செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நகுலேஸ்வரன் ஏன் குறிவைக்கப்பட்டார்?

Posted: 2014-11-26 09:03:04
நகுலேஸ்வரன் ஏன் குறிவைக்கப்பட்டார்?

நகுலேஸ்வரன் ஏன் குறிவைக்கப்பட்டார்?

யுத்தம் முடிந்து ஆறாவது ஆண்டு நெருங்குகின்றது. ஜனாதிபதி தேர்தல் ஆரவாரம் ஒருபுறம், வட பகுதியில் மக்கள் மீள்குடியேறி வீடுகளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் அமைக்கும் முயற்சிகள் மறுபுறம் என ஓடிக் கொண்டிருந்த நாட்களில்தான் அந்த புதன் கிழமை இரவும் வந்தது.

மன்னார், வெள்ளங்குளம், கணேசபுரம் பகுதியில் உள்ளது ஈசன் குடியிருப்பு.

இங்குதான் தனது மனைவி, பிள்ளைகளுடன் வசித்துவந்தார் கிருண்ணசாமி நகுலேஸ்வரன்.

40 வயதுடைய இவர் விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றியவர்.

இறுதி யுத்தத்தின் பின் இராணுவத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் குடும்பத்துடன் இணைக்கப்பட்டவர்.

ஆசிரியத் தொழில் செய்யும் மனைவி, இரண்டு பிள்ளைகள். இந்த அழகான குடும்பத்திற்கு வீட்டுத் திட்டமும் வந்திருந்தது. அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

இந்த வேகத்தில் நவம்பர் 12 ஆம் திகதி புதன் கிழமை இந்த குடும்பத்தை குலைக்கும் நாள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அந்த அமைதியான இரவில் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் தனது உறவினர்கள் இருவருடன் இணைந்து வீடு கட்டுவதற்கான சீமெந்து கற்களை அரிந்து கொண்டிருந்தார்.

இரவு எட்டரை மணியிருக்கும். வெடிச்சத்தம் ஒன்று கேட்டது.

அத்தருணத்தில் குழைத்த சீமெந்தை மண்வெட்டியால் அள்ளிக் கொண்டு இலேசாக நிமிர்ந்த நகுலேஸ்வரன் அப்படியே பின்னோக்கிச் சரிந்தார்.

கை எட்டுகின்ற இடத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்த வாகீசன் அவரைக் கீழே விழவிடாமல் தடுப்பதற்காக தலையின் பின் பக்கமாகப் தாங்கிப் பிடித்துக் கொள்வதற்கு முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. நகுலேஸ்வரன் அப்படியே பின் பக்கமாக விழுந்தார்.

''தலையைத் தாங்கிப் பிடித்த என்ர கையெல்லாம் ஒரே ரத்தம். எனக்கு ஒன்றுமே விளங்கேல்ல. தலையின் பின் பக்கத்தில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து ரத்தம் போக விடாமல் பொத்திப் பிடிக்க முயன்றேன். ஆனால் தலையிலிருந்து சிதறிய அவருடைய மூளை என்னுடைய கைக்குள் பரவியதை உணர்ந்தேன். ஐயோ... அக்கா ஓடி வா, ஓடி வா என்று கத்தினேன். வீட்டிலிருந்து அக்கா ஓடி வந்து அவரைப் பார்த்ததும் வீறிட்டுக் கத்தினார். அயல் வீட்டுக் காரர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். அப்போதுதான் பார்த்தேன் எனது மைத்துனர் நகுலேஸ்வரனின் முன் தலையில் குண்டு அடிபட்டு தலையின் பின் பக்கத்தைப் பிரித்து மூளையைச் சிதறடித்துச் சென்றிருந்ததை'' என்று கண்ணீர் மல்க வாகீசன் தெரிவிக்கின்றார்.
நகுலேஸ்வரனின் மனைவி கத்தியது கேட்டு ஓடி வந்தவர்களில் ஒருவரிடமிருந்த தொலைபேசி மூலமாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்குத் தகவல் பறந்தது.

பொலிஸார் அங்கு வருவதற்கு முன்பே இராணுவம் அங்கு வந்து சேர்ந்தது.

சம்பவம் நடைபெற்று சுமார் அரை மணித்தியாலத்துக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் அந்த வீட்டையும் அயல் பிரதேசத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அந்தப் பிரதேசத்தின் ஊர் மக்கள் இருந்த இடத்தை விட்டு நகர முடியாதவாறு நூற்றுக் கணக்கில் இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது.

மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நகுலேஸ்வரன் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்காக மேசன் தொழில் செய்து வந்தார். அந்தக் கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் பலருக்கு வீட்டு வசதி வழங்கப்பட்டிருந்தது. நகுலேஸ்வரனுக்கும் அது கிடைத்திருந்தது. இந்த நிலையில் தான், வழக்கம் போல இரவில் கல் அரிந்து கொண்டிருந்த நேரம் நகுலேஸ்வரன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருந்தது.

''வீட்டில நாய் இருக்கு. அந்த நேரம் நாய் குரைக்கவே இல்லை. வேலை செய்து கொண்டிருந்த எங்களுக்கு சந்தேகத்திற்கு உரிய வகையில ஆளரவம் எதுவுமே கேட்கேல்ல. மோட்டார் சைக்கிளோ அல்லது வேற வாகனங்களின் நடமாட்டத்தை நாங்கள் கேட்கவில்லை. அந்த நேரம் எல்லா இரவையும் போல அமைதியாகவே இருந்தது. சந்தேகம் ஏற்படுற அளவில எதுவுமே நடக்கேல்ல. ஆனால் ஒரேயொரு துப்பாக்கி வேட்டுத் தான் நகுலேஸ்வரனை சரித்து, இந்த உலகத்தை விட்டே அனுப்பி வைத்து விட்டது'' என்று உடைந்த குரலில் கூறுகிறார் உடனிருந்த வாகீசன்.
நகுலேஸ்வரனும் மற்றவர்களும் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் மின்விளக்குகள் மிகவும் வெளிச்சத்தோடு ஒளிர்ந்து கொண்டிருந்தன.

இந்தச் சூழலில்தான் தலையை துல்லியமாக இலக்கு வைத்து ஒரேயொரு சூட்டில் இருளில் மறைந்திருந்த துப்பாக்கிதாரி நகுலேஸ்வரனைத் தீர்த்துக் கட்டியிருந்தான்.

துப்பாக்கியைக் கையாள்வதில் கைதேர்ந்த ஒருவராலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என விசாரணைகளை நடத்திய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.

விசாரணைக்காக பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. விரைந்து செயற்பட்ட பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரீ56 ரகத் துப்பாக்கியை சம்பவ இடத்திற்கு அயலில் பற்றைக்குள்ளிருந்து கண்டு பிடித்திருக்கின்றனர்.

அதே மோப்ப நாயின் உதவியுடன் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேக நபரிடமிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

அப் பகுதி கிராம அலுவலர் உட்பட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்றும், இந்த கொலைக்கான காரணம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன எனவும், குற்றவாளி எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவ பிரசன்னமும் புலனாய்வாளர்களது நடமாட்டமும் அதிகமுள்ள அந்த பகுதியில் இச் சம்பவம் நடந்ததையிட்டு மக்கள் மத்தியில் அச்சம் குடிகொண்டுள்ளது.

இப்போதெல்லாம் மாலை ஐந்து மணிக்கெல்லாம் அந்தப் பகுதி, ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி விடுவதாகவும், இரவு ஏழு மணிக்கெல்லாம் எல்லோரும் வீடுகளைப் பூட்டி உள்ளேயே முடங்கி விடுகின்றனர் என்றும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராகிய நகுலேஸ்வரன் பொது வேலைகளில் தீவிரமாகச் செயற்பட்டு வந்தவர். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் ஊர் மக்களுக்கான அபிவிருத் திட்டங்களின் நன்மைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டு வந்துள்ளார்.

சமுர்த்தி உதவிகள், இந்திய வீட்டுத்திட்ட உதவிகள் என்பவற்றை ஊரில் உள்ள வறுமைப்பட்டவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

இதற்காக அவர் அரச அதிகாரிகள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டும் இருந்தார்.

நகுலேஸ்வரன் எல்லோருக்கும் நன்மையே செய்து வந்தார். இதனால் அவருக்கு தனிப்பட்ட ரீதியில் எவருமே எதிரிகளில்லை என்பதே ஊர் முழுக்க பேச்சாக இருக்கின்றது.

ஆனால் இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே நகுலேஸ்வரன் கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருக்கின்றனர்.

அதேநேரம், இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்திய மன்னார் மாவட்ட நீதிவான், கொல்லப்பட்டவருடைய சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னர் மரணமானவர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வழக்கொன்றில் முக்கிய சாட்சியாக இருக்கிறார் என்றும், அடுத்தடுத்த தினங்களில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட இருந்தது என்றும், அதில் அவர் முக்கிய சாட்சியமளிக்க இருந்தார் என்று கூறியுள்ளதுடன் இந்தச் சம்பவம் தொடர்பில் தீர்க்கமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார் என்று அந்த சம்பவ நேரத்தில் அங்கிருந்தவர்கள் தெரிவத்திருக்கின்றனர்.

நகுலேஸ்வரன் காணிகள், வீட்டுத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேறிய மக்களுக்கான அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றில் இடம்பெறுகின்ற ஊழல்கள், காணி அபகரிப்புக்கள், சட்டவிரோத மணல் அகழ்வு என பல நடவடிக்கைகளை துணிவோடு எதிர்த்ததுடன், அவற்றை கூட்டங்களில் வெளிப்படுத்தியும் வந்துள்ளார்.

அண்மையில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் கூட நகுலேஸ்வரன் ஊழல்கள் தொடர்பாக பலர் முன்னிலையிலும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்று அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப் பகுதி கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருடைய சில செயற்பாடுகள் தொடர்பாகவும் நகுலேஸ்வரன் வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே இச் சம்பவம் தொடர்பில் கிராம அலுவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் அப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என பலரும் கூறுகின்றார்கள்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராகிய நகுலேஸ்வரன் மீது மிகவும் கிட்டிய தூரத்தில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்ததாகவும் அதன் காரணாக அவருடைய உயிரைப் பறித்த துப்பாக்கிக் குண்டு, அவருடைய தலையிலிருந்து வெளியேறி அங்கிருந்த கொட்டில் ஒன்றின் கூரை ஓலையைத் துளைத்துக் கொண்டு சென்றுள்ளது எனவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சரியான இலக்கு, ஒரேயொரு துப்பாக்கிச் சூடு என்ற காரணத்தினாலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிய முதல் தகவல்கள் வெளியாகிய போது நகுலேஸ்வரன் சினைப்பர் தாக்குதல் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடபகுதியில் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பாதுகாப்பு துறைக்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதங்கள் எவ்வாறு வந்தன? ரி 56 ஆயுதத்துடன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஒருவர் நடமாட எவ்வாறுமுடிந்திருக்கின்றது? நேர்த்தியாக குறி தவறாது சுடும் ஆற்றல் படைத்தவர்கள் துப்பாக்கியுடன் தடையின்றி ஊலாவுகின்றனர்? புனர்வாழ்வு பெற்று புலனாய்வாளரின் கண்காணிப்பில் உள்ள ஒருவருக்கே இந்த நிலை? போன்ற விடயங்கள் இலங்கை பாதுகாப்புத் தரப்பை கிலிகொல்ல வைத்துள்ளன.

விசாரணைகள் எந்த வகையில் விரியும், கொலைச் சூத்திரதாரிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறுவது பேன்றவற்றுக்கு அப்பால் எந்த பாவமும் அறியாத நகுலேஸ்வரனின் குடும்பம் இனி என்ன செய்யம் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

-கே.வாசு-