செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இந்தியாவின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்க முடியும்? ஓர் அலசல்

Posted: 2014-03-29 10:40:10 | Last Updated: 2014-03-29 10:41:05
இந்தியாவின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்க முடியும்? ஓர் அலசல்

இந்தியாவின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்க முடியும்? ஓர் அலசல்

இந்திய மக்கள் தொகையில் 76% பொதுஜனம் ஏழைகள், கீழ்தட்டு நடுத்தர வர்க்கம், மற்றும் நடுத்தர வர்க்கப்பிரிவினர். வாழ்க்கையை நடத்திச் செல்ல மட்டுமே வருவாய் ஆதாரம் கொண்ட இம்மக்களை கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் அரசின் நிதியமைச்சர்கள், எத்தனை கொடூரமான பொருளாதார வன்கொடுமை செய்தார்கள் என்பதை நாடறியும்.

வரிவிதிப்பு மற்றும் பணவீக்கத்தின் நிமித்தமான கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வால் நசிந்துபோது, வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கும் இந்த மக்கள்தான். ஆனால் கடந்த மார்ச் 24ஆம் தேதிடிட்ட இந்து ஆங்கில நாளிதழில் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்க வேண்டும் என்ற கேள்வியினை பூஜா மேஹரா என்ற கட்டுரையாளர் எழுப்பியுள்ளார். இந்தக் கேள்வியினை எழுப்புபவர்கள் இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களும் அவர்களின் ஆதரவாளர்கள் மட்டுமே என்பதை சர்வநிச்சயமாக ஊகிக்க முடியும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதத்தை தாண்ட முடியாமல் திணறுவதையும், அதை உயர்த்துவதற்கு பொருளாதாரத்தில் திறமை வாய்ந்த நிதியமைச்சர் ஒருவர் வரவேண்டும் என்கிறார். தேசப்பொருளாதாரத்தின் மீது இவ்வளவு பெரிய அக்கரையா இவருக்கு என்று பாராட்டத் தூண்டுகிறது.

ஆனால் உண்மை வேறு.குஜராத் மாடல் வளர்ச்சியை முன்னிறுத்தி பிரதமர் வேட்பாளராக பிரச்சாரம் செய்து வரும் மோடியை பற்றி குறிப்பிடுகையில் மோடி ஒரு விளம்பர போஸ்டர் பாய், நிதியமைச்சராக அவரால் திறம்படி செயல்பட முடியாது என்கிறார். அப்படியானால் பிரதமர் யார் என்பது கூட இவர்களுக்கு கவலை இல்லை. நிதியமைச்சர் யார் என்பதுதான் கவலை. நரி செத்தாலும் கண்ணு கோழி மீது தான். அடுத்த நிதியமைச்சருக்கான பட்டியலையும் தயாரித்துவிட்டார்கள். அவர்கள் பட்டியலில் அருண்ஜெட்லி,அருண்ஷோரி, சுப்ரமணியசாமி, சுசில்குமார் மோடி,ஜெகதீஸ் என். பகவதி, சி.ரங்கராஜன்,மாண்டேக் சிங் அலுவாலியா,ஜெய்ராம் ரமேஷ், நந்தன் நிலாகனி எனஅரசியல் வித்தியாசம் இல்லாமல் அந்தக்கட்டுரையில் பட்டியல் நீழுகிறது.

உலக வங்கியில் பணியாற்றியது, புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படித்தது, அனைத்திற்கும் மேல்பொருளாதார சீர்திருத்தக் கொள்கையினை தயக்கமின்றி அமலாக்குவதில் திறமை பெற்றவர்கள் என தகுதியுள்ளவர்களாக மதிப்பிடப்படுகிறது. இதில் மற்றொரு வேடிக்கை என்னவெனில் யஷ்வந்த் சின்காவும், ப.சிதம்பரமும் தேர்தலில் போட்டியிட வில்லையே என்ற மனக்கவலையையும் தெரிவித்து கிச்சுகிச்சு மூட்டுகிறார் அந்த கட்டுரையாளர். நாட்டின் பொருளாதார மந்தத்திலிருந்து மேற்கூறிய இந்த பொருளாதாரப் புலிகள் காப்பாற்றுவார்களா? காப்பாற்றுவார்கள். யாரை என்பதுதான் கேள்வி. இவர்கள் அனைவரும் உலகமயத்தின் பிரதிநிதிகள்.தொழில் வளர்ச்சி என்ற பெயரால் அந்நிய மூலதனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து கொள்ளையடிக்க வசதியாக பொருளாதாரத்தை சீர்(குலைவு)திருத்தம் செய்யும் தொழில்முறை வல்லுநர்கள். உலக வங்கியின் விசுவாசமிக்க சீடர்கள்.

பங்குச் சந்தை குறியீட்டையும், உள் நாட்டு மொத்த உற்பத்தியின் புள்ளி விபரத்தைப் பார்த்து தேசத்தின் வளர்ச்சியை மதிப்பீடு செய்வது இவர்களின் பாணி. உள்நாட்டின் சிறு, நடுத்தர தொழில்கள் மற்றும்அரசு நிறுவனங்களை, பொதுத்துறைகளை முடக்கியும், கோடிக் கணக்கான சாதாரண மக்களின் வாங்கும் சக்தியினை பலவீனப்படுத்திவிட்டு உள்நாட்டு வளர்ச்சியை பற்றி பேசுவது, இந்த பொருளாதார புலிகளுக்கு கைவந்த கலை. அம்பானியின் வருமானத்தோடு ஏழைகளின் வருமானத்தை சேர்த்து கணக்கிட்டு சராசரி வருவாயை பார்த்து திருப்தியடையும் பொருளாதாரவாதிகள். வறுமையால் வாடுவோர், வேலையற்றோர், வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டோர், ஊட்டச்சத்தில்லாமல் இறக்கும் குழந்தைகள், இரத்தசோகையால் மடியும் பெண்கள், விவசாயம் பொய்த்த காரணத்தினால் கடன் வலையில் தவிக்கும் விவசாயிகள், அதனால் தற்கொலை செய்யும் விவசாயிகள் உள்ளிட்ட சமூக பிரச்சனைகளை, அதன் பொருளாதார தாக்கத்தை தேசத்தின் வளர்ச்சிக்கான காரணிகளோடு பொருத்திப் பாராமல் ஒருதலைபட்சமாக திட்டமிடும் பொருளாதாரவாதிகள்.

தொழில்களை நடத்துவது அரசாங்கத்தின் வேலையல்ல என்ற தாராளமய மந்திரத்தினை உச்சரிக்கும் நிதியமைச்சர்கள் இவர்கள். மக்கள் வாழ்க்கையும். தேசத்தின் நலனும் ஒருசேர முன்னேற உற்ற பொருளாதாரக் கொள்கையினை கொண்ட நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் போன்றோரை இவர்கள் கண்கள் பார்க்கத் தவறுகின்றன. தேசநலன் சார்ந்த கொள்கைகளை வடிவமைக்கும் ஆற்றல் வாய்ந்த பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவில் ஏராளமாக இருக்கின்றனர்.

ஆனால் தங்கள் மூலதனத்தை பெருக்க அடுத்தகட்ட சீர்திருத்தத்திற்கு ஆதரவான அரசையும், அதை நிறைவேற்ற பொருத்தமான ஆட்களையும் சரிசெய்ய இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட் வட்டாரங்கள் துடித்துக் கொண்டிருக்கிறன.இதற்கு துணைபோகும் அனைத்து தேசவிரோத சக்திகளையும் அரவணைத்துக் கொள்கிறது. மறுபக்கம் வாழ்க்கையை தொலைத்துவிட்டு இருட்டு இந்தியாவில் வாழும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கைப் போராட்டம். இந்தநேரத்தில் இந்திய மக்கள் எதிர்கொள்ளும் தங்கள் தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் போராட்டக்களமாக தேர்தல் வந்திருக்கிறது. பிரதமர் யார்?நிதியமைச்சர் யார்? என்பதல்ல பிரச்சனை. கோடிக்கணக்கான இந்தியமக்களின் எதிர்காலமா? அல்லதுஅம்பானிகளின் இந்தியாவா? தங்கள் தலையெழுத்தை ஏழை, நடுத்தர வர்க்க இந்தியர்களின் கையில் உள்ள வாக்குச் சீட்டுகளே தீர்மாணிக்க இருக்கின்றன.