செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இந்திய ஊடகங்களின் இன்றை நிலை!

Posted: 2014-08-14 04:08:49 | Last Updated: 2014-08-14 04:10:19
இந்திய ஊடகங்களின் இன்றை நிலை!

இந்திய ஊடகங்களின் இன்றை நிலை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த வெள்ளியன்று மாலை ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்திடும் முயற்சிகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் நடைபெற்றது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த விவாதத்தில் யாரும் உருப்படியாக கலந்து கொண்டு பேசவில்லை என்றாலும் இடதுசாரி உறுப்பினர் பி. ராஜீவ் பேசியதை மட்டும் நாம் கவனத்தில் கொள்ளலாம். அவரது பேச்சில் "இந்திய ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களாக மாறியபின்னர் ஜனநாயகத்தின் நான்காவது தூண், வணிகத் தூணாக மாறிவிட்டது." என்று சுட்டிக்காட்டினார். இதை வாசிக்கும் நீங்கள் ஒரு இந்தியத் தமிழர் என்றாலும் இந்தியாவுக்கு வரவிரும்பும் வெளிநாட்டு வாழ் தமிழர் என்றாலும் கவத்தில் கொள்வது நல்லது.

சமீபத்தில் 2014 ஜூலை 27 அன்று 'நியூயோர்க் டைம்ஸ்' இதழில் ஒரு தலையங்கம் வந்திருந்தது. அதில் நாட்டின் பத்திரிகை சுதந்திரம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று தலையங்கம் தீட்டியிருந்தது. தலையங்கத்தின் தலைப்பு, "முற்றுகைக்கு உள்ளாகியுள்ள இந்தியப் பத்திரிகைகள்" என்பதாகும்.

அந்தத் தலையங்கத்தின் முதல் பத்தியில் இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த சமயத்தில் 1975ம் ஆண்டு ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக பத்திரிகைகள் மீது தணிக்கையைத் திணித்தார். ஒருசில ஏடுகள் எதிர்ப்பினைத் தெரிவித்தது தவிர, பெரும்பாலான பத்திரிகைகள் அரசாங்கத்தின் புதிய விதிகளுக்கு ஏற்றாற்போல சரணடைந்தன. அப்போது பா.ஜ.க.வின் நிறுவுநர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ஒரு தடவை பத்திரிகைகளின் சரணாகதி குறித்து அவர், "நீங்கள் கொஞ்சம் வளைந்து கொடுங்கள் என்றுதான் உங்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நீங்களோ மண்டியிடுவதே உசிதம் என்று தேர்ந்தெடுத்து விட்டீர்கள்," - என்றார்.

யதார்த்தம் என்ன?

பா.ஜ.கவின் தலைவரான அத்வானிஜியின் விமர்சனங்கள் இவை. ஆனால் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? மும்பையிலிருந்து வெளியாகும் 'டி.என்.ஏ' நாளேடு தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த ஒரு கட்டுரையை அகற்றிவிட்டது. ராணா அயூப் என்பவர் எழுதியிருந்த அக்கட்டுரையில், "நரேந்திர மோடியால் பா.ஜ.கவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமித் ஷா மீது கொலை உட்பட பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்காக இப்போதும் விசாரணை நடைபெற்று வருகிறது," என்று எழுதியிருந்தார். அந்தக் கட்டுரைதான் அகற்றப்பட்டு விட்டது. இந்தியாவில் இப்போது இவ்வாறு நடக்கத் தொடங்கியிருக்கிறது.

'நியூயார்க் டைம்ஸ்' ஏடு தலையங்கத்தில் எழுதியுள்ள மேலும் சில பகுதிகளில்: "சமீபத்தில் ஊடக உரிமையாளர்கள், செய்தியாளர்கள் எப்படி எப்படி செய்திகளைத் தர வேண்டும் என்றும், தலையங்கத்தின் திசைவழி எப்படி இருக்க வேண்டும் என்றும் நேரடியாகவே நிர்ப்பந்தம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். மிகவும் பிரபலமான பல செய்தியாளர்கள் தங்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் அல்லது தங்கள் மீதான நிர்ப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்களாகவே ராஜினாமா செய்திருக்கிறார்கள்." உண்மையில் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி எவ்விதமான ஊடக சுதந்திரமும் இந்தியாவில் கிடையாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேச்சுச் சுதந்திரம் மற்றும் அதனை வெளிப்படுத்தும் சுதந்திரம் தொடர்பாக 19(1)ஆவது பிரிவின் கீழ் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் ஒரு விரிவாக்கம்தான். ஆனால் இப்போது பத்திரிகை சுதந்திரம் பற்றி நாடாளுமன்றதில் விவாதிக்கிறார்கள். இந்தியாவில் பத்திரிகைகள் என்பவை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகிறது. ஆனால் இங்கே இது ஒரு வணிகத்தூண் மட்டுமேயாகும். ஊடகங்களும் இப்போதெல்லாம் தனியார்களின் சொத்துக்கள்தான். இவ்வாறு தனியார்களின் சொத்துக்களாக மாறிவிட்ட ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயற்படும் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. இதுதான் இன்றைய யதார்த்தமாகும்.

திணிக்கும் செய்திகள்

சமீபத்தில் என்ன நடந்திருக்கிறது? ரிலையன்ஸ் நிறுவனம் 'டி.வி.18' தொலைக்காட்சி நிறுவனத்தைத் தனதாக்கிக் கொண்டுவிட்டது. இந்தியர்கள் என்ன பார்க்க வேண்டும், அவர்கள் என்ன கேட்க வேண்டும், அல்லது எந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று யார் தீர்மானிப்பது? 'டி.வி.18' தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் 18 அலைவரிசைகள் இருக்கின்றன. வானொலி அலைவரிசை, 92.7 எப்.எம். ரிலையன்ஸால் நடத்தப்படுகிறது. 'பிக் ஸ்கிரீன்' மற்றும் 'பிக் சினிமா' என்னும் நாட்டின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படத் தயாரிப்பாளர்கள் வேறு யாருமில்லை, ரிலையன்ஸ்தான். இவர்கள் பாலிவுட் படங்களை மட்டும் அல்ல பிராந்திய மொழிப் படங்களையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இவை அனைத்தும் ரிலையன்ஸால் கட்டுப்படுத்தப்படுகின்றன. டி.டி.எச். சிஸ்டம் ரிலையன்ஸுக்கே சொந்தமானது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் ஜாம்பவானாகத் திகழும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரும் ஊடக நிறுவனமாகவும் திகழ்கிறது. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் இவர்களின் ஊடகங்கள் வாயிலாக நம் கருத்துக்கள் மக்களைச் சென்றடையுமா அல்லது இவர்கள் திணிக்கும் செய்திகள் மக்களைச் சென்றடையுமா? இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்ன? வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு. இதுவே இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான பகுதி. ஆனால் ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் மோனோபோலியாக மாறியுள்ள நிலையில் அவைகளிடமிருந்து ஜனநாயகப்பூர்வமான செயல்பாடுகளை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?

2008இல், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், இந்திய நாட்டில் மூன்றுவிதமான உரிமதாரர்களுக்கு அனுமதி அளித்தது. பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய மூன்றும் ஒருவிதம். இதற்கு படுக்கை நிலையில் உள்ளவை என்று பெயர். செங்குத்தான உரிமதாரர்கள் என இன்னொரு வகை உண்டு. இவர்கள் தொலைக்காட்சி அலைவரிசையும் வைத்திருப்பார்கள் டி.டி.எச்சையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் ரெலிகம்யூனிகேசன் மற்றும் இதர துறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இவ்வாறு பலவிதமான உரிமதாரர்கள் இந்திய நாட்டில் உண்டு. உலகில் வேறெந்த நாட்டிலும் இவ்வாறு பலவிதமான உரிமதாரர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

இங்கே மற்றொரு முக்கியமான பிரச்சனை. காசு கொடுத்து செய்தி போட வைப்பது. 'பெயிட் நியூஸ்'. இது பத்திரிகை சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்திற்கே ஆழமான அச்சுறுத்தல் என்று இந்திய குடியரசுத் துணைத் தலைவரே கூறினார். இதுதொடர்பாக நிலைக்குழு சில ஆழமான பரிந்துரைகளை அளித்திருக்கிறது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உள்ளடக்கம் குறித்து அறிஞர்கள் குழு அடங்கிய ஊடகக் கவுன்ஸில் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரை. அடுத்து, இப்போது பிரஸ் கவுன்ஸில் ஆப் இந்தியா என்பது பத்திரிகைகள் குறித்து மட்டுமே அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் தொடர்பாகவும் இதுபோன்றதொரு அமைப்பு உருவாக்கப்படவேண்டும். அப்போது தொலைகாட்சிகளின் உண்மையான முகம் தெரியவரும். அதுவரை இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் என்பதையே எதிர்பார்க்கத் தேவையில்லை.