செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இந்திய பட்ஜெட் எப்படியிருக்கும்?

Posted: 2014-07-09 06:34:30 | Last Updated: 2014-07-09 06:41:01
இந்திய பட்ஜெட் எப்படியிருக்கும்?

இந்திய பட்ஜெட் எப்படியிருக்கும்?

நாளை வியாழக்கிழமை (ஜூலை 10) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சரியான சமூகக் கொள்கைகளின் தேவையினை வலியுறுத்துகிறார் பேராசிரியர் ஜான் திரேஸ். இன்றைய ஊடகங்கள் பல பிரமைகளை உருவாக்கி, சரியான சமூகக் கொள்கைகளின் தேவையினை மறைத்து வருகின்றன. ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ள அந்த பிரமைகளும், தவறான கணிப்புகளும் என்ன?

1. மிகப்பெரும் அளவில் செலவு செய்து, குழந்தைகளைச் சீராட்டி வளர்ப்பது போன்று மக்களைச் சீராட்டுகின்ற அரசாக இந்திய அரசு மாறிவரும் அபாயம் உள்ளது.

2. அத்தகைய சலுகைகள் அனைத்தும் வீணானவை. அவற்றால் எந்தப் பயனும் இல்லை. அதில் பெருமளவு பயன்கள் சேர வேண்டியவர்களுக்குச் சேருவதுமில்லை.

3. இந்த ஆடம்பரத் திட்டங்கள் அனைத்தும் பழையகால நேரு பாணி சோஷலிஸ்டுகள் மற்றும் ‘ஜோல்னாப்பை’ ஆசாமிகள் (கம்யூனிஸ்டுகள்) போன்ற கும்பலின் உருவாக்கங்களே. இவர்கள்தான் கடந்த பத்தாண்டுகளாக ஐ.மு.கூட்டணி அரசினை இந்தப் பாதையில் அழைத்துச் சென்றவர்கள்.

4. மக்கள் இவர்களை நிராகரித்திருக்கிறார்கள். மக்கள் வளர்ச்சியையே விரும்புகிறார்கள், சலுகைகளை அல்ல.

5. பா.ஜ.க தலைமையிலான அரசு, இந்த மடமைகளை எல்லாம் புறந்தள்ளி வளர்ச்சிக்கான ஒரு புதிய பாதையை உருவாக்கும். ஊடகங்கள் இந்த அம்சங்களை மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் இவற்றிற்கு ஒரு வகையான ஏற்புத் தன்மையினை உருவாக்கி வருகின்றன.

மருத்துவம், கல்வியில்...

இந்தியாவின் சமூகச் செலவினங்கள் மிக அதிகமானவை என்று கூறுவதே நகைப்பிற்குரியது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) மதிப்பில், கல்விக்காகவும், மருத்துவ சேவைக்காகவும் இந்தியா செலவழிப்பது என்பது 4.7 சதவீதம் மட்டுமே. இது இந்தியா குறித்து உலக வங்கிக் குழுமத்தின் உலக மேம்பாட்டுக் குறியீடுகள் கூறும் உண்மை. மிக வளர்ச்சி குன்றிய தெற்கு சகாரா ஆப்பிரிக்க நாடுகள் இவற்றுக்காக செலவிடுவது 7 சதவீதம். கிழக்கு ஆசியா 7.2 சத வீதம், லத்தீன் அமெரிக்க நாடுகள் 8.5 சதவீதம், வளர்ச்சியடைந்த நாடுகள் 13.3 சதவீதம், ஏன், மிகக் குறைவான வளர்ச்சி கொண்ட நாடுகள் கூட 6.4 சதவீதம் என, இந்தியாவை விட அதிகம் செலவழிக்கின்றன.

சமூகப் பாதுகாப்பில்...

உலக வங்கிக் குறியீடுகள் சமூகப பாதுகாப்புச் செலவுகளை உள்ளடக்கியவை அல்ல. ஆசிய நாடுகளின் சமூகப் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி சில விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அந்தச் செலவிலும், ஜி.டி.பி மதிப்பில், 1.7 சதவீதம் மட்டுமே என்ற அளவில், இந்தியா பின்தங்கியே உள்ளது. ஆசியாவின் உயர் வருமான நாடுகள் சராசரி 10.2 சதவீதம் வரையில் செலவழிக் கின்றன. இதில் ஜப்பான் - 19.2 சத வீதம் என்று அதிக அளவில் செலவிடுகிறது. ஆசியாவின் குறைவான வருமான நாடுகள் சராசரி 3.4 சதவீதம், சீனா 5.4 சதவீதம் என்ற அளவில் செலவழித்து வருகின்றன. இதிலும் மிகக் குறைவாகச் செலவழிப்பதில் இந்தியாவிற்குத் தான் முதல் பரிசு.

பயனற்றவையா?

பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் வெகுமக்கள் கல்வி என்பது அத்தியாவசியத் தேவை இது. ஆழமான பொருளாதார ஆய்வின் முடிவில் வெளிவந்த ஆரோக்கியமான உண்மை. கேரளா தொடங்கி வங்கதேசம் வரையிலும், மருத்துவ சேவையின் விளைவாக, பிறப்பு இறப்பு விகிதங்களில் சாதகமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளி வருகையிலும், குழந்தைகளின் உடல் நலத்திலும் மதிய உணவுத் திட்டம் பெருமளவில் பயனளித்திருக்கிறது.

அதே போன்று முதியோர் பென்ஷன் மிகக் குறைவானதாக இருந்தபோதும், அது முதியவர்கள், கைம் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என்று பல லட்சம் பேருக்கு அவர்களது கடினமான வாழ்க்கையில் ஓரளவு ஆறுதல் அளித்து வருகிறது. பொதுவிநியோக முறை ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் பெரிதும் உதவி வருகிறது. இதில் முன்னணியில் இருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மட்டும் அல்லாது, இதில் முறையாகச் செயல்படாத பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் கூட அது உதவிகரமாகவே இருக்கிறது.

நேரு பாணி சோஷலிசமா?

இந்தத் திட்டங்களுக்கும் நேரு பாணி சோஷலிசத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஜனநாயகம் அமலில் இருக்கும் எந்த ஒரு நாட்டிலும், இயல்பாகத் தோன்றி வளரும் போக்குகளே இவை. இது போன்ற பல சமூக நல ஏற்பாடுகள் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த பல நாடுகளில் உருவாகின. அமெரிக்கா மட்டும் இதில் ஓரளவு விதிவிலக்கு. தங்களுக்கே உரிய தேவையின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் நாடுகள் சிலவற்றிலும் இத்தகைய ஏற்பாடுகள் உண்டு. அண்மைக் காலங்களில் லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஆசிய நாடுகள் என பல நாடுகள் இத்தகைய சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றன. சாமானிய மக்களின் குரல் அரசியல்ரீதியாக சற்று ஓங்கி ஒலிக்கும் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில்கூட இதை இன்று காணமுடியும்.

ஏன் இந்தக் குரல் மாற்றம்?

மானியத் திட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுவோம் என்று பாஜக பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது? மிக வலுவான உணவுப் பாதுகாப்புச் சட்டம் வேண்டும் என்று கோரியவர்கள் தானே மோடியும், அருண் ஜெட்லியும்? சத்தீஸ்கர் மாநிலத்தில், பொது விநியோக முறையினை வலுப்படுத்தியது பாஜக மாநில அரசு தானே? ஆனால் இப்போது குரல் மாறி ஒலிக்கிறது. ஊரக வேலை வாய்ப்பு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களை இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக ரத்து செய்வது என அரசின் ஆலோசகர்கள் அதீத ஆர்வத்துடன் பேசத் தொடங்கி விட்டனர். இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் தேவையில்லை என பிரதமருக்குக் எழுதியுள்ளார்.

பங்கு கோரும் கார்ப்பரேட்!

கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூகச் செலவினங்களை வெறுக்கின்றன. மக்களுக்குக் கொடுத்தால் அது ‘சலுகை’. தங்களுக்குக் கிடைத்தால் அது ‘ஊக்குவிப்பு’. மானியத்திற்கு அதிகம் செலவழித்தால், தங்களின் பங்கு குறைந்து விடும். மறுபுறத்தில் வரியும் வட்டி விகிதங்களும் உயர்ந்து விடும். எனவே அவர்கள் அதை எதிர்க்கின்றனர். ஐ.மு.கூ அரசில் ஆதிக்கம் செலுத்திய கார்ப்பரேட் லாபி, இந்த அரசிடமும் பேசத் தொடங்கி விட்டது.

'தி இந்து' ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.