செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மணலுக்கு உண்டா மாற்று?

Posted: 2014-08-04 06:12:22
மணலுக்கு உண்டா மாற்று?

மணலுக்கு உண்டா மாற்று?

மணல் கொள்ளை இன்று தமிழகத்தில் பெரும் நோயாகப் பரவிவிட்டது. ஆறுகளும் மணலும் பொதுச்சொத்தாக இல்லாமல் மணல்கொள்ளையர்களின் தனிச்சொத்தாக மாறிவிட்டது. மனிதர்களின் தேவையை ஒட்டி கட்டுமானத் தொழில் இன்று பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. எனவே, புதிய புதிய கட்டடங்கள் எழுவதைத் தவிர்க்க இயலாதுதான். ஆனால் அதே சமயம், கட்டுமானத் தேவைக்காக ஆற்று மணலையெல்லாம் சுரண்டிக் கொண்டு போய்விடுவதால், ஆறுகளெல்லாம் பெரும் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பிரச்சினையை நாம் சந்தித்தே ஆகவேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டோம். குடிநீருக்கும், வீட்டு உபயோகத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும், நீர்ப்பாசனத்திற்கும் கோடிக்கணக்கான மக்கள் ஆறுகளைத்தான் நம்பியுள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட ஆறுகளின் இயற்கைச் சமநிலையை மணற்கொள்ளையர்கள் பாழ்படுத்திவிட்டனர். தொடர்ந்து பாழ்படுத்தியும் வருகின்றனர். ஆற்றுக்கு மணல் எப்படி அத்தியாவசியத் தேவை என்பது குறித்த புரிதலும் விழிப்புணர்வும் மக்களிடையே போதுமான அளவுக்கு இல்லை என்பதுதான் இதில் உள்ள துயரம்.மணல்தான் ஆற்றின் தரைப் பகுதி. ஆற்றை நம்பியிருக்கும் உயிர்களுக்கெல்லாம் ஆதாரம் மணல்தான்.

ஆற்று நீரின் மேற்பரப் பிற்கும் நிலத்தடி நீருக்கும் இடைப்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதி முக்கியமான தாதுப்பொருட்களான மணல் மற்றும் சரளைக் கற்களால் (gravel) ஆனது. கடந்த 70 ஆண்டுகளாக உலகம் முழுதும் செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்து ஓர் ஆறு நீண்ட காலத்திற்கு உயிர்ப்போடு இயங்க இப்பிரதேசத்தின் செயல்பாடுகள் மிக முக்கியம் எனத் தெரியவந்திருக்கிறது.

ஆற்றில் ஓடும் நீரின் வேகத்தை மட்டுப்படுத்தி தரையை ஊடுருவிச் சென்று நிலத்தடி நீரை வலுப்படுத்தும் பணியைச் செய்பவை மணலும் சரளைக் கற்களும்தான். இந்த ஊடுருவல் ஆற்றின் நேர் கீழே மட்டுமின்றி பக்க வாட்டிலும் நடைபெறுகிறது. எந்தளவுக்கு விரிவான பரப்பளவில் நிலத்தடி நீர் வலுப்பெறுகிறது என்பது மண்ணின் தன்மை, நில அமைப்பின் தன்மை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.

நுண்துளைகள் இருப்பதால் அதிகப்படி நீரை மணல் தன்னுள்ளே உறிஞ்சிக் கொள்ள முடியும். வெள்ள அபாயத்தின்போது விவசாய நிலங்களையும் நகரங்களையும் கிராமங்களையும் இப்படிப் பாதுகாப்பது மணல்தான். ஏராளமான தண்ணீரைத் தேக்கிவைக்கும் மணல், வறட்சி காலங்களில் அந்நீரின் ஒருபகுதியை விடுவித்து ஆற்றுநீர் தொடர்ந்து கிடைப்பதற்கும் வழி செய்கிறது. ஆற்றுநீரில் கரைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் பல நீர்வாழ் உயிரினங்களுக்கான உணவாகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் உருவாகியிருக்கும் மணல், சரளைக்கல் அடுக்கு ஆற்றுநீரைச் சுத்தப்படுத்தும் பணியையும் செய்து வருகிறது.

ஆற்றுநீரின் மேற்பரப்பிற்கும் நிலத்தடி நீருக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில்தான் மீன்கள் வாழ்கின்றன. அவைகுஞ்சு பொறிப்பதும் இப்பிர தேசத்தில்தான். லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ளனர். கிராமத்து மக்களுக்கான புரதம் மீன்களிலிருந்தே கிடைக்கிறது. ஆனால் மிகப்பெரிய அளவில் மணலும் சரளைக்கற்களும் கொள்ளை போவதால் ஆற்றில் மீன்கள் கிடைப்பது அருகி வருகிறது. புதிய நீர்மின் திட்டங்கள் வந்தாலும் இந்தபாதிப்பு ஏற்படுகிறது. இதில் முரண் என்னவெனில், மீன்கள் கிடைப்பது குறைந்து வருமானம் குறைந்துபோனதால், மீனவர்கள் வருமானத்திற்காக மணற்கொள்ளைக் குத்துணைபோக வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான்.

எனவே, இப்போதைய தேவை என்னவெனில், சுற்றுச்சூழலுடன் இயைந்த, பாதுகாப்பான, தயாரிப்புச் செலவு அதிகம் பிடிக்காத, தொழில்நுட்பரீதியில் மணலுக்கு மாற்றாக அமையக்கூடிய ஒரு பொருளைக் கண்டுபிடிப்பதற்கான தேசிய முயற்சிதான். நவீன விஞ்ஞானயுகத்தில் அது சாத்தியம்தான். மணலை அதற்குரிய இடத்திலேயே விட்டுவிடுவோம். இந்தியாவின் எதிர்கால நதிநீர்ப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அது ஒன்றுதான் வழி.

ஜூலை 20ஆம் திகதிய 'இந்து' ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்