும், நோக்கத்தாலும், செயலாலும் - இலங்கைத் தீவின் தமிழர் நிலத்திலிருந்து இணைக்கும் பிணைப்பு.

இந்த முயற்சி இலகுவானதாக இருக்கப் போவதில்லை. வெளிப்படைத் தன்மையை விரும்பாதவர்களும், மக்களை மாயைக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றவர்களும் இந்த இணையத் தளம் பற்றிய புனை கற்பிதங்களைப் பரவவிட்டு முட்டுக்கட்டைகளை உருவாக்கக் கூடும்.

ஆனாலும், இறுகிய கரும்பாறைகளுக்குள்ளேயே வேரோடி, அதே பாறைகளைப் பிளந்து துளிர்க்கின்ற மென்செடிகளைப் போல உண்மை மலரும். மலர்ந்தே தீரும்.

02.03.2014