செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இரு தரப்பினருமே கூட்டமைப்பை 'கள்ளப் பொண்டாட்டியாக' பயன்படுத்த முனைகின்றார்கள்!

Posted: 2014-12-10 12:35:14 | Last Updated: 2014-12-10 20:34:53
இரு தரப்பினருமே கூட்டமைப்பை 'கள்ளப் பொண்டாட்டியாக' பயன்படுத்த முனைகின்றார்கள்!

இரு தரப்பினருமே கூட்டமைப்பை 'கள்ளப் பொண்டாட்டியாக' பயன்படுத்த முனைகின்றார்கள்!

"சபாஷ் சரியான போட்டி!" என்று சொல்லி, - பார்த்து ரசிக்கக்கூடிய அளவுக்கு கன்னாபின்னாவென்று சூடேறிக் கொண்டிருக்கிறது ஜனாதிபதி தேர்தல். "எனது பொதுச் செயலாளரை நீ இழுத்தால் - உனது செயலாளரை நான் இழுப்பேன்!" என்ற ரீதியில் ஏட்டிக்குப் போட்டியான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

அங்கிருந்து - இங்கும், இங்கிருந்து - அங்குமாக கட்சிக்காரர் தாவும் தாவல்களைப் பார்த்து குரங்குகளே - இவர்களிடம் ஒரு Class எடுக்கலாமா? என்று யோசிக்கத் தொடங்கிவிடும் போல் தெரிகிறது.

கட்சியின் தலைமைகளுக்கோ ஒவ்வொரு நாளும் படுகைக்கு போகும் முன் - போனவர்கள் கொண்டு போன வாக்குகள் எத்தனை, வந்தவர்கள் கொண்டு வந்த வாக்குகள் எத்தனை, இலாபம் எவ்வளவு, நஷ்டம் எவ்வளவு, ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய இன்னும் யாரை இழுக்கலாம் - என்று விளக்கு வைத்து விடிய விடிய கணக்குப் பார்க்க வேண்டிய கட்டாயம்.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் மஹிந்தவா? மைத்திரியா? வெற்றிப் பழத்தை எட்டித் தொடுவார் என்று கணக்குப் பண்ண முடியாத நிலையில் கணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், நோக்கர்கள் எல்லாம் நொந்து நூலாகி, அறுந்து அவலாகி, வெந்து வேம்பாகிப் போயிருக்கிறார்கள்.

பொது எதிரணியினரை பொறுத்தவரையில் கூட்டிப் பெருக்கி வழித்து, அள்ளி, வாரி எடுத்தால் வம்பாக கொஞ்சம் வாக்குகளை சேர்த்தெடுக்கலாம் என்ற நம்பிக்கை. அவர்களைப் பொறுத்த மட்டில் ஐ.தே.கவுக்கு இருக்கின்ற வாக்கு வங்கி, சரத் பொன்சேகா கட்சியின் வாக்கு, பொதுபலசேனாவின் வாக்குகள், ஜே.வி.பி.யின் வாக்குகள் (இன்னும் நேரடி ஆதரவை வழங்காவிட்டாலும் கிடைக்கலாம் - ஏனென்றால் வேறு மாற்று வழியில்லை), இவை தவிர ஆளும் கட்சி வசம் இருந்த பண்டாரநாயக்க குடும்பத்தின் வாக்குகள், சுதந்திரக் கட்சியிலிருந்து பாய்ந்து வந்த மைத்திரி, ராஜித, ஹிருணிக்கா (இவர் கடந்த மாகாண சபைத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்) ஆகியோரின் வாக்குகள், இது தவிர, கடந்த சில தேர்தல்களில் "என்னத்த போட்டு, என்னத்த செய்து..." என்ற வெறுப்பிலே வாக்களிக்காமல் விட்ட அளிக்கப்படாத வாக்குகளில் கொஞ்சம், மேலும் அரசில் இருந்து வர இருப்போரின் வாக்குகள் என்று ஏகப்பட்ட வாக்குகள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

ஆனால் ஆளும் கட்சியிலோ இவ்வாறாக கூட்டி வாரி அள்ள வேண்டிய அவசியமே இல்லாத நிலை. சுதந்திர கட்சியைத் தவிர இன்னும் அங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் விமல் வீரவன்ஸ, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார போன்றவர்களுக்கு பெரிதாக வாக்கு வங்கியென்று எதுவும் கிடையாது. ஆக இருப்பது சுதந்திரக் கட்சியின் வாக்குகள் மட்டுமே... இது தவிர... வடிவேலு நகைச்சுவையில் வருவது போல் "வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்" என்ற தனி மனிதனை நம்பும் இலட்சோப லட்சம் கிராமப் புறத்து வாக்காளர்கள்.. இவை மட்டுமே ஆளும் தரப்பின் எதிர்பார்ப்புகள்...

மேலே குறிப்பிட்ட அனைவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள வாக்காளர்களாகவே இருக்கிறார்கள். இந்த இறுக்கமான போட்டியில் இவர்களின் வாக்குகள் மஹிந்த - மைத்திரி இருவருக்கும் சரி சமமாக பிரிக்கப்படும் என்றே நம்பப்படுகிறது.

இவ்வாறான நிலையில், சிறுபான்மையினராகிய தமிழர், முஸ்லிம்கள், மலையக தமிழர்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் என கணிக்கப்படுகின்றது. இதற்காக சிறுபான்மை கட்சிகளை வளைத்து போடும் கைங்கரியங்களில் ஆளும் தரப்பும் - பொது எதிரணியும் மணலை கயிறாகத் திரிக்கும் கைங்கரியத்தில் இறங்கியிருக்கின்றன. ஆனால் நடாளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாண சபைத் தேர்தலிலோ அல்லது உள்ளூராட்சி தேர்தலிலோ நமது கட்சிகளும், தலைவர்களும் சொல்வதை கேட்டு வாக்களிக்கும் சிறுபான்மையின வாக்காளர்கள் - ஜனாதிபதித் தேர்தல் என்று வரும் போது தமக்கு பிடித்த ஒருவருக்கே வாக்குகளை வழங்குவது வழமையாக இருக்கிறது. ஆனாலும் சிறுபான்மை கட்சிகளை வளைத்துப் போட்டு - அந்தக் கட்சிகளின் தலைவர்கள் மூலம் இன்னும் கொஞ்சம் அதிகமாக பெற்றுக்கொள்ளலாம் என்பது பெரும்பான்மை கட்சிகளின் பேராசை.

அதற்காக மலையகக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் என்பவற்றை அமுக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; படுகின்றன; படும்... ஆனால் இந்தக் கட்சிகளை வளைத்து போடுவதென்பதும் பெரிய கஷ்டமான விடயமாக இருக்கப் போவதில்லை என்பதும் பெரும்பான்மை கட்சியினருக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் இவர்கள் தமது சமூகம், தமது மக்கள், தமக்கு வாக்களித்தவர்கள் என்று எவரையும் முன்னிலைப்படுத்துவதில்லை. தமக்கும் தமது கட்சிக்கும் என்னென்ன சலுகைகள் கிடைக்கும், அமைச்சர் பதவி எத்தனை, பிரதி அமைச்சர் எத்தனை என்ற ரீதியிலேயே அவர்களுடைய கோரிக்கைகளும், வேண்டுகோளும் இருக்கும் என்பது பெரும்பான்மை இன கட்சி தலைவர்களுக்கும் நன்றாகவே புரியும்.

IMAGE_ALT

ஆனால், இழுத்துப் போடுவதில் இடைஞ்சலாக இருப்பவர்கள் தமிழ்க் கூட்டமைப்பினரே. என்னத்தை, எவ்வளவை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் கீறல் விழுந்த சீ.டீக்கள் போல சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டு - கேட்டதையே கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் என்பது பெரும்பான்மை கட்சியினரின் எரிச்சல். அமைச்சு பதவி, அதி சொகுசு வாகனம் என்று எது கொடுத்தாலும் புறங்கையால் தள்ளிவிட்டு மக்கள், சமூகம், சுதந்திரம், விடுதலை '13+ என்று பழைய பல்லவியையே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருப்பவர்கள். இவர்களை வளைத்து போடுவதென்பது டைனோசருக்கு கோவணம் கட்டுவதைப் போன்ற, ஒரு கஷ்டமான செயற்பாடு என்பதும் அவர்களுக்குத் தெரியும். எல்லாம் சரி என்று ஏதோ தாஜா பண்ணி அவர்களைச் சேர்த்துக் கொண்டாலும், சேர்த்துக் கொள்ளும் கட்சியின் எதிர்த்தரப்பினர் அதனைப் பூதாகரமாக்கி கூட்டமைப்புக்கு தமிழீழம் வழங்க சம்மதித்துவிட்டார்கள், ஒப்பந்தம் போட்டுவிட்டனர், நாடு பிரியப்போகிறது, பௌத்தம் அழியப் போகிறது... என்று சிங்கள வாக்காளர்களை ஏமாற்றி தமது வாக்குகளை எல்லாம் ஆட்டையைப் போட்டுவிடுவார்களோ என்ற அச்சம் வேறு. இதனால் கூட்டமைப்பை அணுகவே ஆளும் தரப்பும் பொது எதிரணியும் தயக்கம் காட்டி வருகின்றன என்பது மட்டுமல்ல, எங்கே உங்களுக்குதான் எங்கள் ஆதரவு என்று கூட்டமைப்பினர் பகிரங்கரமாகச் சொல்லி சங்கடத்தில் சிக்க வைத்து விடுவார்களோ என்றும் அஞ்சிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் கூட்டமைப்பைத் தம் வசம் இழுத்துக் கொண்டால் இப்போது தங்களுக்குக் கிடைக்கும் வாக்குகளை விட பெருமளவான தமிழர்களின் வாக்குகளையும் லம்பாக லவட்டிக் கொள்ளலாம் என்பது பெரும்பான்மைகட்சித் தலைவர்களின் அசையாத நப்பாசையாக இருக்கிறது. ஏனென்றால் கூட்டமைப்பு சொன்னால் வடக்கு - கிழக்கு தமிழர்கள் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் சில, பல முஸ்லிம்கள், மலையக தமிழர்களும் கூட சொன்னதை கேட்பார்கள். அவர்கள் போடச் சொன்னவர்களுக்கு புள்ளடியைப் போடுவார்கள் என்பது பெரும்பான்மை தலைவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அதற்காக சொந்தக் காசிலே சூனியம் வைத்துக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை.

எனவே, தமிழ்க் கூட்டமைப்பை - 'கள்ளப் பெண்டாட்டி' போன்ற ஒரு நிலையிலேயே வைத்திருக்க பெரும்பான்மை கட்சிகள் விரும்புகின்றன. அதாவது உறவும் வேண்டும் - அதேநேரம் அது பகிரங்கமாகவும் இருக்கக்கூடாது என்ற தோரணையில், தமிழ்க் கூட்டமைப்பு தம்மை ஆதரிக்க வேண்டும், ஆனால் அது பகிரங்கமாக இருக்கக்கூடாது என்று அவர்கள் எதிர்பார்க்கிறர்கள். இதற்காக முயற்சிகளில் இறங்கியும் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்க் கூட்டமைப்போ கழுவிய மீனில் நழுவிய மீனாக இருக்கிறது. யாருக்கும் ஆதரவளிப்பதாக இதுவரை சொல்லவில்லை. சொல்லுமாப்போல் தெரியவுமில்லை... மாறாக தாங்கள் யாருக்காவது ஆதரவு கரம் நீட்டினால் அது பாரிய விளைவுகளை, பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சாக்குப் போக்குக் காட்டி வருகிறது.

உண்மையைச் சொன்னால் தற்போது தமிழ்க் கூட்டமைப்பு எந்தக் கட்சிக்கு ஆதரவு தரும் என்று சொல்லுகிறதோ... அந்தக் கட்சி நிச்சயமாக தோற்கும் நிலையே காணப்படுகிறது. அந்தளவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவு தரும் கட்சிக்கு எதிராக இனவாத பிரச்சாரங்கள் செய்யப்பட்டு - அந்தக் கட்சி துரோக கட்சியாக உருவகப்படுத்தப்பட்டு - பின்னடைவைச் சந்திக்க வேண்டிய நிலை ஒன்றுக்கு தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே தமிழ்க் கூட்டமைப்பினரின் தலைவர்கள் ஏதாவது ஒரு கட்சியை வெல்ல வைப்பதற்காக - அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதை விட - அதற்கு எதிர்க்கட்சிக்கு - அதாவது தோற்கவேண்டுமென்று கூட்டமைப்பினர் நினைக்கும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் - வெல்ல வேண்டும் என்று விரும்பும் கட்சியையே வெல்ல வைக்க முடியும் என்று கூட நகைச்சுவையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இம்முறை தமிழ் மக்களை யாரும் வழிப்படுத்தவார்கள் போல் தெரியவில்லை. உங்கள் சொந்தப் புத்தியைப் பாவித்துக் கொள்ளுங்கள் என்றே தமிழர்கள் கேட்கப்படலாம். ஆகேவே... தமிழர்கள் போட்டியாளர்களும் - அவர்களது வால்களும் வழங்கும் அற்ப சொற்ப சலுகைகளுக்கு அடிமையாகிவிடக்கூடாது. பனர்கள், கட் - அவுட்கள், பலெக்ஸ்கள் என்று பிரமாண்டங்களைப் பார்த்து ஏமாந்துவிடாமல் எவர் நல்லவர், நாணயமானவர், ஏமாற்றாதவர், எமது கஷ்டங்களைப் புரிந்து கொண்டவர், எல்லாவற்றிக்கும் மேலாக, இவற்றிக்கெல்லாம் தீர்வு தரக்கூடியவர் என்று அடையாளம் கண்டு ஒன்றுக்குப் பத்தாக சிந்தித்து... வாக்களிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

2005 ஆம் ஆண்டிலே நாம் எடுத்த தவறான முடிவே இன்று எம்மை தலைகுனிய வைத்திருக்கிறது. எனவே இனியும் ஒரு தவறுக்கு இடம்கொடாமல் சரியான தலைவரை தெரிவு செய்து வாக்களிக்க வேண்டியமை எங்கள் கடமை, பொறுப்பு, தார்மீகம், உரிமை.... லொட்டு லொசுக்கு.... எல்லாமும் ஆகும்.

- சலோஸியஸ் ராஜ்குமார் -