செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மே 3 உலக பத்திரிகைச் சுதந்திர நாள்: எது உண்மையான ஊடகம்?

Posted: 2014-05-03 02:01:52 | Last Updated: 2014-05-05 06:33:20
மே 3 உலக பத்திரிகைச் சுதந்திர நாள்: எது உண்மையான ஊடகம்?

மே 3 உலக பத்திரிகைச் சுதந்திர நாள்: எது உண்மையான ஊடகம்?

இயற்கையின் கொடைகளையும் மனித உழைப்பையும் திருடும் பெரு நிறுவன உலகம் இது. பெரும் கூட்டு நிறுவனங்களின் கையில் இன்று ஊடகமும் சிக்கிவிட்டதால் அதைத் தங்களது ஏவல் கருவியாய் மாற்றிவிட்டன.

தங்கள் மற்ற தொழில்களை காத்துக்கொள்ள, ஊடகத்துறையையும் ஒரு தொழிலாக அவர்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதனால் தங்கள் நிறுவனத்துக்கு பக்கப்பாட்டு பாடும் அறிவாளி(?) அடிமைகளை இவர்கள் வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

பெரும் கூட்டு ஊடக நிறுவனங்கள் அத்தகைய கருத்து அடியாட்களாகத்தான் செயல்படுகின்றன. இவர்களின் நோக்கம், சட்டங்களின் துணையாலும் அரசாங்கக் கொள்கைகளின் பக்க பலத்தாலும் ஆள்வோர் - அதிகார வர்க்கத்தினருடனான நீசக் கூட்டுறவாலும் எப்படியெல்லாம் வளங்கள் வளைக்கப்படுகின்றன என்ற உண்மைகளைத் தெரியப்படுத்த விடாமல் தடுப்பதுதான். மனிதர்களை தனித்தனித் தீவுகளாக்குவதுதான்.

இதை மீறி ஊடக நெறிக்காக தங்களை ஒப்படைத்துக்கொண்டவர்கள் பலரும் உண்மைகளை வெளிப்படுத்த உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அரசியலில், சமுதாயத்தில் - ஏன் வர்த்தக உலகத்திலும் கூட நடக்கிற திருவிளையாடல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்கள். ஒரு தொழிலாகச் செயற்படுவதில் முன்னுக்கு வருகிற வணிகப்போட்டி காரணமாகவே கூட பல ஊடக நிறுவனங்கள் செய்திகளை உண்மையாகத் தர வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கத்தில் கார்ப்பரேட் உலகத்தின் கணக்குகளுக்கு ஏற்ப எந்தச் செய்திகளை முன்னுக்குக் கொண்டுவரவேண்டும், எந்தச் செய்திகளை பின்னால் தள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டுச் செயற்படுகிறார்கள்.
“உண்மைகளை ஒடுக்குவது நம் வாழ்க்கையை சிறுமைப்படுத்துகிறது, நம் அறிவை சுருக்குகிறது, நமது மானுடத்தன்மையை இழிவுபடுத்துகிறது, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கான நம் வல்லமையை செயலற்றதாக்குகிறது. இதை முறியடிக்க வேண்டுமானால், பத்திரிகைச் சுதந்திரம் உள்ளிட்ட தகவல் தொடர்புச் சுதந்திரம் நமக்குத் தேவை. அதை விட முக்கியமானதாக வேறு எது இருந்துவிட முடியும்?"

- இந்தச் சிந்தனையை விதைத்திருப்பவர் நோபல் விருது பெற்ற சமூகப் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென். பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய தனது கட்டுரையில் அவர் தனது சிறுவயது அனுபவம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்:

1943 இல் வங்கதேசத்தை கடுமையான பஞ்சம் தாக்கியது. அதைப் பற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்று இந்தியாவை அடக்கியாண்ட பிரிட்டிஷ் அரசு ஆணையிட்டிருந்தது. ஐயான் ஸ்டெப்ஜென்ஸ் என்ற பத்திரிகையாளரால் இதை நெடுநாட்கள் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற துணிவோடு அவர் தமது ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையில் வங்கதேசம் பஞ்சம் பற்றிய உண்மைகளை எழுதினார்.

லட்சக்கணக்கானோர் உண்ண உணவில்லாமல் மரணத்திற்கு உணவாகிப்போனதை உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்தார். அரசு அவரை வேட்டையாடத் துடித்தபோது, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அந்தச் செய்திகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அதன் விளைவாக, அரசு உண்மையை ஒப்புக்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஐயான் ஸ்டெப்ஜென்ஸ்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

அவர்களது பேனாக்களை அல்லது கீ போர்டுகளை மௌனமாக்குகிற கைங்கரியமும் நடக்கிறது. 183 நாடுகளில் ஊடகச் சுதந்திரம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்பது பற்றி ஆய்வு நடத்திய Reporters Without Borders அமைப்பு, இந்தியா அதில் 140ஆவது இடத்தில்தான் இருக்கிறது என்று கூறியிருப்பதைக் கவலையோடு பார்க்க வேண்டியிருக்கிறது. சில நாடுகள் இந்தியாவை விடவும் பின்னால் இருக்கின்றன என்று மகிழ்ச்சியடைவதற்கில்லை.

ஒரு புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெறப்பட்டு காகிதக் கூழாக்கப்படுகிறது, ஒரு புத்தகம் வெளியே வரமுடியாமலே தடுக்கப்படுகிறது, போலியான சித்தரிப்புகளுக்குப் பின்னாலிருக்கிற உண்மைகளை எழுதுகிறவர்கள் மீது புகார் பதிவு செய்யப்படுகிறது, ஆட்சியிலிருப்பவரை விமர்சித்துப் பேசுகிறவர் மீது மட்டுமல்லாமல் அதைச் செய்தியாக வெளியிடுகிற பத்திரிகைகள் மீதும் வழக்குப் போடப்படுகிறதுஎன்ற நிலைமைகள்தான் இந்தியாவை இந்த 140 இடத்திற்கு இறக்கிவிட்டுள்ளன.

இங்கே சென்ற ஆண்டு காவல்துறை நடவடிக்கைகளாலும் சில தீவிரவாத அமைப்புகளாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் 9 பேர்.

ஊடகச் சுதந்திரத்தின் உச்சாணியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்க அரசு, தனது வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றிய ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்ஜே, இணையத்தள உளவுவேலைகள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் ஆகியோரை என்ன பாடுபடுத்திக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்த தகவல்தான். இவ்வாறு உண்மைகளைச் சொல்ல முயன்றதற்காக உலகம் முழுவதும் 211 பத்திரிகையாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் (2013ம் ஆண்டுக்கான கணக்கு). செய்திகளைத் தருகிறவர்கள் பற்றிய இந்தச் செய்தி வெளி உலகத்திற்குத் தெரிந்தாக வேண்டும். ஊடகச் சுதந்திரத்திற்கான குரல்கள் அதனால் ஓங்கி ஒலிக்க வேண்டும். உண்மைகளை அறிவது என்பது அறிவைப் பெறுவதற்கான வாய்க்கால் மட்டுமல்ல, பாகுபாட்டு சமுதாயத்தைப் புரட்டிப்போடுவதற்கான நெம்புகோல் என்பதும் ஊன்றப்பட வேண்டும்.