செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மாமன்னன் ராஜராஜ சோழன் அமைத்த நான்கு பெருஞ்சாலைகள்!

Posted: 2014-05-22 05:24:47
மாமன்னன் ராஜராஜ சோழன் அமைத்த நான்கு பெருஞ்சாலைகள்!

மாமன்னன் ராஜராஜ சோழன் அமைத்த நான்கு பெருஞ்சாலைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கேப்பறையில் உள்ள வெங்கடேசுவரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு இணையதள பயிற்சிப் பட்டறை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் கதிரேசன் தலைமை வகித்தார். பொறியியல் கல்லூரியின் தாளாளர் பி.எஸ்.கருப்பையா முன்னிலை வகித்தார். இரண்டு நாட்கள் நடந்த இப்பயிற்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்முருகன் கலந்து கொண்டு அவர் கண்டுபிடித்த ராஜராஜ மன்னனின் பெருவழிப்பாதைகள் குறித்தும் அதற்கான ஆதாரங்களைக் காண்பித்தும் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:-

நாட்டின் வளர்ச்சிக்கு வழித்தடங்கள் மிகவும் முக்கியமானதாகும்.இன்றைக்கு உள்ள இருவழித்தடங்கள், தொடங்கி எட்டு வழிச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், புறவழிச்சாலைகள், நாற்கரத் திட்டச்சாலைகள், கிராமச்சாலைகள் வரை நிர்வாகத்தின் வளர்ச்சியில் முக்கியமானதாகும். அது வரலாற்றுக் காலத்திலும் முக்கியமானவையாகத் திகழ்ந்துள்ளன.

குறிப்பாக ராசராச மன்னனின் காலத்தில் உள்ள வழித்தடங்கள். அது பெருவழித்தடம் என்று வரலாற்றில் காணப்படுகின்றன.அவற்றில் முக்கியமானதாக புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் இருந்து நான்கு சாலைகள் தஞ்சாவூருக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ஒன்று பிரான்மலையிலிருந்து செல்லும் சாலையாகும். அது பொன்னமராவதி, கொப்பனாப்பட்டி, காரையூர் விலக்கு, தேனிமலை, குமரமலை, பெருமாநாடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை வழியாக அமைந்துள்ளது. அது இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இன்னொன்று அரிமளம், மிரட்டுநிலை, வல்லத்திராகோட்டை, திருவரங்குளம், ஆலங்குடி, கறம்பக்குடி, ரகுநாதபுரம் வழியாகத் தஞ்சை செல்வது, மூன்றாவதாக சேதுபாவா சத்திரம், கறம்பக்குடி, தஞ்சை இணைப்பு சாலையாகும். இதைத்தாண்டி நான்காவதாக அமைந்த பாதைதான் இப்போது பல இடங்களிலும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியும் பிளாட்டுகள் போட்டு வீடுகள் கட்டியும் இருக்கும் பெருவழியாகும்.இந்தச்சாலை திருமலைராயசமுத்திரம் என்னும் மேட்டுப்பட்டியில் துவங்கி மேலக்கொல்லை, திருக்கட்டளை, கலசமங்கலம், அம்பாள்புரம், சின்னையா சத்திரம் வழியாக ஆதனக்கோட்டையின் வழித்தடத்தில் சேர்ந்து தஞ்சை செல்லும் பெருவழியாகும்.

இந்தச் சாலையில் உள்ள திருக்கட்டளையில் இருந்துதான் மன்னர்கள் உத்தரவிடுவது, மன்னரின் படைகள் இடம் விட்டு இடம் நகர்வது, போர்தொடுப்பது போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்ட சாலையாகும். இப்போதுள்ள புறநகர்சாலைக்கு ஒப்பானதாகவும் தன் நாட்டுப் படைகளுக்கும் நிர்வாகத்திற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொண்ட முக்கியமான சாலையுமாகும்.

மன்னர் பெருவழி என்பது அந்தந்த மன்னரின் ஆட்சிப் பகுதிகளுக்குள் நிர்வாக வசதிக்காக அமைத்துக் கொள்வதாகும். இந்தச் சாலைகள் நான்குமே ராசராசன் பெருவழிகள் என்று சொல்லப்பட்டாலும் நான்காவதான பெருவழியானது இதுவரை யாராலும் கண்டறியப்படவில்லை. இப்போது மேட்டுப்பட்டி பஸ் ஸ்டாப்பின் அருகில் கிடக்கும் மைல் கல்லில் உள்ள கல்வெட்டைப் பார்த்து அதில் உள்ள குறிப்புகளைக் கொண்டு தொடங்கிய தொடர் ஆராய்ச்சியில் சிவன்கோவில் கல்வெட்டுகளிலும், சத்திரங்களில் உள்ள கல்வெட்டுகள், அமைப்புகள் போன்ற எல்லாவற்றிலும் இதற்கான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களிலும் கல்வெட்டுக்களிலும் கிடைத்தது பெருவழித்தடங்களைப் பற்றியது என்றாலும் இன்னும் பலரும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் இதுபோல் நிறைய வரலாற்றுப் பதிவுகளும் ஆவணங்களும் கிடைக்கும். அது வருங்காலச் சந்ததியினருக்குப் பெரும் உறுதுணையாக இருக்கும்.

கபில வளநாடு என்னும் பகுதியில் இருந்து செல்வதற்கான சாலைதான் இந்தச் சாலை என்றபோதிலும் மேட்டுப்பட்டியில் கிடைத்திருக்கும் மைல் கல்லில் குறிப்பிடப் பட்டுள்ள தூரமானது ஆதனக்கோட்டைக்கு மிகச் சரியான தொலைவாக அப்போது அந்த வழித்தடத்தில் உள்ள தூரத்தைக் கணக்கிட்டு கல்வெட்டாகச் செதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெருவழித்தடம் இன்றளவும் பழைமையின் அடையாளங்களோடுதான் உள்ளது. பெருங்கற்காலச் சின்னங்கள், சோழர்கள், தொண்டைமான்கள் ஆகியோரின் கோயில்கள், கோட்டைகள், கொத்தளங்கள், சத்திரங்கள், ஆங்கிலேயர் தங்கும் விருந்தினர் மாளிகைகள் என வரலாற்றுச் சான்றுகள் நீள்கின்றன. அதை கணக்கில் கொண்டால் புதுக்கோட்டை எனக் குறிப்பிடப்படும் தூரமானது இன்றைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் இடமாகத் தெரிகிறது. அதற்கும் அதன் மேற்கில் உள்ள சிங்கமங்கலம் எனக் குறிப்பிடப் படும் பகுதியையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கவிஞர் முத்துநிலவன், காரைக்குடி பிரின்ஸ், திண்டுக்கல் தனபாலன், கஸ்தூரிரெங்கன் உட்பட பலரும் இணையதளப் பயன்பாடுகள், வலைத்தளங்கள் உருவாக்குதல் குறித்து பயிற்சியளித்தனர். இருபால் ஆசிரியர்கள், முகநூல் பதிவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.