செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் நல்லாட்சி தத்துவமும்!

Posted: 2014-06-16 07:09:45 | Last Updated: 2014-06-16 13:27:05
முதலமைச்சர் விக்னேஸ்வரனும் நல்லாட்சி தத்துவமும்!

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் நல்லாட்சி தத்துவமும்!

'மலரும்' இணையத்தின் சரச்சைக் களத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்போக்குப் பற்றிய சர்ச்சைகளை கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆரம்பித்து வைத்தார். அதனை ஒட்டி வாசகர் ஒருவர் 'நோலோன் ஆத்மா' என்ற புனைபெயரில் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த மடல் இங்கு பிரசுரமாகின்றது.

இந்த மடலில் கூறப்பட்ட கருத்துக்கள் மற்றும் தகவல்களில் தவறு இருந்தால், அவற்றைச் சுட்டிக் காட்டினால், அவை திருத்தப்படும்; மறுப்புகள் பிரசுரிக்கப்படும், மாற்றுக் கருத்துக்களுக்கும் சர்ச்சைக் களத்தில் தாரளமாக இடமுண்டு. -ஆசிரியர்.

முதலமைச்சர் அவர்களே!

கடந்த 10.06.2014 அன்று வவுனியா வெண்கலசெட்டிக்குளம் பிரதேசசபையின் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு -

பிரித்தானியாவில் 'நோலோன்' என்பவர் அறிமுகப்படுத்திய - பொது வாழ்க்கையில் மற்றும் நிர்வாகத்தில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய - ஏழு விதிகள் பற்றியும், எமது அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும், நிர்வாக அலுவலர்களும் அவற்றை மனதில் வைத்திருந்து கடமையாற்றுவது சாலச்சிறந்தது என்றும் தாங்கள் கூறியிருந்தீர்கள்.

அந்த விதிகள் யாவன என்றால்,

1. சுயநலமற்ற தன்மை. ஆங்கிலத்தில் Selflessness என்பார்கள். 2. நேர்மை. அதாவது Integrity. 3. புறநிலை மெய்மை அல்லது Objectivity. 4. பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு. இதனை Accountability என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். 5. வெளிப்படைத்தன்மை அல்லது Transparaencey / Openness. 6. உண்மையுடன் நடக்கும் தன்மை அல்லது Honesty. 7. எடுத்துக்காட்டாக வாழ்தல் அல்லது Leadership. என்பதாகும் என்று விளக்கமும் கொடுத்திருந்தீர்கள்.

தாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றில், “உண்மை, நேர்மை, வெளிப்படத்தன்மை, நல்லாட்சி” பற்றியே தாங்கள் அதிகம் பேசி வருகின்றீர்கள். நன்று! நன்று!! மண் பயனுறட்டும்!!!

ஆனால் மக்களும் மாகாணசபை உறுப்பினர்களும், தங்களது சகாக்களும் என்ன சொல்கிறார்கள்? “ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி கண்ணே” என்றும், “பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை” என்றும் பரவலாகவே கிசுகிசுக்கிறார்கள். அதையொட்டி பேசலாம் வாங்க. வலைத்தள வாதம்

நல்லாட்சிக்கான தத்துவம்: ஒன்று

தங்களின் தனிப்பட்ட செயலாளர் மன்மதராசா, தனது கொழும்பு வீட்டு மின்சார பாவனைக் கட்டணத்தை முதலமைச்சர் அலுவலகத்தின் மின்சார பாவனைக் கட்டணமாகக் காட்டி, அதை வடக்கு மாகாணசபைக்கூடாகச் செலுத்துவதற்கு முற்பட்டிருந்தார். வடக்கு மாகாணசபை கணக்காளரிடம் மின் கட்டண பில்களை சமர்ப்பிக்கும் முன்னரே, ஆளுநரிடம் அதற்கு அங்கீகாரமும் வாங்கியிருந்தார். இந்த தில்லுமுல்லுகள் கணக்காளரினால் கண்டுபிடிக்கப்பட்டு, அந்தச்செயல்பாடு கணக்காளரினால் முற்றாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

(தாங்கள் கூறிய விதி இரண்டு: நேர்மை அதாவது Integrity யும், விதி ஆறு: உண்மையுடன் நடக்கும் தன்மை அல்லது Honesty யும் இதில் எங்கே?)

நல்லாட்சிக்கான தத்துவம்: இரண்டு

முதலமைச்சர் உட்பட வடக்கு மாகாண அமைச்சர்கள் தமக்கும், தத்தமது அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களது இஷ்டத்துக்குச் செலவு செய்ய முடியாது என்றும், அதை கண்காணிக்க பொது நிதிக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும், அந்த நிதிக்குழுவே அமைச்சர்களின் (Projects) திட்டங்களுக்கான, பொருட்கள் மேலாண்மை (Materials Management), மேலாண்மை செலவுகள் (Management Costs), கொள்முதல் ஆணை (Purchase Order), கொள்முதல் (Purchasing) விடயங்களை மேற்கொள்ள Quotation வேண்டும் என்றும், சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட (Very Good Idea) நல்ல யோசனையை முதலமைச்சராகிய தாங்களே மிகக்தீவிரமாக எதிர்த்தீர்கள் எனவும், பொது நிதிக்குழு ஒன்றை நியமிப்பதை நீங்கள்தான் விரும்பவில்லை என்றும் உறுப்பினர்கள் மிகக்கடுமையாகச் சாடுகின்றனர்.

(தாங்கள் கூறிய விதி மூன்று: புறநிலை மெய்மை அல்லது Objectivity யும், விதி ஐந்து: வெளிப்படைத்தன்மை அல்லது Openness உம் இதில் எங்கே?)

நல்லாட்சிக்கான தத்துவம்: மூன்று

தாங்களும் வடமாகாணசபையின் அமைச்சர்களும், சில வேளைகளில் அந்த அமைச்சுகளின் செயலாளர்களும் மட்டுமே கூடிப்பேசும் அமைச்சரவைக்கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றியோ, அந்த முடிவுகளின் பிரகாரம் அமைச்சர்கள் மாகாணத்தில் முன்னெடுக்கும் பணிகள், வேலைத்திட்டங்கள் பற்றியோ, சபை உறுப்பினர்களாகிய தங்களுக்கு எதுவுமே தெரியாது என்றும் உறுப்பினர்கள் குற்றமும் வருத்தமும் கூறுகின்றனர்.

(தாங்கள் கூறிய விதி ஐந்து: வெளிப்படைத்தன்மை அல்லது Openness இதில் எங்கே?)

நல்லாட்சிக்கான தத்துவம்: நான்கு

தங்களிடமும் அமைச்சர்களிடமும் “இயந்திரக் கோளாறில்லாமல் குளிரூட்டி (AC) வசதியுடன் இயங்கு நிலையில்” தலா மும்மூன்று வாகனங்களும், பேரவை தலைவர் மற்றும் உப அவைத்தலைவருக்கு தலா ஒவ்வொரு வாகனங்களும், தற்சமயம் மொத்தமாக 17 வாகனங்கள் பாவனைக்கு உள்ள நிலையிலும்,

முதலமைச்சராகிய தங்களுக்கு 10 மில்லியன் ரூபா செலவில் “அதிநவீன” பிக்கப்பும், அமைச்சர்கள் மற்றும் பேரவைத்தலைவருக்கு தலா 7 மில்லியன் ரூபா செலவில் 5 “புதிய சொகுசு” பிக்கப்புகளும் கொள்வனவு செய்வதற்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 45 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை விட, முதலமைச்சரின் அமைச்சு அலுவலகம், விவசாய அமைச்சு அலுவலகம், கல்வி அமைச்சு அலுவலகம், போக்குவரத்து அமைச்சு அலுவலகம், சுகாதார அமைச்சு அலுவலகம், பேரவைச்செயல அலுவலகம் ஒவ்வொன்றுக்கும் 2 பிக்கப்கள் வீதம், ஒவ்வொன்றும் 7 மில்லியன் ரூபாவில் 12 பிக்கப்புக்கும் 84 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளது.

(45 மில்லியன் ரூபா + 84 மில்லியன் ரூபா = 129 மில்லியன்கள் வாகனங்கள் கொள்வனவுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.)

ஆனால் மாகாணசபை உறுப்பினர்கள் பலர், மக்கள் சேவையாற்ற வாகன வசதியில்லாமல் மிதிவண்டியிலும், உந்துருளியிலும் திரிகின்றனர். ஏனைய உறுப்பினர்களின் போக்குவரத்து பிரச்சினை மற்றும் வசதிகள், நலன்கள் பற்றி இந்த விடயத்தில் நீங்கள் எவரும் சிந்தித்ததாகவோ, கவனம் செலுத்தியதாகவோ தெரியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலானதும் முதன்மையானதுமான பிரச்சினை ஒன்று உள்ளது.

இறுதி யுத்தத்தால் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியும், முள்ளிவாய்க்கால் பகுதியும் இரசாயன அமிலங்களாலும், கந்தக வாயுக்களாலும் முழுக்கவும் நனைந்து குளித்து மூழ்கி மூச்சுத்திணறிப்போன பிரதேசங்களாகும்.

அப்பகுதிகளில் நிலத்தடி நீரில் இரசாயனம் கலந்துள்ளதால் அங்குள்ள கிணறுகளிலும், புதிதாக எங்கு கிணறு தோண்டினாலும், பழுப்பு மற்றும் வெளிர் இளம் பச்சை, மஞ்சள் நிறங்களிலான நீரே கிடைக்கிறது. அக்கம் பக்கம் எங்கு தேடி அலைந்திடினும், இந்த நீரே கிடைப்பதால் வேறு வழியின்றி அந்த நீரையே மக்கள் அறியாமையால் தினமும் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.

புத்திசுவாதீனம், மந்தநிலை, கை கால் வழங்காநிலை போன்ற பிறவிக்குறைபாடுகளுடன் ஈழதேசத்தில் நாளை பரிதாபத்துக்குரிய சந்ததிகள் பிறக்கப்போவது மட்டும் உண்மை.

“இயந்திர கோளாறில்லாமல் குளிரூட்டி (AC) வசதியுடன் இயங்கு நிலையில்” தலா மும்மூன்று வாகனங்கள் இருந்தும், “வாகனங்கள் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டத்துக்கு ஒதுக்குவோம்” என்று கூறுவதற்கும், “போரால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு ஒதுக்குவோம்” என்று கூறுவதற்கும், தங்களுக்கோ, அமைச்சர்களுக்கோ, பேரவைத்தலைவருக்கோ கடுகளவு தானும் மனம் ஒப்பவில்லை.

(தாங்கள் கூறிய விதி ஒன்று: சுயநலமற்ற தன்மை ஆங்கிலத்தில் Selflessness உம், விதி ஆறு: உண்மையுடன் நடக்குந்தன்மை அல்லது Honesty யும், விதி ஏழு: எடுத்துக்காட்டாக வாழ்தல் அல்லது Leadership உம் இதில் எங்கே?)

நல்லாட்சிக்கான தத்துவம்: ஐந்து

வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கான உலர் உணவு பெறுகை கேள்வி கோரல்களில் இடம்பெற்றுள்ள மோசடிகளையும் முறைகேடுகளையும், முறைப்பாட்டாளர் ஒருவர் தனது தற்காலிக வதிவிட முகவரியுடன் பெயர் மற்றும் கையொப்பமிட்டு உறுதியான ஆதாரங்களுடன் பல கடிதங்கள் மூலம், தங்களுக்கும் ஊடகங்களுக்கும் பகிரங்கமாக வெளிப்படுத்திய பின்னரும் கூட,

குறைந்தபட்சம் அச்சம்பவம் உண்மையா? இல்லையா? என்று விசாரிப்பது தொடர்பில் நீங்கள் சிறு துளி அளவு தானும் கடமையுணர்வை வெளிப்படுத்தியிருக்கவில்லை. குறிப்பிட்ட முறைப்பாட்டாளருக்கு ஒரு பதில் கடிதம் தானும் எழுதவில்லை.

குறித்த உலர் உணவு பெறுகை கேள்வி கோரல்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் முறைகேடுகள் சம்பந்தமாக விசாரணை கோரும் பிரேரணை ஒன்றை, சபை உறுப்பினர் ஒருவர் முன்மொழிவதற்கு அனுமதி கோரிய போது, அப்பிரேரணையை கொண்டு வர விடாமல் தடுப்பதில் மிகவும் சிரத்தையோடு செயல்பட்டதோடு, “ஊடகங்கள் என்ன வேணுமெண்டாலும் எழுதி விட்டுப்போகட்டும். அதுபற்றி நமக்கு கவலையில்லை.” என்று தாங்கள் அதிகாரச்செருக்கோடும், பொறுப்பற்றத்தனமாகவும் பதில் கூறியிருந்தீர்கள்.

(தாங்கள் கூறிய விதி நான்கு: பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு Accountability யும், விதி ஐந்து: வெளிப்படைத்தன்மை அல்லது Openness உம், விதி ஆறு: உண்மையுடன் நடக்குந்தன்மை அல்லது Honesty யும் இதில் எங்கே?)

நல்லாட்சிக்கான தத்துவம்: ஆறு

இனி வரும் காலங்களில் தங்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறும் சந்திப்புகள் தொடர்பில், செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை என்றும், செய்தி சேகரிப்பதற்காக வரும் ஊடகவியலாளர்களின் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டும், பத்திரிகையாளர்களுக்கு இருக்கைகள் மற்றும் பிற வசதிகளை செய்து கொடுப்பதற்கு அங்கு இடவசதி போதாமல் இருப்பதாலேயே இந்த முடிவு என்றும் கடந்த 28.05.2014 அன்று அறிவித்திருந்தீர்கள்.

இத்தனைக்கும் அந்த இல்லத்துக்கு வாடகைப் பணமாக, மூன்றரை லட்சம் ரூபாய் மாதாந்தம் செலுத்தப்படுகின்றது. ஏறத்தாழ 20 முதல் 30 நபர்களை சந்தித்து பேசுவதற்கு கூட, அக்கட்டத்துக்குள் இடவசதி இல்லை என்றால், பின்னர் அக்கட்டடத்துக்கு அவ்வளவு தொகை வாடகைப்பணம் செலுத்துவதில் என்ன பலன் உண்டு?

தங்களது அண்மைக்கால நடத்தைகள் பற்றி, ஊடகங்களில் வெளிவரும் உண்மைச்செய்திகள் தொடர்பில் கடும் விசனமும், அதிருப்தியும் அடைந்திருந்த நீங்கள், ஊடகவியலாளர்கள் மீதுள்ள வெறுப்பை வெளிப்படையாக காட்ட முடியாமல், சூசகமாக இடவசதிப்பிரச்சினையை காரணம் காட்டி, எதிர்காலத்தில் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறும் எந்தக்கூட்டத்துக்கும் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படமாட்டார்கள் என்று அறிவித்து விட்டீர்கள். உங்களை “வடக்கின் முதலமைச்சர்” எனும் பதவியில் அமர வைத்து, அழகு பார்த்ததில் உயரிய பெரும் பங்கு ஊடகங்களுக்கே உண்டு என்பதையும் மறந்து விட்டீர்கள்.

ஓர் அரசியல்வாதி சொல்லொன்று செயல் இன்னொன்று விழைகிறாரா? அகம் ஒன்று புறம் ஒன்று பேசுகிறாரா? என்று அவரது நடத்தைகள் தொடர்பில் கண்காணித்து அறிக்கையிட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய தார்மீக கடமை ஊடகங்களுக்கு உண்டு. ஊடகவியலாளர்களின் இந்தத் தலையாய கடமை தொடர்பில் நீங்கள் சலிப்பும் வெறுப்போடும் இருக்கிறீர்கள்.

(தாங்கள் கூறிய விதி ஐந்து: வெளிப்படைத்தன்மை அல்லது Openness உம், விதி ஆறு: உண்மையுடன் நடக்குந்தன்மை அல்லது Honesty யும், விதி ஏழு: எடுத்துக்காட்டாக வாழ்தல் அல்லது Leadership உம் இதில் எங்கே?)

நல்லாட்சிக்கான தத்துவம்: ஏழு

முதலமைச்சரின் அமைச்சு அலுவலகத்தில் (முதலமைச்சர் அலுவலகம்) தங்களுக்கென்று ஆலோசகர் (Consultant), தனிப்பட்ட செயலாளர் (Personal Secretary), மொழி பெயர்ப்பாளர் (Translator), அமைச்சின் செயலாளர் (Ministry Secretary), ஊடக ஒருங்கிணைப்பாளர் (Media Coordinator), முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant), அலுவலக உதவியாளர்கள் (Office Assistants), அலுவலகப்பணியாளர்கள் (Office Staffs), வரவேற்பாளர் (Receptionist), தட்டெழுத்தாளர் (Types), சாரதி (Driver), சமையலாளர் (Cook), உபசரிப்பாளர் (Server), தனிப்பட்ட பாதுகாவலர்கள் (Personal Securities), காவலாளி (Watcher), வேலையாட்கள் (Helpers) என்று ஏறக்குறைய 20 வரையான ஊழியர்களை மாகாணசபை வேதனத்துக்கு தாங்கள் பணிக்கு அமர்த்தலாம். அமர்த்தியும் உள்ளீர்கள்.

சாதாரண காவலாளி, வேலையாளிலிருந்து தனிப்பட்ட செயலாளர் வரை எல்லோருமே தென் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளவர்களே! அன்றி, வடமாகாணத்திலே யுத்த சூழலுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டுப்போன எவருக்கும் தாங்கள் வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை.

இதில் உள்ள வியப்பும் வேடிக்கையும் என்னவென்றால் தங்கள் அமைச்சு அலுவலகத்தில் வேலை வாய்ப்புகளை வழங்க, வட மாகாணத்தில் உங்களுக்கு எவர் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் உங்களை நம்பி வட மாகாணத்திலிருந்து ஒரு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் எண்ணிக்கையிலான மக்கள் வாக்களித்துள்ளனர்.

இவர்களில் போரால் விதவையான பெண்கள், அபலைப்பெண்கள், கைம்பெண்கள், காணாமல் போன தமது உறவுகளை தேடி அலைபவர்கள், போரால் அவையங்களை இழந்தவர்கள், தாய் தந்தையை இழந்தவர்கள், வேலையற்ற பட்டதாரிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள், பசி பட்டினி வறுமைக்குள் வாழ்பவர்கள், ஏழை எளியவர்கள், முன்னாள் போராளிகள் என்று பலரும் அடங்குகின்றனர்.

ஆனால் தாங்களோ உங்கள் நெருங்கிய சொந்தங்களுக்கே வேலைவாய்ப்புகளை அமைச்சு அலுவலகத்தில் வழங்கியுள்ளீர்கள்.

தங்களின் பிரத்தியேக செயலாளர் மன்மதராசா உங்கள் மனைவியின் சகோதரன் (தம்பி) ஆவார். தனிப்பட்ட ஆலோசகர் நிமலன் கார்த்திகேயனும், சுந்தரலிங்கம் என்பவரும் நெருங்கிய உறவினர்களே.

தனிப்பட்ட ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் அரசுக்கும், உங்களுக்கும் மிகவும் வேண்டப்பட்டவரே!

(தாங்கள் கூறிய பொது வாழ்க்கையில் மற்றும் நிர்வாகத்தில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு விதிகளில், இவற்றை எல்லாம் எந்த விதிக்குள் சேர்ப்பது? என்று தெரியாமல் குழம்பித்தவிப்பதால், தாங்களே கூறி விடுங்கள் ஐயா!)

இவற்றைப்போல இன்னும் பல “நல்லாட்சிக்கான தத்துவங்கள்” நிறையவே உண்டு. அவற்றையெல்லாம் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்ளுகிறேன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே!