செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இந்தியாவின் பொருளாதாரம் 2014இல் எப்படியிருக்கும்?

Posted: 2014-06-19 02:43:33
இந்தியாவின் பொருளாதாரம் 2014இல் எப்படியிருக்கும்?

இந்தியாவின் பொருளாதாரம் 2014இல் எப்படியிருக்கும்?

இந்தியாவில் கடந்த நிதியாண்டு முடிந்து புதிய நிதியாண்டு தொடங்கியது. இதையடுத்து நடப்பு ஜூன் மாதம் முழுவதும் கடந்த ஆண்டில் இந்திய பங்குச்சந்தை, பணச்சந்தை, தொழில் உற்பத்தி, பணவீக்கம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ஆகியன குறித்த அலசல் கட்டுரைகளை, பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள் வெளியிட்டன. ஒன்று, சென்செக்ஸ் புள்ளிகள் வரலாறு காணா வகையில் 23551 புள்ளிகளைத் தொட்டு விட்டன.

நிஃப்டி உள்ளிட்ட பிற பங்குச் சந்தைப் புள்ளிகளும் அதேபோன்ற உச்சத்தைத் தொட்டன. இரண்டாவது, தொழில் உற்பத்திக் குறியீடு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட, இந்த ஆண்டு மார்ச் மாதம் 0.5 சதவீதம் சரிவினைச் சந்தித்தது. மூலதனப் பண்டங்களின் (எந்திரங்களை உற்பத்தி செய்யும் கன ரக எந்திரங்கள் போன்றவற்றின்) உற்பத்தி 12.5 என்ற அளவில் கடுமையான வீழ்ச்சியினைச் சந்தித்துள்ளது. இவற்றைத் தொகுத்துச் சொல்வதெனில், கடந்த ஆண்டு 1.1 சதவீத வளர்ச்சியினைச் சந்தித்த தொழில் உற்பத்தி, இந்த ஆண்டில், எதிர்மறையாக 0.1 சதவீதச் சரிவினைச் சந்தித்துள்ளது. மூன்றாவதாக, மார்ச் மாதம் 8.31 சதவீதமாக இருந்த சில்லரை விலை அடிப்படையிலான பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8.59 ஆக உயர்ந்துள்ளது.

நகை முரண்

விலைப் புள்ளிகளுடன் இணைக்கப்பட்ட ஊதியம் பெறுவோர் மிகக் குறைவாக இருக்கும் இந்நாட்டில், மக்களின் வாங்கும் சக்திதொடர்ந்து அரிக்கப்பட்டு வரும் இன்றையநிலையில், பணவீக்கம், தொழில் உற்பத்தி வீழ்ச்சி என்ற இரண்டு அம்சங்களும் ஒன்றிணைந்து ஒரு ‘முதல் தரமான பொருளாதார நெருக்கடி’யினை உருவாக்கியிருக்கின்றன. இதை வேறு வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. ஆனால், இத்தகையதொரு கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும், பங்குச்சந்தை வரலாறு காணா உச்சங்களைத் தொட்டுவருகிறது. பங்குச்சந்தையின் இந்தத் திடீர் வளர்ச்சி நெருக்கடியினைத் தீர்க்க உதவுமா எனில், அதுவும் இல்லை. இது தான் இதில் வேடிக்கையே.

புரியாத புதிர்கள்

இந்த வேடிக்கையான சூழ்நிலைக்குள் புரியாத புதிர்கள் பல அடங்கியுள்ளன. பொருளாதாரத்தில் உற்பத்தி சூடேறும்போது பணவீக்கம் அதிகமாகும் என்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்று உற்பத்தி தேக்கமடைந்திருக்கிற போது, இத்தகைய கடுமையான பணவீக்கம் ஏன்?

இந்தியப் பொருளாதார வரலாற்றில், பண்டங்களின் விலை உயர்வும், பங்குகளின் விலை உயர்வும் ஒன்றிணைந்து போனதில்லை. அவை இரண்டுமே எதிர்விகிதத்தில் தான் கடந்த காலங்களில் இருந்து வந்திருக்கின்றன. அப்படியெனில், இன்று பணவீக்கம் கடுமையாக இருக்கும் நிலையில், பண்டங்களின் விலையும், பங்குகளின்விலையும் எப்படி ஒரு சேர உயர்கின்றன?

முதலீட்டாளர்களுக்கு, உற்பத்தியில் முதலீடு செய்யும் ஆர்வம் குறைந்திருக்கும் நிலையில், பங்குச் சந்தை மட்டும் எப்படி அமோக வளர்ச்சி அடைகிறது?

பங்குச்சந்தையின் அண்மைய வாரங்களின் வளர்ச்சி தவிர, கடந்த சில மாதங்களாகவே அது தொடர்ந்து வளர்ச்சியடைந்தே வந்திருக்கிறது. அப்படியானால், இந்த தொடர்ந்த வளர்ச்சி தொழில் உற்பத்திக்கு ஏன் உதவவில்லை? இந்தக் கடைசிக் கேள்விக்கு முதலில் விடையளித்து, பின்னர் விளக்கத்தினைத் தொடர்வதே பொருத்தமாக இருக்கும்.

சாத்தியமான இரண்டு வழிகள்!

உற்பத்தி ஆதாரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாத (இன்றைக்கு இந்தியாவில் நிலவுகின்ற சூழ்நிலை போன்ற) நிலையில், பங்குசந்தையின் திடீர் வளர்ச்சி,பொருளாதாரத்தில் ஒட்டு மொத்த கிராக்கியினையும், அதன் பயனாக உற்பத்தியினையும் சாத்தியமான இரண்டு வழிகளில் தூண்டமுடியும். அவை ஒன்றுக்கொன்று தொடர்பு டையவை, எதிர்வினை புரிபவை. பங்குச் சந்தையின் திடீர் வளர்ச்சி, கடன்கள் மற்றும் பங்காதாயங்கள்(ESuity) வடிவத்தில், நீண்ட கால முதலீட்டிற்கான நிதியினை மலிவாக்கி முதலீட்டாளர்களின் கைகளில் கிடைக்கச் செய்கிறது. அதாவது, இந்த வழியில் முதலீட்டுச் செலவுகள் அதிகரிக்கின்றன.

இது ஒரு வழி எனில், இரண்டாவது வழியில், பங்குகளின் விலை உயர்வதால் பங்கு உடைமையாளர்களின் செல்வ மதிப்பு அதிகரிக்கிறது. அதன் பயனாக, அவர்கள் மேலும் அதிகமாகச் செலவழிக்க முடியும். இது நுகர்வுச் செலவுகளை அதிகரிக்கிறது. இவ்வாறு முதலீட்டுச் செலவுகளும், நுகர்வுச் செலவுகளும் அதிகரிப்பதன் காரணமாக ஒட்டுமொத்தக் கிராக்கி உயர்கிறது. அது உற்பத்தியினைத் தூண்டுகிறது. தேக்கமடைந்து நிற்கும் பொருளாதாரத்தின் மீது பங்குச் சந்தையின் திடீர் வளர்ச்சி இத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்று பொதுவாக நம்பப் படுகிறது. ஆனால், அவைஎல்லாம் அவ்வளவு எளிதாக நடந்து விடுவதில்லை.ஏற்கனவே கிராக்கி மிகச் சுருங்கிப் போய், தேக்கமடைந்து நிற்கும் பொருளாதாரத்தில் முதலீட்டு நிதியினை மலிவாக்கி விட்டால் மட்டும் உற்பத்தியினை எப்படி தொடங்க முடியும்? எந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் உற்பத்தி தொடங்கும்? எனவே இதில் முதல் வழி இவ்வாறு அடைபட்டுப் போகிறது.

பங்கு உடைமைகள் பரந்துபட்டவை அல்ல! இரண்டாவது வழியிலும் பிரச்சனை உண்டு. பங்கு உடைமையாளர்களின் செல்வ மதிப்பு உயர்வு கிராக்கியினை அதிகரிக்க உதவ முடியும் என்றாலும், அது உள்நாட்டு உற்பத்தியினை தூண்டும் அளவிற்கான கிராக்கியாக இல்லை. ஏனெனில், அமெரிக்கா மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போன்று, இந்தியாவில் பங்கு உடைமைகள் பரந்துபட்ட மக்கள் கையில் இல்லை. இந்தியாவில் தாராளமயத் தொடக்க காலத்தில் பங்குச்சந்தையினை நோக்கி ஆர்வத்துடன் ஓடிய நடுத்தர வர்க்கத்தினர் பலர், வெகு விரைவிலேயே திரும்பி விட்டனர். எனவே தான், பங்குச் சந்தை வளர்ச்சியின் மூலம் அமெரிக்காவில் ஏற்படும் தற்காலிகமான சாதகமான நிலைமைகள் கூட இங்கு உருவாகும் சாத்தியங்கள் இல்லை. பங்கு உடைமைகள் கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், ஆதிக்க நிலையில் அந்நிய நிதி முதலீட்டாளர்கள் என்று சுருங்கிப் போய் நிற்கிறது.

தவிர இதில் பயனடையும் உயர் தட்டு வர்க்கம், சாமானிய மக்களைப் போன்று உள்நாட்டு உற்பத்திப் பண்டங்களுக்கான கிராக்கியினை உருவாக்குவதில்லை. ஆடம்பர இறக்குமதிப் பண்டங்களுக்கு அவர்கள் உருவாக்கும் கிராக்கி நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினை அதிகரிக்க மட்டுமே உதவுகிறது. எனவே, ஒட்டுமொத்தக் கிராக்கி உயர்விற்கான சாத்தியமும் இதில் அடிபட்டுப் போகிறது. எனவே, பங்குச் சந்தை வளர்ச்சி, ஒட்டுமொத்தக் கிராக்கி, உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைத் தூண்டுவதற்கு உதவும் எனக் கூறுவது நம் நாட்டின் பொருளாதார எதார்த்தத்தினை முற்றிலும் மறுப்பதாகும்.

சக வாழ்வு சாத்தியமே!

எனினும், பங்குச் சந்தை திடீர் வளர்ச்சி அந்நிய நிதியினை மேலும் கவர்ந்திழுப்பதற்குக் கண்டிப்பாக உதவும். அது பங்குச் சந்தையை மேலும் வலுப்படுத்துவதுடன், தனது போக்கில் குமிழிகளையும் உருவாக்கி விடும். ஆனால், பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான உண்மையான கிராக்கியினை உருவாக்குவதற்கு இது கிஞ்சித்தும் உதவாது. இருப்பினும், தொழில் மந்த நிலைமையுடன் பங்குச் சந்தை வளர்ச்சி கைகோர்ப்பது சாத்தியமானதே. பண்டங்களின் கடுமையான விலையேற்றத்தின் பின்னணியில் நிலவும் பணவீக்கச் சூழ்நிலையுடனும் கூட பங்குச் சந்தை வளர்ச்சி அடைய முடியும். இந்தியப் பொருளாதார வரலாற்றில், பண்டங்களின் விலை உயர்வு, பங்குகளின் விலை உயர்வு இரண்டுமே எதிர்விகிதத்தில் தான் இருந்து வந்திருக்கின்றன என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.

ஆனால் இந்த நிலைமை பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த (1990களுக்கு முந்தைய) காலத்தின் (dirigiste regime) நிலைமையாகும். அதாவது, அந்தக் காலத்தில், சில பருவங்களில் சில காரணங்களால் பண்டச் சந்தை கவர்ச்சிகரமாக மாறும். அந்த நேரங்களில் முதலீடுகள் பங்குச்சந்தையிலிருந்து பண்டச் சந்தை நோக்கி நகரும். நிலைமை மாறும் போது அவை மீண்டும் பங்குச் சந்தை நோக்கித் திரும்பும். அதை மேலும் விளக்குவது என்றால், நிலைமைகளுக்குத் தகுந்தாற்போல் பங்குச் சந்தை பண்டச் சந்தை என இடம் மாறிக் கொண்டிருந்த ஊக நிதி ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருந்து வந்தது. உள்நாட்டு முதலீடுகளை மட்டுமே அதிகம் நம்பியிருந்த சூழ்நிலையில் அது அப்படித்தான் இருக்கமுடிந்தது. உலகமயச் சூழலில் அந்நிய நிதிமுதலீட்டாளர்கள் உள்ளே நுழைந்ததை யடுத்து இந்த நிலைமை மாறி விட்டது. இப்போது நிதி பெருமளவில் குவிந்து விட்டது. ஊக நடவடிக்கைகள் சாத்தியமான ஒவ்வொரு துறையிலும் விலை உயர்விற்கு இட்டுச் சென்று வருகின்றன.

குமிழியாகும் உற்பத்தி

இதையொட்டி மற்றொரு வாதமும் முன்னுக்கு வருகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் போது அது நாணயத்தின் அந்நியச் செலாவணி மதிப்பு வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும். அதன் விளைவாக, நாடுகளுக்கிடையிலான பணப் பட்டுவாடா நெருக்கடியும் (Balance of payments) ஏற்படும். இந்த நிலையில், அந்நிய மூலதனம் அந்நாட்டிலிருந்து ஒதுங்கியே நிற்கும். இது பங்குச் சந்தையினைப் பாதிக்கும். ஆனால் இன்று இந்த வாதமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறது. செலாவணி மதிப்பு குறைவு குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவலைப் பட்டாலும் கூட, பொருளாதாரத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஊக நடவடிக்கைகளை வைத்து, நிலைமையினைச் சமாளித்துக் கொள்ள முடியும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பணவீக்கம் உயர்ந்து வரும் போதே செலாவணி மதிப்பு அப்படியே மாறாமல் இருக்கக் கூடும். ஏன், சில சமயம் அந்நிய மூலதன வரவின் காரணமாக, அது உயரவும் கூடும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். “ஊக நடவடிக்கை என்ற கட்டுக்கடங்கா நீர்ச்சுழலின் மீது உற்பத்தி நடவடிக்கை (அதாவது, அடிப்படை விதிகள் பிரபாத் பட்னாயக்) ஒரு குமிழியாக மாறி விடுகிறது” என்று அன்று கீன்ஸ் கூறினார். அவருடைய அந்த தர்க்க நியாயத்தின் அடிப்படையில் தான், இன்று பங்குச் சந்தை பணவீக்கத்துடனும் கூட கைகோர்த்துக் கொள்ள முடிகிறது.

உற்பத்தித் தேக்கத்தினை உடைக்க..

வட்டி விகிதங்களைக் குறைப்பது, அரசுச் செலவினங்களை அதிகரிப்பது, உழைக்கும் மக்களுக்குச் சாதகமாக வருமான மறு பகிர்மானம் செய்வது என, உற்பத்தித் தேக்கத்தினை உடைப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. வட்டி விகிதங்களைக் குறைத்தால், அது அந்நிய நிதி முதலீட்டாளர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து விடும். அரசுச் செலவினங்களை அதிகரித்து விட்டு அதைச் சரிக்கட்ட செல்வந்தர்கள் மீது அதிக வரி விதிக்காவிட்டால், அது நிதிப் பற்றாக்குறையினை அதிகரித்து விடும். இதனை நிதி மூலதனம் அனுமதிக்காது. நிதிப் பற்றாக்குறையினைத் தவிர்ப்பதற்காக, செல்வந்தர்கள் மீது அதிகம் வரி விதித்தால், அதனையும் நிதி மூலதனம் விரும்புவதில்லை. செல்வந்தர் களை விடுத்து உழைக்கும் மக்கள் மீது வரிவிதித்தால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, பொருளாதாரத்தில் இன்று கொஞ்ச நஞ்சம் இருக்கும் கிராக்கியும் சுருங்கி விடும். உழைக்கும் மக்களுக்குச் சாதகமாக வருமான மறுபகிர்மானம் செய்தால், அதனையும் நிதி மூலதனம் ஏற்காது. இவை அனைத்துமே பங்குச் சந்தையின் வளர்ச்சியினைப் பாதிக்கும் என்பதால் நிதி மூலதனம் இவற்றில் எதையும் அனுமதிப்பதில்லை.

இன்று இந்தியப்பொருளாதாரத்தில் நிலவும் பணவீக்கம்மிகையான கிராக்கியினால் உருவானது அல்ல.பொது விநியோக முறையினுடைய நோக்கங்களையும் எல்லைகளையும் விரிவு படுத்துவதன் மூலமே, அதைத்தீர்க்க முடியும். இன்று இந்தியாவில் உணவுதானியங்களின் விலைஉயர்ந்து கொண்டே வருகின்றன. தனது பொறுப்பில் தேவைக்கு அதிகமான தானிய இருப்பினை வைத்திருக்கும் இந்திய அரசாங்கம், அதை பொது விநியோக முறையின்மூலம் மக்களுக்கு விநியோகம் செய்ய மறுத்து,பெருமளவில் ஏற்றுமதியும் செய்து வருகிறது. மக்களுக்கு மானிய விலையில் கொடுத்தால் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து விடும் என்பதில் எள்ளளவும் உண்மை இல்லை.

நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பினை நிதி மூலதனம் விரும்புவதில்லை என்பதும், இதில் பங்குச்சந்தையின் வளர்ச்சியினைப் பாதுகாப்பது என்ற நோக்கில் மக்களின் நலன்கள் காவு கொடுக்கப் படுகின்றன என்பதுமே உண்மை. ஒரு புறத்தில், உண்மையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பங்குச் சந்தை அசுர வளர்ச்சி அடைய முடிகிறது.

நன்றி: 'பி.டி.ஐ'