செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

திட்டமிடப்படாத அபிவிருத்தியால் அல்லற்படும் மக்கள்

Posted: 2014-12-04 05:15:15 | Last Updated: 2014-12-04 05:17:05
திட்டமிடப்படாத அபிவிருத்தியால் அல்லற்படும் மக்கள்

திட்டமிடப்படாத அபிவிருத்தியால் அல்லற்படும் மக்கள்

யுத்தம் முடிவடைந்த பின் வடக்கின் வசந்தம் எனக் கூறி அபிவிருத்தி நடவடிக்கைகள் வடக்கின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் சில அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

ஒதுக்கப்பட்ட நிதியை முடித்தால் சரி என்ற நிலையில் கூட சில வேலைகள் அபிவிருத்தி என்ற போர்வையில் இடம்பெறுகின்றன. அவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் ஒரு பதிவே இது.

IMAGE_ALT

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு குளமே இராசேந்திரம் குளம். இக்குளத்தை ஆழமாக்குவதற்கு கோடை காலத்திலேயே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வேலைகள் கோடையில் இடம்பெறாது தற்போது கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெறுகிறது. இது பற்றி அந்தக் குளத்தைப் பயன்படுத்தும் விவசாயி ஒருவர் இப்படி கூறுகிறார்.

"மழை பெய்ந்து கொண்டிருக்கும் போது குளத்தில தண்ணி வரும். தண்ணி நிற்கும்போது எப்படி ஆழமாக்கிறது. வாறா தண்ணியையும் ஆழமாக்குவதற்காக தேங்காமல் செய்யுறாங்க. இதால குளத்திலையும் தண்ணி இல்லை. கடைசியா ஆழமாக்கின பாடும் இல்லை. இந்த வருசம் முடியக்கிடையில வேலை முடிச்சதாக் காட்டினா அவங்களுக்கு சரி. ஆனா என்னைப் போல விவசாயிகள்தானே இதால பாதிப்படையிறது." - என்றார்.

IMAGE_ALT

மாரி காலத்தில் குளத்திற்கு நீர் வந்துகொண்டிருக்கும் போது அந்தக் குளத்தைப் பூரணமாக ஆழமாக்க முடியுமா என்பது ஒருபுறம் இருக்க குளத்து நீரையும் தேங்கவிடாமல் செய்கிறார்கள். இதனால் கோடை காலத்தில் மீண்டும் நீர்த் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்கின்றனர் மக்கள்.

இக்குளத்தின் ஓரமாக இராசேந்திரகுளம் - மதவுவைத்தகுளம் பிரதான வீதி செல்கிறது. இவ் வீதியும் கடந்த பல வருடங்களாக முழுமையாக திருத்தப்படவில்லை. இதனால் இந்த வீதியைப் பயன்படுத்தும் இராசேந்திரகுளம், தவசிகுளம், மூன்று முறிப்பு, பொன்னாவரசன்குளம், நாகர் இலுப்பைக்குளம் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

குளத்து வேலை நடைபெறுவதால் குளத்தில் தூர் வாரப்படுகின்ற களி மண்ணை இப்பகுதி வீதிகளில் போடுகிறார்கள். இதனால் மழை காரணமாக இப்பகுதி வீதி முழுமையாகவே சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

IMAGE_ALT

வீதி திருத்தல் நடைபெறுவதாக அரச அதிகாரிகள் கூறுகின்றனர். குளத்தின் களி மண்ணை மழை பெய்ந்து கொண்டிருக்கும் நிலையில் வீதியில் கொண்டு வந்து கொட்டுவதால் வீதி சேறும் சகதியுமாக தற்போது மாறியுள்ளது. இதனால் இவ் வீதி வழியாக போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மாணவர்களும் பயன்படுத்தும் பிரதான வீதியே இந்த அபிவிருத்தி வேலையால் தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. இதுவா திருத்த வேலை? என்கிறார் பாடசாலை மாணவர்களை அவ்வீதி வழியாக அழைத்து வரும் ஒருவர்.

எனவே, அவிவிருத்தி என்பது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். மாறாக மக்களின் இயல்பு நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குவது அபிவிருத்தி அல்ல. ஒதுக்கப்படும் நிதிகளை பயனுள்ளதாக திட்டமிடவேண்டியது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையே என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

- கே.வாசு -