செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

காங்கிரஸைக் கொப்பியடிக்கிறது பா.ஜ.க அரசு!

Posted: 2014-07-29 04:34:39
காங்கிரஸைக் கொப்பியடிக்கிறது பா.ஜ.க அரசு!

காங்கிரஸைக் கொப்பியடிக்கிறது பா.ஜ.க அரசு!

பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை என்று இடது சாரிக் கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. நரேந்திர மோடி தலைமையில் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க அரசு பின்பற்றும் பாதை இந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பதாகவே உள்ளது. இந்தக் கருத்தை தற்போது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் வெளியிட்டுள்ளார். காங்கிரஸின் கொள்கைகளிலிருந்து பாரதிய ஜனதா விலக முடியாது என்று ஒரு கூட்டத்தில் பேசிய அவர் குறிப்பிட்டுள்ளதோடு, காங்கிரஸ் கொள்கைகளை கொப்பியடிப்பதுதான் குஜராத் 'மொடல்' என்றும் கூறியுள்ளார். ப.சிதம்பரம் கூறும் காங்கிரஸ் கொள்கை என்பது காந்தி காலத்து காங்கிரஸ் அல்ல. விடுதலைக்காக போராடிய காலத்தில் காங்கிரஸ் கட்சி சுதேசிப் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தது.

ஆனால் தாராள மயமாக்கல் கொள்கையை தழுவிக் கொண்ட இன்றைய காங்கிரஸ் சுதேசிக் கொள்கையை ஒழித்துக் கட்டுவதையே தன்னுடைய பிரதான பணியாக கடந்த பத்தாண்டுகளாகச் செய்து வந்தது. அன்றைக்கு அந்நியர்களுக்கு எதிராக போராடிய காங்கிரஸ், நாட்டின் சுயசார்பையும் பொருளாதார சுயசார்பையும் மாற்றாக முன்வைத்தது. ஆனால் இன்றைய காங்கிரஸோ அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு காவடி தூக்குவதையே தன்னுடைய கொள்கையாக கொண்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு, நாட்டு மக்களுக்கு தந்தது என்னவோ துன்பமும், துயரமும்தான். வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் என அனைத்து வகைகளிலும் மக்களை மிகக்கடுமையாக துன்புறுத்தியது. இதன் விளைவாகவே மக்கள் வெறுத்துப்போய் பா.ஜ.கவுக்கு வாக்களித்தார்கள்.

அதேபோல அம்பானி சகோதரர்கள், பாரதி ஏர்டெலின் சுனில் பாரதி மிட்டல், அதித்யா பிர்லா என சில முதலாளிகள் கையில் இந்தியாவின் செல்வ ஆதாரம் முழுவதும் குவிய காங்கிரஸ் அவர்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்தது. ஆனால் இதற்கு மாற்றான கொள்கை தன்னிடம் இருப்பதாக கூறிய பா.ஜ.க இன்றைக்கு ப.சிதம்பரம் கூறுவது போல காங்கிரஸ் பின்பற்றிய அதே தனியார் சார்பு கொண்ட கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறது. பன்னாட்டு நிறுவனங்களையும் உள்நாட்டு பெரு முதலாளிகளையும் அனைத்துத் துறைகளிலும் வளர்த்துவிடுவதில் இந்த இரு கட்சிகளிடையே எழுதப்படாத ஒப்பந்தமே இருப்பதை அமர்தியா சென் உள்ளிட்ட இந்தியாவின் மாபெரும் பொருளாதர நிபுணர்களே மறுப்பின்றி ஒப்புக்கொள்வார்கள்.

அன்றைக்கு காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காப்பீட்டுத்துறை உள்ளிட்ட நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்பு மிகுந்த துறைகளில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்க முயன்றபோது பா.ஜ.க. மறுப்பு சொல்லாமல் நாடாளுமன்றத்தில் கைகொடுத்தது.

இன்றைக்கு காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்க பா.ஜ.க அரசு எடுக்கும் முயற்சிக்கும் எங்களது ஆதரவு உண்டு என்று அறிவிக்கிறது காங்கிரஸ். அதுமட்டுமின்றி விலைவாசி உயர்வுக்கு காரணமான, காங்கிரஸ் பின்பற்றிய அதே கொள்கைகளை அதைவிடத் தீவிரமாக தற்போது மோடி அரசு பின்பற்றுகிறது. அதன் விளைவாக அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளுமே முதலாளிகளை வளர்த்துவிடுகிற கட்சிகள்தான் என்பதையே ப.சிதம்பரத்தின் கூற்று தெளிவாக உணர்த்துகிறது.