செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

40 கோடி இந்தியர்களின் கதி?

Posted: 2014-07-07 04:11:12 | Last Updated: 2014-07-07 04:11:39
40 கோடி இந்தியர்களின் கதி?

40 கோடி இந்தியர்களின் கதி?

பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபட்சம் செய்திகளிலாவது இடம்பிடித்து விடுகின்றன. ஆனால் இயற்கைக் கெதிரான குற்றங்கள் பெரும்பாலும் செய்திகளில் கூட இடம் பிடிக்க முடிவதில்லை. “சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் போராடிக் கொண்டிருக்கும் அரசுசாரா அமைப்புகளில் அந்நிய நிதியும் சதியும் ஒளிந்திருக்கின்றன. அவை இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவை” என்று இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. இந்தத் தருணத்தில் இயற்கைக்கெதிரான குற்றங்கள் இப்போதிருப்பதைவிட பரவலாக நடக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

நகைமுரண்

வரம்பின்றி அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை உள்ளே அனுமதிக்கும் இந்திய அரசு, அந்நியநிதி பற்றிக் கூப்பாடு போடுவது நகைப்பிற்குரிய முரண்பாடு. மனிதர்களால் கட்டுப்படுத்தப்படாத வனப் பகுதிகளையும் இயற்கை தந்த அழகுப் பிரதேசங்களையும் அழித்துவிட்டு, கட்டடங்களும் சாலைகளும் மட்டுமே உடைய முடிவேயில்லாத நிலப்பகுதியாக இந்தியச் சூழலை மாற்றமுனையும் வளர்ச்சி நாயகர்களைத் தட்டிக்கேட்கப் போவது யார்? இயற்கையின் அற்புதக் கொடைதான் மரங்கள். கட்டடங்களும் சாலைகளும் அவசியம்தான். அதேபோல், மரங்களும் அவசியம்தான். மரம் மண்ணைப் பாதுகாக்கிறது; தண்ணீரைப் புதுப்பிக்கிறது; காற்றைச் சுத்தப்படுத்தி மனிதர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கிறது.

ஆனால் மனிதர்கள் அழித்ததுபோக எஞ்சியிருக்கும் காடுகளும் இன்று ஆபத்துக்குள்ளாகி இருக்கின்றன. அணைகளைக் கட்டும் போதோ, இருக்கிற அணைகளின் உயரத்தை அதிகரிக்கும் போதோ, சாலைகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும்போதோ காடுகள் ஈவிரக்கமின்றி அழிக்கப்படுகின்றன.

நவீன இந்தியாவை நிர்மாணிக்கத் தேவையான இயற்கை வளங்களைத் தோண்டியெடுக்க சுரங்கங்கள் வெட்டப்பட வேண்டும் எனும் போது காடுகள் இரண்டாம்பட்சமாகி விடுகின்றன. புதிய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சர் 'வளர்ச்சி'த் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மறுப்பு என்ற பெயரில் இருந்து வரும் 'தடைகளை' அகற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வனப்பகுதி பாதுகாக்கப்பட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அதன் தன்மை, அங்கிருந்து உற்பத்தியாகும் பொருள், அதன் உயிரியல் பன்மை, அதன் நீரியல், சமூகவியல், அழகியல், பொருளாதார மதிப்பு போன்ற பல்வேறு அலகுகள் இருக்கின்றன.

40 கோடி இந்தியர்கள்!

இந்த அலகுகளை மாற்றியமைக்க அமைச்சர் விரும்புகிறார். காரணம்? இந்த அலகுகளுக்கெதிராக அமைய இருக்கும் திட்டங்களுக்கு அவசரஅவசரமாக பச்சைக்கொடி காட்டவேண்டும் என்பதுதான். காடுகள் என்பது மரங்களுக்கானவை மட்டுமல்ல, மனிதர்களுக் கானவையும்தான். 173,000 கிராமங்களில் 35லிருந்து 40 கோடி இந்திய மக்கள் வரை வனப்பகுதிகளில் வாழ்கின்றனர். காடுகள் அழிக்கப்படுகின்றன என்றால் இந்த மக்களது வாழ்வாதாரமும் அழிக்கப்படுகிறது என்று பொருள். சூழலிலாளர்களின் கோரிக்கையை ஏற்று முந்தைய அரசு வனப்பகுதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வனஉரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. வளர்ச்சி என்ற பெயரில் இந்தச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டால், காடுகள் முற்றிலுமாக அழிக்கப்படும். காட்டுயிர்கள், இயற்கை வளம், வனப்பகுதி மக்கள் ஆகியோரின் உரிமைகள் பறிபோகும். இப்படி எதிர்காலம் மிகமோசமான அளவில் பாதிக்கப்பட இருப்பதை சூழலியலாளர்கள் அனுமதிக்கக் கூடாது.

(நன்றி : ஜூன் 22 ஆங்கில இந்து இதழில் கல்பனா ஷர்மா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)