செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

புதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

Posted: 2014-09-09 04:02:10
புதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

புதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

இந்தியாவில் ஜனநாயகமும் முற்போக்குச் சிந்தனைகளும் முழு வலிமையோடு வேரூன்றுவதற்குத் தடைக்கல்லாக இருக்கிற காரணிகளில் முக்கியமான ஒன்று சாதியப் பாகுபாடுகளும், தீண்டாமைக் கொடுமைகளும். தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல என்றாலும், இங்கே அந்த அவலம் தொடர்கிறது என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்வதில்லை.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகரில், ரமேஷ் என்ற 16 வயது தலித் மாணவர் பிறசாதிகளின் மாணவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். காரணம் அவர் கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வந்ததுதான் என்று கூறப்படுகிறது. ரமேஷ் புதிய கைக் கடிகாரத்துடன் பள்ளிக்கு வந்து அந்த வயதுக்கே உரிய பெருமிதத்துடன் நண்பர்களிடம் காட்டியிருக்கிறார்.

சிலர் அவர் கைக்கடிகாரம் கட்டக்கூடாது என்று சொன்னபோது ரமேஷ் எதிர்த்திருக்கிறார். இரண்டு நாள்களுக்குப் பின்னர் ரமேஷ் வீடுதிரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வழி மறித்து ஆயுதங்களால் தாக்கியது. அதில் கடிகாரம் கட்டியிருந்த அவரது கையின் மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது. தாக்கியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்கள் தேடப்படுகிறார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அப்பள்ளியில் மாணவர்களிடையே சாதிப் பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் முளைத்துள்ளன.

தலித் மாணவர்கள் செருப்பு அணியத் தடை என்பது உள்ளிட்ட தீண்டாமைக் குற்றங்கள் இப்பள்ளியில் நிகழ்த்தப்பட்டுள்ளன. பல நேரங்களில் ஆசிரியர்களே கூட சாதிய வன்மத்துடன் செயல்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படிப் பட்ட பிரச்சனைசினைகள் வரும்போதெல்லாம் மாவட்ட கல்வித்துறை பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டங்களைக் கூட்டுவது, அப்போதைக்குப் பிரச்சினையைச் சமாளிப்பது என்றுதான் செயல்பட்டு வந்திருக்கிறதேயன்றி நிரந்தரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுட்டிக்காட்டுகிறது.

தீண்டாமை ஒரு குற்றம் என்று பாடம் சொல்லித்தரப்பட்டாலும், அந்த வளரும் பருவத்திலேயே சாதியப் பாகுபாட்டு நஞ்சு விதைக்கப்படுவது எப்படி? ஒரு பக்கம் தலித் இளைஞர்கள் நவீன உடைகள் அணிந்து மற்ற சமூகங்களின் பெண்களைக் கவர்ந்து ஏமாற்றுகிறார்கள் என்பது போன்ற பகைமைப் பிரச்சாரங்கள் நடக்கின்றன. தலித்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நடைபெறுகிறபோது அரசு எந்திரமும் காவல்துறையும் உரிய வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை. இத்தகைய நிலைமைகள்தான், இத்தகைய அத்துமீறல்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கின்றன.

மாணவரின் கைவெட்டப்பட்ட பிரச்சினையில் நியாயமான, விரைவான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தையும் ஒரு சட்டப்பூர்வ கடமையாக அரசு மேற்கொண்டாக வேண்டும். அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும், ஊடகங்களும் இதனையும் ஒரு முன்னுரிமைப் பிரச்சினையாக எடுத்துக்கொள்வதன் மூலம் அந்தக் கடமையை அரசு நிறைவேற்றுகிற சூழலை ஏற்படுத்த முடியும்.