செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

முறைகேடுகள் இடிந்து விழுமா?

Posted: 2014-07-01 11:53:31
முறைகேடுகள் இடிந்து விழுமா?

முறைகேடுகள் இடிந்து விழுமா?

சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான மவுலிவாக்கத்தில் பதினோரு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை பதினெட்டு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னமும் அதிகமாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து நெஞ்சை பதறச் செய்வதாக மட்டுமின்றி தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த ஏராளமான கேள்விகளை எழுப்புவதாகவும் உள்ளது. கோரமான விபத்துகள் நடக்கும்போது காட்சி ஊடகங்கள் அதுகுறித்து பரபரப்பாக செய்தி வெளியிடுவதும், அரசு ஏராளமான விதிகளையும் கெடுபிடிகளையும் அறிவிப்பதும், பின்னர் எல்லாம் மறந்துபோய் வழக்கமான பாணியிலேயே பணிகள் நடப்பதும் இந்தியாவில் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகி பலியானபோது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டதோடு, பல்வேறு விதி முறைகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் இன்னமும் கூட நெரிசல் மிகுந்த கட்டடங்களில் தனியார் பள்ளிக்கூடங்கள் இயங்குவது தொடர்ந்துதான் வருகிறது.

அதேபோல இப்போது அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமாகி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஏழைத் தொழிலாளர்கள் அநியாயமாக உயிரிழந்துள்ள சூழலில் கட்டடங்களுக்கு அரசு அனுமதி முறையாக தரப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மீட்புப் பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் அடுக்குமாடிக்கட்டிடத்திற்கு மாநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) திட்ட அனுமதி வழங்கியதில் எந்த குறைபாடும் இல்லையென்றும் ஆனால் கட்டுமான நிறுவனம் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லையென்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விசாரணை என்று வந்துவிட்டால், அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதா என்பதையும் சேர்த்து ஆய்வு செய்வதே பொருத்தமாக இருக்கும். ஆனால், முதல்வரே சி.எம்.டி.ஏ. நிறுவனத்திற்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்ட நிலையில் விசாரணை அந்தக் கோணத்தில் நடைபெறுமா என்பது ஐயப்பாடே. கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதில் பெருமளவு லஞ்சம் தலைவிரித்தாடுவது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. பணம் பாதாளம்வரை மட்டுமல்ல, பலஅடுக்கு மாடிவரை ஏறும் என்பதே நடைமுறையாகவுள்ளது.

கட்டுமான நிறுவனம் தங்களிடம் எந்த குறையும் இல்லையென்றும் இடி விழுந்ததால்தான்விபத்து நடந்தது என்றும் கூறியுள்ளது. ஒரு இடியை கூட தாக்குபிடிக்கமுடியாத கட்டடத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் எப்படி பாதுகாப்பாக குடியிருக்க முடியும் என்று தெரியவில்லை. கட்டடம் கட்டப்பட்ட இடம் மண்ணின் தன்மை உள்ளிட்ட பல்வேறு விதிகள் மீறப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கட்டுமான நிறுவனத்தின் மீது மட்டுமல்ல, தவறுக்கு துணைபோன அதிகாரிகளையும் கண்டிக்கும் வகையில் பதவியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணைக் குழு அமைக்கப்படுவதும் எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்கான விதிகள் உருவாக்கப்படுவதும் அவசியம் ஆகும்.