செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'?

Posted: 2014-06-13 03:10:59 | Last Updated: 2014-06-13 07:40:11
பொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'?

இ.ஜெயராஜ்


இலக்கியப் பேச்சாளர்

பொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமைத்துவச் செயற்பாடுகள் குறித்து சர்ச்சைக் களத்தில் பகிரங்க மடல் ஒன்று வரைந்தார் கம்பவாரிதி இ.ஜெயராஜ். அதனையொட்டி 'தினக்குரல்' பத்திரிகையின் வார இறுதி அரசியல் இணைப்பான 'புதிய பண்பாடு' அதன் பிந்திய இதழில் 'வடக்கு முதலமைச்சரை பதவியில் இருந்து வெளியேற்றும் சதி முயற்சிக்குத் துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்' என்ற தலைப்பில் காரசாரமான ஒரு கட்டுரையை மிக முக்கியத்துவம கொடுத்துப் பிரசுரித்திருந்தது.

'மலரும்' இணையத்தின் சர்ச்சைக் களத்தில் பிரசுரமான கம்பவாரிதியின் மூலக் கட்டுரைக்கான பிரதிபலிப்பு அது என்பதால் அதனை அப்படியே 'மலரும்' இணையத்தில் ஏற்கனவே மறு பிரசுரம் செய்திருந்தோம்.

அந்தக் கட்டுரைக்குப் பதிலடி தந்திருக்கின்றார் கம்பவாரிதி இ.ஜெயராஜ். "பொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'?" - என்ற தலைப்பில் ஜெயராஜ் அளித்த பதில் இங்கு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பிரசுரமாகுகின்றது.

இன்னொரு ஊடகத்தில் பணிபுரிபவரை பெயர் சுட்டி சில விடயங்களை இ.ஜெயராஜ் இப்பகுதியில் குறிப்பிட்டிருகின்றார். அப்படி பெயர் சுட்டி அதனைப் பிரசுரிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை எனினும், ஜெயராஜின் விளக்கப் பதிலுக்கு அந்த அம்சங்கள் அவசியமானவை என்று தெரிவதாலும், அவ்விடயத்துக்கான ஆதாரப் பதிவு தம்மிடம் இருப்பதாக ஜெயராஜ் தமது பதிலில் கோடி காட்டியிருப்பதைக் கவனத்தில் எடுத்தும் அதனையும் பிரசுரத்துக்கு அனுமதித்துள்ளோம்.

- ஆசிரியர்.

பொய் உரைப்பதா 'புதிய பண்பாடு?'

உண்மைக்குப் புறம்பாய் ஊடக தர்மத்தை மீறி, தினக்குரலின் 'புதிய பண்பாட்டுப் பகுதி', 'மலரும்.கொம்மில்' நான் எழுதிய, முதலமைச்சர் பற்றிய கடிதத்திற்கு, குள்ளத்தனமாய் ஒரு பதில் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கடிதம் எழுதிய எனது பெயரையும், 'மலரும்.கொம்' இலத்திரனியல் சஞ்சிகையை நடாத்தும், அதன் ஆசிரியர் வித்தியாதரனது பெயரையும், வெளிப்படையாய் எழுதும் துணிவின்றி, வாசகர்கள் எங்களை உணரத்தக்கதாக குறிப்புக்கள் காட்டி, வஞ்சனையாய் எழுதப்பட்டிருந்த விதத்தில் இருந்தே, அந்தக் கட்டுரையாளரினதும், வெளியீட்டாளரினதும் நேர்மை, தெளிவாகத் தெரிய வருகிறது.

* * *

அக்கட்டுரைக்கான பதிலை அவர்களது பத்திரிகைக்கு எழுதுவதே நேர்மை. எனினும், நான் எழுதுவதை முழுமையாகப் பிரசுரிக்கும் நேர்மையை, அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என உறுதியாகத் தெரிவதாலும், அவர்கள் ஊடகவியலாளர்களாக அன்றி, முதலமைச்சரின் பாதுகாவலர்களாக இயங்க நினைப்பது புரிவதாலும், நான் எழுதிய கடிதம் இதே பகுதியில் வெளிவந்த உரிமையாலும், எனது பதிலை 'மலரும்.கொம்மிலேயே" எழுதுகிறேன். விரும்பினால் இப்பதிலை வெளியிட்டு தம் நேர்மையை அவர்கள் நிரூபிக்கலாம்.

* * *

கட்டுரைக்கான பதிலை வெளியிடுவதன் முன்னர், இக்கட்டுரையை முன்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் 'புதிய பண்பாட்டின்' பொறுப்பாளர் பற்றியும், சில அடிப்படை விடயங்களை வாசகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மேற்படி தினக்குரலின் 'புதிய பண்பாட்டுப் பகுதி"யைத் தயாரிக்கும் திரு. ஜெயேந்திரன் அவர்கள் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர், முதலமைச்சரின் உறவினர். கடந்த தேர்தலில் முன்னாள் நீதியரசரை வேட்பாளராய் நிறுத்த வேண்டும் என்பதில், முழுமூச்சாக இயங்கியவர். இவர் வடமாகாணசபை தேர்தல் காலப் பகுதியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீதியரசரை வேட்பாளராய் முன் மொழியும் கருத்தை மக்கள் மத்தியில் வலியுறுத்துவதற்காய், தினம் தினம் என்னிடம் ஆலோசனைகளையும், எழுத்தாக்கங்களையும் வேண்டிப் பெற்றுக் கொண்டார். 'பதவியேற்க முன்வர வேண்டும்' என , அவர்கள் பத்திரிகையில் நீதியரசருக்கு நான் முன்னர் எழுதிய கடிதத்தைக்கூட, அவரே என்னிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டார் என்பதை இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன். எனக்கும் அக்கருத்தில் உடன்பாடு இருந்ததால் தான் அக்கடிதத்தை நான் அப்போது வரைந்தேன். அப்போது, திரு.ஜெயேந்திரன் இன நலம் நோக்கியே நீதியரசரை பதவிக்குக் கொணர முயற்சிக்கிறார் என நினைந்தேன். உறவுப்பலம் நோக்கியே அம்முயற்சியைச் அவர் செய்திருக்கிறார் எனும் உண்மையை, இப்போதுதான் நான் உணர்கிறேன்.

* * *

என்னைத் தாக்கி வெளிவந்திருக்கும் இக்கட்டுரையும், அவரது தூண்டுதலாலேயே எழுதப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. இதில் நகைப்பான விடயம் என்னவென்றால், 'மலரும். கொம்மில்' நான் தினக்குரலில் எழுதியிருந்த விடயம் வெளியானபோது, திரு.ஜெயேந்திரன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ‘உங்களுடைய அடுத்த கடிதம் வெளிவரப்போகிறதாம், அதை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். முதலமைச்சரின் விடயம் எங்களுக்கும் பெரிய பிரச்சனையாய்த் தான் இருக்கிறது. அவர் ஒன்றும் செய்கிறார் இல்லை, இப்ப எல்லாரும் எங்களுக்கும் அவரைக் கண்டிச்சுத்தான் எழுதிறாங்கள். நாங்களும் ஒண்டு இரண்டைப் போடத் தொடங்கியிருக்கிறம் பார்த்திருப்பியள், நீங்கள் தான் அவருக்கு சொல்லக் கூடியவர். ஒருதரம் அவரைச் சந்தித்துக் கதையுங்கோ' என்று கூறினார். அவரின் பேச்சு என்னிடம் பதிவாயுள்ளது. அவர் என்னை ஏமாற்றுகிறாரா? முதலமைச்சரை ஏமாற்றுகிறாரா? என்பதுதான் தெரியவில்லை. ஓர் ஊடகவியாலாளரின் இந்த நேர்மையின்மை மிக வருத்தம் தருகிறது.

* * *

இனி கட்டுரை விடயத்திற்கு வருகிறேன். அறிமுகம் இல்லாத ஒருவர் இக்கட்டுரையை வரைந்திருக்கிறார். அப்பெயரில் ஒருவர் இருக்கிறார் என்று நம்புவோமாக! பிரச்சினை எழுதியவரைப் பற்றியதல்ல, எழுதிய விடயம் பற்றியது. எனவே அதுபற்றி நாம் கவனம் செலுத்துவோம். அக்கட்டுரை சொல்லும் செய்திகளைக் கீழ்க்கண்டவாறு வகுக்கலாம். ஒன்று என்னைப்பற்றிய தூற்றுதல். இரண்டாவது 'மலரும்.கொம்' ஆசிரியர் பற்றிய சில பொய்யுரைப்புக்கள். மூன்றாவது வடமாகாணசபை நிர்வாகம் பற்றிய சில முடிவுகள். நான்காவது முதலமைச்சர் பற்றிய சில கருத்துக்கள். இந்த நான்கு விடயங்கள் பற்றியும் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகிறது.

* * *

என்னைப்பற்றிய தூற்றுதல்கள்

இக்கட்டுரையில் உள்ள என்னைப் பற்றிய தூற்றுதல்களை முதலில் வரிசைப்படுத்துகிறேன்.

1. முதலமைச்சரை இரண்டு வாரத்திற்குள் வீட்டிற்கு அனுப்புவதாக நான் முடிவுசெய்திருப்பதாய்க் கூறுவது.

2. முதலமைச்சரான பிறகு அவரைப் பலதடவைகள் நாம் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து முதலமைச்சர் மறுத்ததால் தான் நான் அவர் மேல் வெறுப்புக் கொண்டதாய் எழுதியிருப்பது.

3. ஐந்து லட்சம் ரூபாய் பணத்திற்காக அமைச்சர் டக்ளஸை தமிழர்களின் தலைவர் எனக் கூறி, அவரை வீழ்ந்து வணங்கி புகழாரம் செய்ததாய்ச் சொல்லியிருப்பது.

4. அண்மையில் நடந்த வேறொரு அரசியல்சார் அங்குரார்ப்பண விழாவில், நான் கலந்து அவர்களைப் புகழ் பாடியதாய் சுட்டிக்காட்டி இருப்பது.

5. போர்க்காலத்தில் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டிருந்தபோது இலக்கிய பட்டிமண்டபங்கள் நடாத்தியதாய்ச் சொல்வது.

இக்கருத்துக்களுக்குப் பதில் சொல்வது என் கடமையாகிறது.

* * *

எந்தவித ஆதாரமுமில்லாத முதலாவது, இரண்டாவது குற்றச்சாட்டுக்களுக்கான எனது பதில் பின்வருமாறு:-

முதலமைச்சர் என் பகைவரல்லர், நண்பர். அவருக்கும் எனக்குமான தனிப்பட்ட உறவில் எந்தவித விரிசலும் என்னளவில் இன்று வரை இல்லை. அவர் எங்கள் கழகத்தைவிட்டு விலகிய பின்னர்தான், அவரை முதலமைச்சராக்க என்னாலான முழு முயற்சியையும் நான் செய்தேன். அப்படியிருக்க அவரை இரண்டு வாரத்திற்குள், வீட்டிற்கு அனுப்பவேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை. அதுபோலவே நீதியரசர் முதலமைச்சரான பின்பு எங்கள் விழா அழைப்பிதழ்களை, அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறோமே தவிர, எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அவரை நாம் அழைக்கவில்லை. இவ்வுண்மையை 'சத்தியவித்தகர்' பட்டம் பெற்ற நீதியரசரே உறுதி செய்வார் என நம்புகிறேன். உண்மை இதுவாய் இருக்க என்மேல் மக்களுக்கு வெறுப்பு வரவேண்டும் என்பதற்காய், அனைத்து ஊடகதர்மத்தையும் மீறி சொல்லப்பட்டிருக்கும் இவ்விரண்டு பொய்களையும், நிரூபிக்க முடியுமெனின், அதற்கான என்ன தண்டனையும் பெற நான் தயாராயிருக்கிறேன்.

* * *

அமைச்சர் டக்ளஸ் நாங்கள் அமைத்த ஆலயத்திற்காய், எங்களைத் தேடி வந்து பண உதவி செய்தார். அப்போது பலரும் அங்கிருந்தனர். அங்கு நான் பேசும் போது 'மற்றைய தலைவர்களை விட, தமிழ்மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்குத்தான் அதிகம் இருக்கிறது. காரணம் அன்று தொட்டு தாங்கள் அரசைச் சார்ந்திருக்கிறீர்கள். இன்று போராட்டம் ஒடுக்கப்பட்டு, அரசின் அதிகாரம் வடக்கில் முழுமையாய் இருக்கும் நிலையில், தமிழ்மக்களின் நலனை தாங்கள் தான் காக்க வேண்டும், அதோடு வடக்கில் நிகழும் சில தவறுகளில் உங்களைச் சார்ந்த சிலரது பெயர்களும் அடிபடுகிறது. அதனை உடன் நிறுத்தவேண்டும்' எனக் கோரிக்கை விட்டேன். அங்கிருந்த பலர் அமைச்சருடன் நான் முரண்படுவதாய்க் கருதி பயப்பட்டனர். ஆனால் அமைச்சர் என் கருத்தை ஏற்று, 'பிழையான செயல்களில் என்னைச் சார்ந்தவர்கள் இருப்பது தெரியவந்தால், உடன் அதனை எனக்கு அறியத்தாருங்கள், நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன்' என்று சொல்லிச்சென்றார். பலர் கூடி இருந்த இடத்தில் நடந்தது இது. இதில் பொய் சொல்லவேண்டிய தேவை எனக்கில்லை. இச்செய்திகளை என் வளர்ச்சி கண்டு பகை கொண்ட சிலர் பொய்யாய்த் திரித்துரைத்தனர். அதே வேலையை தினக்குரலின் 'புதிய பண்பாடு' தன் தேவைக்காய் இப்போது பின்பற்றுகிறது. புலிகள் காலத்திலேயே அவர்களது சில குறைகளை, அவர்கள் மேடையிலேயே சொன்னவன் நான். அதனாற்றான் முரண்பட்ட போதும் அவர்கள் என்னை மதித்தார்கள். அப்படிப்பட்ட நான் பணத்திற்காக பணிந்தேன் என்று உரைக்கப்படும் பொய்மையை, என் நிமிர்வை அறிந்த தமிழ் மக்கள் ஒருகாலும் ஏற்கமாட்டார்கள். மற்றவர்களை விட 'புதிய பண்பாடு' ஒரு படி மேலே போய், நான்; அமைச்சரின் காலின் விழுந்ததாய் எழுதியிருக்கிறது. எவரவர் எதையெதைச் செய்வார்களோ, அதையே மற்றவர்களும் செய்வார்கள் என எண்ணுவது இயல்புதான்!

* * *

அண்மையில் நடந்த வேறொரு அரசியல் கூட்டத்திலும் நான் கலந்ததாய் எழுதி, அதற்கும் அரசியல் சாயம் பூச முயன்றிருக்கிறார் கட்டுரையாளர். ஐ.டி.எம் நிறுவன உரிமையாளர் ஜனகன் நடத்திய, தமிழ் மக்களுக்கான தொண்டு நிறுவன அங்குரார்ப்பணமே அது. நான் ஒரு பொது மனிதன். தமிழர் சார்ந்த எந்த விழாக்களுக்கு என்னை அழைத்தாலும் கலந்து கொள்வேன். ஆனால் யாரையும் மகிழ்விப்பதற்கோ, உதவி பெறுவதற்கோ இச்சகம் பேச மாட்டேன். என் நிமிர்வுதான் என்பலம்! அன்றைய கூட்டத்திலும் அது போலவே நடந்து கொண்டேன். அதுவும் பலர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டமே. அங்கு நான் என்ன பேசினேன் என்பதை எழுதி இக்கட்டுரையை விரிக்க விரும்பவில்லை. உண்மையை அறிய விரும்புவோர் அக் கூட்டத்தில், கலந்து கொண்டவர்களிடம் நடந்ததைக் கேட்டறிவார்களாக!

* * *

அடுத்தது போர்க்காலத்தில் வெறுமனே இலக்கியம் பேசியதாய்ச் சொல்லும் குற்றச்சாட்டு. போராட்டம் நிகழ்ந்தது தமிழர்தம் இருப்பைக்காக்கவே. தமிழர்தம் இருப்பு மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கே அமைந்தவையே நம் இலக்கியங்கள். அவ் இலக்கியங்களை யாழில் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த காலத்தில், காத்தோம் எனும் நிமிர்வு எம் கழகத்தாருக்கு உளது. அதனாற்றான் மாறுபட்ட கருத்துக்கள் சில இருந்த போதும், புலிகள் அமைப்பினர் கூட எங்களை மதித்து நடந்தார்கள். வெறுமனே இலக்கியத்தோடு மட்டும் நாம் நிற்கவில்லை. தமிழ் மண்ணில் கல்வியில் குறைபாடு நிகழ்ந்த போது அதற்காகக் குரல் கொடுத்திருக்கிறோம். சமூகத் தொண்டை ஊக்குவித்திருக்கிறோம். தெல்லிப்பழை துர்க்கை அம்மன்; கோயிலில் குண்டு வீழ்ந்து சிலர் இறந்த போது, அதை எதிர்த்து பெரியதோர் ஊர்வலம் ஒன்றை முன்னின்று நடாத்தியிருக்கிறோம். இன்னும் இப்படிப் பல சொல்லலாம். வேண்டு மென்றே எம் மேல் பழி சொல்ல நினைக்கும் இவர்களுக்கு, எம் நிலைப்பாட்டை நிறுவவேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.

* * *

'மலரும்.கொம்' ஆசிரியர் பற்றிய சில பொய்யுரைப்புக்கள்

என் கருத்தைத் தாக்குவதற்காக 'மலரும். கொம்' ஆசிரியர் வித்தியாதரனை, மேற்கட்டுரை கேவலப்படுத்த முயன்றிருக்கிறது. தமது நோக்கம் நிறைவேற்றுவதற்காய், சக ஊடகவியாலளரான வித்தியாதரனை இக்கட்டுரையில் இழிவு செய்திருக்கிறார்கள். வித்தியாதரன் கடந்த போர்க்காலத்தில், ஒரு பத்திரிகையாளனாய்ச் செய்த சாதனைகளை உலகம் அறியும். 2008 இல் கடுமையாய்ப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போது, ஊடகச் சுதந்திரத்தை காத்தமைக்கான பத்திரிகையாளர் விருது, இலங்கைப் பத்திரிகை ஆசிரியச் சம்மேளனத்தினால், வித்தியாதரனுக்கு வழங்கப்பட்டது அனைவரும் அறிந்த செய்தியே, தமிழர் தரப்பின் போரட்டக் குழுக்கள் அனைத்துடனும், ஒரு பத்திரிகையாளனாய் வித்தியாதரன் கொண்டிருந்த தொடர்பும், குறிப்பாக, புலிகள் அமைப்பின் தலைவராய் இருந்த பிரபாகரனும், அவர்களது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும், வித்தியாதரனின் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் உலகம் முழுவதும் அறிந்த ஒன்றே. போராட்டக்காலச் செயற்பாட்டின் விளைவாய், இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டு, மயிரிழையில் உயிர்தப்பிய வித்தியாதரனை, அரசின் கையாளாய் அக்கட்டுரை வர்ணித்திருப்பதை நேர்மையுள்ள எவரும் மன்னிக்கமாட்டார்கள். கொழும்பில் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்து கொண்டு, போர்ச்செய்திகளை விற்றுப் பிழைத்த பத்திரிகையாளர்களுக்கு, போர்க்களத்தில் நின்று பணியாற்றிய பத்திரிகையாளரின், தியாகம் தெரிய வாய்ப்பில்லைதான்.

* * *

முதலமைச்சராய் வர முயன்று தோற்றதாலேயே, வித்தியாதரன் தற்போதைய முதலமைச்சரை விமர்சித்த என் கடிதத்தை பிரிசுரித்ததாயும், அதனையும் அரச தரப்பினரிடம் காட்டிப் பிரசுரித்ததாயும், அதற்கான சன்மானத்தை சுவிஸ் வங்கியில் இட்டிருப்பதாயும், அக்கட்டுரையாளர் அபாண்டங்களை அடுக்கியிருக்கிறார். கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்த போரோடு ஏதோ வகையில், தொடர்புபட்டு, உயிர்க்கு அஞ்சாது உழைத்த வித்தியாதரன் தேர்தலில் போட்டியிட நினைத்ததில், தவறிருப்பதாய் எவரும் சொல்லமாட்டார்கள். அது இரகசியமான ஒரு விடயமும் அன்று. தாம் தேர்ந்தெடுக்கப்படாத போது, முதலமைச்சருடனோ, கட்சியுடனோ வித்தியாதரன் எவ்விதத்திலும் பகை பாராட்டவில்லை. நீதியரசரை இப்பதவிக்கு முன் மொழிவதில், வித்தியாதரனுடனான எனது நீண்ட நாள் நட்பைப் பொருப்படுத்தாதே நான் செயல்பட்டேன். இன்று வரை வித்தியாதரன் அதுபற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நான் எழுதிக்கொடுத்த அன்றே என் கடிதம் 'மலரும்.கொம்மில்' பிரசுரிக்கப்பட்டது. அதை ஆட்சியாளர்களுக்குக் காட்டி பிரிசுரித்ததாய் சொல்வதைப் போன்ற, அபாண்டம் வேறெதுவும் இருக்கமுடியாது. சுவிஸ் வங்கியில் பணம் போடுவதாய்ச் சொல்லியிருப்பது நகைப்பிற்குரியது. இச்செய்தியை வெளியிட்டவர்களுக்கு இத்தகைய அனுபவம் இருக்கிறதோ தெரியவில்லை? தன் பிள்ளைகளின்; கல்விக்காய், அண்மையில்தான் வித்தியாதரன் கொழும்பில் தனக்கு இருந்த வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீட்டில் குடியேறியிருக்கிறான். ஒர் இலக்கியவாதியாகிய என்மேல் பழி சொல்வதில் ஆச்சரியமில்லை. ஒரு மூத்த ஊடகவியலாளரின் மேல், இத்தகு அபாண்டங்களை, சக ஊடகவியலாளர்களே ஆதாரமில்லாது அடுக்குவது பெருந்தவறு. மூத்த ஊடகவியாலாளர்களான தனபாலசிங்கம், பாரதி போன்றவர்கள் பணி செய்யும் ஒரு பத்திரிகையில் இத்தகு கீழ்மைகள் நடக்க அனுமதிக்கப்படுவது எவ்விதத்திலும் பொருத்தமான செயலன்று.

* * *

கட்டுரையாளரின் வடமாகாணசபை நிர்வாகம் பற்றிய சில முடிவுகள்

மேற்படி கட்டுரையாளர் மாகாணசபை நிர்வாகம் பற்றி, நகைப்பிற்கு இடமான முடிவொன்றினை தனது கட்டுரையில் அறிவித்திருக்கிறார். மாகாணசபை நிர்வாகத்தை செய்ய முடியாது என்பது இலங்கையிலுள்ள எந்த மனிதனுக்கும் தெரியாததொன்றாக இருக்க முடியாது. அதில் வடக்குக் கிழக்கில் எதையும் செய்ய முடியாதென்பது உலகத்திற்கே தெரிந்த விடயம் என்கிறார் அவர். அது உண்மையாயின், இந்தப் பதவிக்காகத்தானா நாம் இவ்வளவு போராடினோம்? எனும் கேள்வி பிறக்கும் என்பதைக்கூட, கட்டுரையாளர் ஏனோ சிந்திக்கவில்லை. சர்வதேசத்திற்கு உண்மையை உரைப்பதுதான் முதலமைச்சரின் வேலை என்கிறார் கட்டுரையாளர். அது உண்மையாயின் அவ்வேலையை பாராளுமன்ற உறுப்பினர்களே செய்திருக்கலாமே! இவை கிடக்க முதலமைச்சரைப் பாதுகாப்பதாய் நினைந்து எழுதத்தொடங்கிய கட்டுரையாளர், பிறகு அதற்கு நேரெதிராய், முதலமைச்சரின் நிர்வாகத்தில் குறைபாடுகள் உண்டு தான், எந்த நாட்டு நிர்வாகத்தில் குறைபாடில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்ல பிரசுரிப்பாளர் அக்கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாய் நினைந்து, தடித்த எழுத்தில் பெட்டிச் செய்தியாய் வெளியிட்டிருக்கும் கருத்து, முதலமைச்சரை இன்னும் இழிவு செய்வதாய் அமைந்திருக்கிறது. அச்செய்தியை நீங்களே படித்துப்பாருங்கள். முதலமைச்சரின் இயல்பினைப் புரிந்து கொண்டு அவரிடமிருந்து தமிழ்மக்கள் பெறவேண்டியதை பெற முடியாதவர்களாக உள்ளனரா? அல்லது தமிழ் மக்களின் இயல்புக்கு இசையமுடியாது தன்னை மாற்றிக் கொள்ள முடியாது முதலமைச்சர் தத்தளிக்கிறாரா?

இதுதான் அப்பெட்டிச் செய்தி, முதலமைச்சரிடமிருந்து தமிழ்மக்கள் பெற வேண்டியதை பெறமுடியாதவர்களாக உள்ளனர் என்பதையும், தமிழ் மக்களின் இயல்புக்கு இசையமுடியாது தன்மை மாற்றிக் கொள்ள முடியாது முதலமைச்சர் தத்தளிக்கிறார் என்பதையும் அல்லவா மேற்செய்தி உறுதிப்படுத்துகிறது. இவை முதலமைச்சர் மேல் நான் வைத்த குற்றச்சாட்டுக்களை வழி மொழிபவை. இதைக் கூட அறியாத வெளியீட்டாளரின் பேதைமையை என் சொல்ல?

* * *

முதலமைச்சர் பற்றிய சில கருத்துக்கள்

கட்டுரையாளர் முதலமைச்சர்மேல் தான் கொண்ட பற்றினை வெளிப்படுத்த, மிகையாய்ச் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இப்படி ஒரு மனிதனை இனித் தமிழன் சந்திக்க முடியாது. முப்பது வருடத்தை அடுத்து தமிழருக்கு மீண்டும் ஒரு தலைமை கிடைத்திருக்கிறது. இவையே கட்டுரையாளரின் அம் மிகைக்கருத்துக்கள். நாம் அனைவருமே முதலமைச்சரின் மேல் மரியாதை வைத்திருக்கிறோம். அவர் மரியாதைக்குரியவரே! அதில் மறுப்பில்லை. அதற்காக அவரைப்போல் ஒரு மனிதனை, இனித் தமிழன் சந்திக்க முடியாது என்றுரைப்பது, சற்று அதிகப்படியான கற்பனை, அதுமட்டுமல்ல அது தமிழினத்தை இழிவுபடுத்தும் ஒரு முடிவுமாகும். முப்பது வருடத்தின் பின் மீண்டும் ஒரு தலைமை என்றால், முப்பது வருடத்திற்கு முன்பான தலைமை எது என்று ஆசிரியர் சொல்வாரா? முப்பது வருடத்திற்கு இடையில் இருந்த எந்தத் தலைமையும் தலைமை இல்லையா? அப்படிச் சொல்வதன் மூலம் யாரைத்தாழ்த்த நினைக்கிறார்கள்? நெஞ்சில் உள்ளது வாய் வந்து சேர்ந்திருக்கிறது.

* * *

முடிவுரையாக,

மேற்கட்டுரையில் என்னையும், ஊடகவியலாளரையும் இழிவு செய்யும், நோக்கம் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதைத்தாண்டி நான் கேட்ட கேள்விகளுக்கான எந்தவித பதிலும் உரைக்கப்படவில்லை. இதுதான் நம் குறைபாடு. எனது கடிதத்தைப் படித்துவிட்டு என்னோடு தொலைபேசியில் பேசிய சில பிரமுகர்களும், 'அவரைப் பற்றி எப்படி நீங்கள் எழுதலாம்?' என்றே கேள்வி எழுப்பினர். இந்நிலை மாறும்வரையும் நாம் உருப்பட முடியாது. ஜனநாயகத்தில் சமுதாய நன்மை நோக்கி எவரும் எவரையும் விமர்சிக்கலாம். அதில் எந்தவித தவறுமில்லை. அதைத்தான் உலக ஊடகங்கள் செய்து வருகின்றன. அதனால்தான் ஜனநாயகத்தூண்கள் நான்கில் ஒன்றாய், உயர்ந்தோரால் ஊடகமும் உரைக்கப்பட்டது. எப்படி இலங்கை அரசு தம்மை விமர்சிப்பவரை எதிரிகளாய்க் கருதுகிறதோ, அது போலவே இப்போது தமிழ்த்தலைமைகளும் கருதத்தொடங்கியிருக்கின்றன. மக்களின் பெரும்பான்மை ஆதரவு சர்வாதிகாரத்திற்கல்ல ஜனநாயகத்திற்கே, நேர்மையான முறையில் ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால், அவ்விமர்சனம் பிழையானதெனின், மக்கள் மன்றில் அதற்கான பதில் வைக்கப்படவேண்டும். அவ்விமர்சன் சரியானதெனின், சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் திருத்தப்படவேண்டும். அதுதான் ஆரோக்கியமான விடயம். அதை விடுத்து அவரை விமர்சிக்காதே! அவரைக் கேள்வி கேட்க இவர் யார்? என்பது போன்ற கூற்றுக்கள், தலைமையைப் பிழையாக வழிப்படுத்தவே உதவும். ஒருகாலத்தில் அமிர்தலிங்கம், பிறகு பிரபாகரன், அவர்கள் வரிசையில் இன்று முதலமைச்சரை இணைக்க சிலர் முனைகிறார்கள்.

* * *

குறையில்லாமல் இருக்க இங்கு எவரும் கடவுளர் அல்லர். குறைகள் சுட்டிக்காட்டப்படுவது ஆரோக்கியமே அன்றி அவமரியாதையன்று. விமர்சிப்பவர்களை இனத்துரோகிகளாய் இனங்காட்டி ஒதுக்க நினைப்பது நம் இயல்பென, நான் எனது கடிதத்தில் முன்னமே எழுதியிருந்தேன். அதனையே 'புதிய பண்பாடு' புகுத்தியிருக்கிறது. செவி கைக்கச் சொற்பொறுக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அவரையும் இனத்துரோகியாக்க முயல்வார்களோ என்னவோ தெரியவில்லை

* * *

வெளியீட்டாளர், கட்டுரையாளர்களின் இத்தவறான போக்கை, நிச்சயம் முதலமைச்சர் ரசித்திருக்கமாட்டார் எனக் கருதுகிறேன். அங்ஙனமே தமிழர் கூட்டமைப்புத் தலைவர்களும், இந்நேரடி விமர்சனத்தை நேர்மையாய் ஏற்கவேண்டும் என்பது என் விருப்பு.

* * *

மேற்கட்டுரை என்னை முடிந்த அளவு கேவலப்படுத்த முயன்றிருக்கிறது. அக்கட்டுரை வெளியீட்டு முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்குமாய் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. அதனால் மிரட்டி என்னைப் பணிய வைக்கமுடியாது. இந்த சமுதாயத்தின் மீதான உண்மை அக்கறையும் துறைசார்ந்த உழைப்புமே, தமிழர்கள் மத்தியில் என்னை நிலை நிறுத்தியிருக்கின்றன. இன்றைய எனது பிரமுக நிலையைப் பாதுகாக்க, இதுவரை பேணி வந்த என் இலட்சியங்களை ஒருக்காலும் கைவிடமாட்டேன். இன நன்மைக்காக பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டியவற்றை, நடுநிலையோடு பகையின்றிப் பேசுவேன். இது நான் வகுத்துக்கொண்டிருக்கும் பாதை. எனது இந்தப் போக்கிற்காக என்னை நிராகரிக்க நினைப்பவர்கள், தாராளமாய் நிராகரிக்கலாம். என்னை நிராகரிப்பதால் எனக்கேதும் இழப்பில்லை. நிராகரிப்பவர்க்கே இழப்பு. தனி மனிதர்களுக்கும், இனத்திற்கும் இது பொருந்தும். தயவு செய்து மேற்படி எனது கருத்துக்களை ஆணவமாய்க் கொள்ளாமல், இன அக்கறையாய்க் கொள்ள வேண்டிப் பணிந்து நிற்கிறேன்.

* * *

எவரையும் கேள்வி கேட்டு அசைக்கும் ஊடகச் சுதந்திரத்திற்காக, உலக ஊடகவியலாளர்கள் போராடிக்கொண்டிருக்க, ஊடகவியலாளர்கள் முதலமைச்சரைக் கையாளமுடியாதென, ஒரு ஊடகமே குரல் கொடுக்கும் அதிசயம் 'புதிய பண்பாட்டில்' நிகழ்ந்திருக்கிறது. விதியே! விதியே! தமிழச் சாதியை என் செயற்கருதி இருக்கிறாயடா?

* * *

பிற்குறிப்பு:-

கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது, இன்றைக்குக் கைக்கு வந்த (09.06.2014) தினக்குரலை மேலோட்டமாய்ப் புரட்டினேன். ஆசிரியர் பக்கமான அதன் 10 ஆம் பக்கத்தில் 'தி இந்து" பத்திரிகையில் வெளியான ஒர் செய்தியை ஆசிரியர் அதன் முக்கியத்துவம் கருதி, மீள் பிரசுரம் செய்திருக்கிறார். அதன் முற்பகுதியைப் பார்த்து வியந்தேன். இதோ அப்பகுதி;:-

சர்வாதிகாரக் குவிப்பு நல்ல அறிகுறியல்ல

தமிழகத்தில் 1967 இல் காங்கிரஸ் தோற்று தி.மு.க. அரசு பதவிக்கு வந்த சில நாட்களில் புதிய அரசைப்பற்றி உங்கள் கருத்து என்ன? என்று காமராஜரிடம் கேட்ட போது ஆறு மாதம் போகட்டும் பேசலாம் என்றாராம். அரசியல் பெருந்தன்மை மட்டுமல்ல இது. ஒரு புதிய அரசாங்கத்தின் நிர்வாகிகள் தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ளவும், அரசு இயந்திரத்தின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்ளவும், கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த அவகாசத்தையும், அதற்குள் நடக்கும் தடுமாற்றப் பிழைகளையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது. ஆனால் அதற்காகவே எல்லா விடயங்களையும் அப்படியே மௌனமாக பார்த்து அனுமதித்து விட முடியாதல்லவா?

'புதிய பண்பாடுப் பகுதி' தயாரிப்பாளர், பத்திரிகை ஆசிரியரிடம் சில பயிற்சிகளைப் பெறட்டும்.