செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பந்தாடப்பட்டு வரும் "கல்முனைக் கரையோர மாவட்டம்"

Posted: 2014-11-11 05:31:51
பந்தாடப்பட்டு வரும்

பந்தாடப்பட்டு வரும் "கல்முனைக் கரையோர மாவட்டம்"

பெருந்தேசியக் கட்சிகளின் சுய அரசியல் இலாபங்களுக்காகவே 'கல்முனைக் கரையோர மாவட்டம்' என்னும் முற்போக்கான தென் கிழக்குத் தமிழ்பேசும் மக்களுக்கான நிர்வாகக் கட்டமைப்புக் கோரிக்கையானது தொடர்ந்தேச்சையாகப் புறந்தள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதில் பெருந்தேசியக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமன்றி தமது சுயநலம் கருதி அரசியலில் ஈடுபட்டு வருகின்ற முஸ்லிம் சமூக அரசியல்வாதிகளும் இடையிடையே சம்பந்தப்பட்டு தமது வீட்டு வாசலடியில் இக்கரையோர மாவட்ட நிர்வாகம் வந்தமைய வேண்டும் என எதிர்பார்ப்பதனாலேயே இம்மக்களுக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய இக்கரையோர மாவட்ட நிர்வாகக் கட்டமைப்பானது இன்று வரைக்கும் பலராலும் மாறி மாறிப் பந்தாடப்பட்டு வருவது நம் எல்லோரினது கவனத்திலும் பதிவாகியுள்ள கசப்பான உண்மையாகும்.

கிழக்கு மாகாணத்தின் தென்பகுதியில் தமிழைத் தமது தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அவர்களது அரச, நிருவாகக் கடமைகளைத் தமது சொந்த மொழியில் மேற்கொள்ளும் வகையில் நீண்ட காலமாகக் கோரப்பட்டு வந்ததே கல்முனைக் கரையோர மாவட்டக் கோரிக்கையாகும்.

இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களும், ஆளும் கட்சியின் பிரமுகர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமாக தமது சமயத்தையும், சமூக அடையாளத்தையும் முன்வைத்து நாட்டில் பிரிவினையைத் தோற்றுவிக்க முனைவதாகக் கூறுவது சுத்த அபத்தமாகும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனிபா மதனி.

அண்மையில் கல்முனைக் கரையோர மாவட்டம் தொடர்பாக பெருந் தேசியக்கட்சிகளால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து விவரிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டு மக்களின் நிருவாகத்தை இலகுபடுத்தும் வகையில் அரச நடவடிக்கைகளை அவர்களின் காலடிக்குக் கொண்டு சென்று அவர்கள் பேசுகின்ற மொழியில் அவர்களது பணிகளைச் செய்துகொள்ள வசதி அளிக்கும் வகையில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் அமையப் பெற வேண்டுமெனக் கோரப்பட்டதே கல்முனைக் கரையோர மாவட்டமாகும்.

இதனை ‘முஸ்லிம் மாவட்டக் கோரிக்கை’ என அடையாளப்படுத்தி, தமிழீழம் போன்ற பிரிவினைவாதக் கோரிக்கையாக மெருகூட்டி, பூச்சாண்டி காட்ட முற்பட்டிருப்பதானது, சிறுபான்மை மக்களின் நியாயமான அபிலாஷைகளை அளவுக்கதிகமாக மலினப்படுத்துகின்ற கொள்கையே இப்பெருந் தேசியக் கட்சிகளில் இன்னமும் புரையோடிப் போய் இருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

சனப்பெருக்கம், அபிவிருத்தி நோக்கம், நிர்வாகக் கட்டமைப்புக்களை விரிவுபடுத்திச் சீர்செய்தல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு, இந்த நாட்டில் புதிய மாவட்டங்களின் உருவாக்கம் என்பது கடந்த காலங்களில் சாதாரணமாகவே நடைபெற்று வந்திருக்கின்றன. 1955ஆம் ஆண்டின் நிர்வாகச் சட்ட இலக்கம் 22இல் விவரிக்கப்பட்டதன் பிரகாரம் 20 நிர்வாக மாவட்டங்களே அப்போது இருந்துள்ளன. எனினும் இவற்றுக்கு மேலதிகமாக 1959இல் மொணராகலை மாவட்டமும், 1961இல் அம்பாரை மாவட்டமும், 1978இல் கம்பஹா மாவட்டமும், 1982இல் கிளிநொச்சி மாவட்டமும், 1985இல் முல்லைத்தீவு மாவட்டமும் புதிய மாவட்டகங்களாக உருவாக்கப்பட்டு இந்த நாட்டின் நிர்வாக மாவட்டங்களின் தொகை 25 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது.

புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கென ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்குவதற்காக 1978ஆம் ஆண்டு அன்றைய அரசினால் நியமிக்கப்பட்ட மொறகொட ஆணைக்குழுவானது அதன் பரிந்துரைகளில் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாக 'கல்முனைக் கரையோர மாவட்டம்' ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென அறிக்கையிட்டிருந்தது.

மொறகொட ஆணைக்குழுவின் நேர்மையான அந்த அறிக்கையை அன்றிலிருந்து தொடர்ந்தேச்சையாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த அரசுகள் நிறைவேற்றுவதற்குத் தவறி வந்துள்ளன. இதனை காலங் கடந்தாயினும் இப்போதாயினும் நிறைவேற்றுங்கள் என்றுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தைக் கோரி நிற்கின்றது.

நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றை மிகச் சரியாக மேற்கொள்வதற்கென்றே அரசாங்கங்களினால் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. இவ்வாறான ஆணைக்குழுக்களினால் நீதியானதும், நேர்மையானதுமாகக் கருதப்பட்ட ஒன்றுதான் மொறகொட ஆணைக்குழுவின் 'கல்முனைக் கரையோர மாவட்டம்' என்கின்ற சிபாரிசாகும். 1978ஆம் ஆண்டிலிருந்து நாட்டை ஆட்சி செய்து வந்த அரசுகளால் இத்தகைய நேர்மையான தீர்மானமொன்று புறந்தள்ளப்பட்டு வந்திருக்கின்ற கசப்பான உண்மையை யாரும் மறுதலிக்க முடியாது.

1961ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாரை மாவட்டம் பிரிக்கப்பட்டபோது பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, நிந்தவூர் - கரைவாகுப்பற்று மற்றும் சம்மாந்துறைப்பற்று என்பன தமிழ் - முஸ்லிம் இறைவரி உத்தியோகத்தர் பிரிவுகளாகவும் (DRO), வேகம்பற்று எனும் இறைவரி உத்தியோகத்தர் பிரிவு பெரும்பான்மைச் சிங்கள DRO பிரிவாகவும் இருந்தது. இதன்போது கல்முனை உதவி அரசாங்க அதிபரின் நிர்வாக எல்லைக்குள்தான் தற்போதுள்ள அம்பாறை, உகண செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கியிருந்தன.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இந்த அம்பாறை மாவட்டத்தின் நிருவாகத்தினை முன்கொண்டு செல்ல வேண்டிய அரச அதிபர், தமிழ்மொழியைப் பேசுகின்ற பெரும்பான்மைத் தமிழ் - முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைப் புரியாத சிங்கள மொழியைப் பேசுகின்ற, அம்மொழியில் கருமமாற்றுகின்ற ஒருவராகவே நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறார்.

"இந்நிலையில், தமிழ் மொழியைப் பேசுகின்ற, அம்மொழியில் கருமமாற்றக்கூடிய ஓர் அரச அதிபரை நியமிக்குமாறு தமிழ் - முஸ்லிம் மக்களால் நீண்டகாலமாகக் கோரப்பட்டு வந்த கோரிக்கைகள் தொடர்ந்தேச்சையாக நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றன. கடந்த 43 ஆண்டுகளாக தமிழ் மொழி தெரிந்த ஓர் அரச அதிபரை அம்பாறைக் கச்சேரியில் அமர்த்தி இங்கு வாழ்கின்ற தமிழ்பேசும் மக்களின் நியாயமான தேவைகளை இலகுவாக வழங்கத் தவறிய கடின மனோபாவத்தில் அரசுகள் இருந்து வரும் வரலாற்றினை மாற்றியமைக்கவே இன்று கல்முனைக் கரையோர மாவட்டத்தினை நிறுவுவதன் மூலம் புரையோடிப்போயிருக்கின்ற இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கான அரசியல் முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றது.

ஒரு நாட்டில் பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்கள் பல மாவட்டங்களில் தங்களது நிருவாகத்தை தத்தமது மொழிகளிலேயே ஆற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிகளும், முன்னெடுப்புகளும் அந்த நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்பது அப்பட்டமான அபத்தமாகும். மாறாக அந்த நாட்டின் எல்லா மொழிகளையும் பேசுகின்ற எல்லா இன மக்களையும் அது தேச ஐக்கியத்தின் பால் இட்டுச் செல்லும் என்பதுவே யதார்த்தமாகும்.

120 கோடி மக்களைக் கொண்ட நமது அண்டை நாடான பாரதத்தைப் பாருங்கள். எத்தனை மாநிலங்கள்? எத்தனை விதமான மொழிகள் அங்கு நிர்வாகம் செலுத்துகின்றன. ஆனால் அவர்களின் தேசிய ஐக்கியமும், ஒருமைப்பாடும், நாட்டுப்பற்றும் காலத்திற்குக் காலம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நமது நாட்டின் அரசியல் ஞானிகளில் ஒருவராகக் கருதப்பட்ட காலஞ்சென்ற கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்கள் இந்தத் தத்துவத்தை மிகச் சிறப்பாக அப்போதே இந்த நாட்டு மக்களுக்கு சொல்லி விட்டுச் சென்றுள்ளார். ஒரு நாடு இரண்டு மொழிகள். அல்லது ஒரு மொழி இரண்டு நாடுகள் என்பதுவே அவரது தீர்க்கதரிசன வார்த்தையாகும்.

நாட்டின் நிர்வாக சேவைகளை மக்கள் பேசுகின்ற மொழிகளில் நடைமுறைப்படுத்தும்போது நாடு ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் தானாகவே வளர்த்துக் கொள்கிறது. இதுதான் யதார்த்தமாகும். தமிழ் மொழியைப் பேசுகின்ற பெரும்பான்மை மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் தமிழில் கருமங்கள் நடைபெற வழிவகுக்கும் மனோபாவத்தை நாட்டையும், மக்களையும் ஆளுகின்ற அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொள்ளவும், கொடுக்கவும் வேண்டும். அவ்வாறான கோரிக்கையொன்று முன்வைக்கப்படும்போது அதனை பிரிவினைவாதம் எனப் பொய்யாகப் பூச்சாண்டி காட்ட முற்படக் கூடாது.

ஒரு தாயிடம் பால் கேட்டு அழுது அடம்பிடிக்கும் பிள்ளையைப் பார்த்து, ‘எனது உதிரத்தை உறிஞ்சிக் கொள்ளவா நீ அடம்பிடித்து அழுகின்றாய்?’ என்று அந்தத் தாய் கேட்பதென்பது எவ்வளவு கொடூரம் என்பதை இவ்வேளையில் சற்று நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

வட கிழக்கில் சிவில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துப் போரிட்டுக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களுடன் இங்கு வாழ்ந்த முஸ்லிம் இளைஞர்களும் கவரப்பட்டு அப்போராட்டத்தில் ஈடுபாடு காட்ட முற்பட்டனர். இந்த முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத ஆயுதப் போராட்டத்திலிருந்து தீர்க்கதரிசனமாகத் தடுத்து ஜனநாயக ரீதியான அரசியல் போராட்டத்திற்குள் உள்வாங்கவே அக்காலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இக்கட்சியானது மாமனிதர் மர்ஹும் அஷ்றஃப் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது என்ற வரலாற்றுண்மையை இந்த நாட்டின் பெருந்தேசியக் கட்சிகள் இரண்டும் மீண்டுமொரு முறை இரை மீட்டிப் பார்க்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது.

இந்த உண்மையையும், மு.காவின் தோற்றத்திற்கான அடிப்படைக் கொள்கையையும் திரிபுபடுத்தும் வகையில் அண்மையில் திரு. விஜயதாச ராஜபக்‌ஷ போன்ற மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றியிருப்பது மிக வேதனை தரும் விடயமாகும்.

இவ்வருடம் ஜூன் மாதமளவில் பேருவளை, அளுத்கமை போன்ற தென்னிலங்கை முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற்ற கலவரத்தின் பின்பு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐ.தே. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இக்கலவரத்தை மிகக் கடுமையாகக் கண்டித்து இதன் பின்னணியில் செயற்பட்டவர்களையும், இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென மிகச் சிறப்பாக உரையாற்றியிருந்தார். அவரது அந்த உரையானது நீதி நியாயங்களையும், ஜனநாயக மரபுகளையும், சிறுபான்மையினர்களின் உரிமைகள், பாதுகாப்பு என்பவற்றையும் வலியுறுத்தியதாக அமைந்திருந்தது.

தலைவரின் தைரியமான இவ்வுரையுடன் தொடர்புபட்டதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தேவப்பெரும அவர்களும் அளுத்கம கலவரத்தின்போது நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பன நடைமுறைப்படுத்தாததை எதிர்த்தும், அதனைக் கண்டித்தும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பதற்கும் முன் வந்தார்.

இந்த விடயங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் மனதை வெகுவாக ஆசுவாசப்படுத்தியதோடு மட்டுமல்லாது ஐக்கிய தேசியக் கட்சி பற்றிய நல்லெண்ணத்தை மீண்டுமொருமுறை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தியிருந்த வேளையில்தான் அக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்‌ஷ அவர்களின் உரை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக பொதுபலசேனாக்களின் அடாவடித்தனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகின்ற இந்த அரசானது, அளுத்கம விவகாரம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களின் நியாயங்களை அங்கீகரிக்காத தோரணையில் தனது அறிக்கையைத் தெரிவித்திருந்தது. பெரும்பான்மை மக்களின் வாக்குகளில் மட்டும் குறியாக இருக்கின்ற நிலை இரு பெரும் கட்சிகளிடமும் தொடர்ந்தேச்சையாகக் குடி கொண்டிருக்கின்ற சூழலில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பின் உறுதியைச் சீர்படுத்த தன்னால் இயலுமான முயற்சிகளையும், முன்னெடுப்புக்களையும் செய்ய வேண்டியது இந்த சமூகத்தின் உரிமைக்குரலாகத் தனித்துவமிக்க சமூக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தார்மீகக் கடமையாகும். அரசியல் இலாபங்களுக்காகவே ‘கல்முனைக் கரையோர மாவட்டம்’ எனும் முற்போக்கான நிருவாகக் கட்டமைப்பு தொடர்ந்தேச்சையாக வரலாற்றில் புறந்தள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதில் பெருந்தேசியக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் அரசியல்வாதிகள் மட்டுமன்றி தமது சுயநலம் கருதி அரசியலில் ஈடுபடுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவ்வப்போது சம்பந்தப்பட்டு வந்திருப்பதும், தமது வீட்டுக் கதவடியில் இக்கரையோர மாவட்ட நிர்வாகம் அமைந்து விட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பதனாலேயே தென்கிழக்குத் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எப்போதோ கிடைத்திருக்கக் கூடிய இக்கரையோர மாவட்ட நிர்வாக அலகானது இன்று வரைக்கும் பலராலும் மாறி மாறிப் பந்தாடப்பட்டு வருவதும் நம் எல்லோரின் கவனத்திலும் பதிவாகியுள்ள கசப்பான உண்மையாகும் - என்றார் அவர்.