செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

முடிவுறாத கணக்குகளும் வெளிக்கிளம்பும் சந்தேகங்களும்?

Posted: 2014-12-12 02:56:59
முடிவுறாத கணக்குகளும் வெளிக்கிளம்பும் சந்தேகங்களும்?

முடிவுறாத கணக்குகளும் வெளிக்கிளம்பும் சந்தேகங்களும்?

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் அரசாங்கத்தால் சமுர்த்தி வங்கிச் சங்கம் உருவாக்கப்பட்டது. அரசு எதிர்பார்த்ததைப் போன்று கிராமிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அது உதவியது. கிராம மட்டத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்கு செல்லும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அவர்களிடம் இருந்து 50 ரூபா, 100 ரூபா என முடிந்தளவு பணத்தைப் பெற்று அதனை சமுர்த்தி வங்கிகளில் வைப்பில் இட்டு அதற்கான பற்றிச் சீட்டுகள், வங்கிப் புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.

வீடுகளுக்கு சென்று உத்தியோகத்தர்கள் பணத்தைப் பெறுவதால் மக்களும் கையில் உள்ள பணத்தை சேமிக்க தொடங்கினர். கிராமிய மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் இந்த வங்கிகள் அவர்களுக்கான சுயதொழில் கடன்கள், வாழ்வாதார உதவிகள், சமுர்த்தி முத்திரைகள் போன்ற அரச சலுகைகளையும் வழங்கி வருகிறது.

இவ்வாறு செயற்படும் சமுர்த்தி வங்கிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள திவிநெகும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது. புதிதாக பலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு இதன் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசின் நம்பிக்கைக்குரிய இவ்வங்கி தற்போது 'வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி' எனப் பெயர் மாற்றப்பட்டப்பட்டுள்ளது.

கிராமங்களை உள்ளடக்கி அவற்றுக்கென தனித்தனியாக சமுர்த்தி வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையிலேயே சமுர்த்தி வங்கிகளின் கணக்குகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் பல சமுர்த்தி வங்கிச் சங்கங்களில் கணக்குகள் சமப்படுத்த முடியாதவாறு காணப்படுகின்றன.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம், நெடுங்கேணி, வேப்பங்குளம், சின்னப்புதுக்குளம், ஓமந்தை, செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் சமுர்த்தி வங்கிச் சங்ககங்கள் இயங்குகின்றன. இவ் வங்கிகளுக்கான உத்தியோகத்தர்கள், கணக்கு ஆய்வாளர்கள், முகாமையாளர், பிராந்திய பணிப்பாளர் என நிர்வாக கட்டமைப்புக்களை நீண்டகாலமாக கொண்டிருந்த போதும் அவ் வங்கிக் கணக்குகளின் நிலுவை வருடா வருடம் சமப்படுத்தப்பட்டிருக்கவில்லை. வரவு, செலவு பற்றிய கணக்கறிக்கைகளும் சரியாக பேணப்படவும் இல்லை.

நெடுங்கேணி பகுதியில் உள்ள சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் கணக்கை ஆய்வு செய்த போது அங்கு நிதி மோசடி செய்யப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த நிதி மோசடி தொடர்பில் பொறுப்பேற்றுக் கொண்ட அந்தக் கிளையின் அதிகாரியான பெண் ஒருவர் மோசடிக்குரிய பணத்தை செலுத்தி விட்டு தற்போது வெளிநாடு சென்று விட்டார். இதன் பின் அவ் வங்கி கணக்குள் சமப்பட்டு விட்டன.

வேப்பங்குளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் உள்ள சமுர்த்தி வங்கி கணக்குகளும் இன்னும் சமப்படுத்தப்படவில்லை. இதனைச் சமப்படுத்த உத்தியோகத்தர்கள் கடந்த சில மாதங்களாக முயற்சி செய்து வருகின்ற போதும் இது வரை அந்த முயற்சி கைகூடவில்லை.

இவ்வாறு கணக்குகளைச் சமம்படுத்த தீவிரமாக ஒவ்வொரு கிளைகளும் முயன்று கொண்டிருக்கின்ற நிலையிலேயே அண்மையில் சின்னப்புதுக்குளம் பகுதியில் உள்ள சமுர்த்தி வங்கிச் சங்கம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
கணக்குகள் பார்க்க முற்பட்டதன் விளைவே இந்த தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றது என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

காலை வேளை சமுர்த்தி வங்கி கட்டத்திற்குள் இருந்து புகை வந்து கொண்டிருப்பதை அவதானித்த அப் பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

கணக்கு அறிக்கைகள், கடன் வழங்கும் பத்திரங்கள், கணக்கு பேணும் ஆவணங்கள் என பல ஆவணங்களே எரிக்கப்பட்டிருந்தன. மேசைகளில் வைக்கப்பட்டிருந்த அந்த ஆவணங்கள் தனித்தனியாக தீ மூட்டப்பட்டிருந்தன.

சமுர்த்தி வங்கியின் கதவு திறக்கப்பட்டு தீ வைக்கப்பட்டபின், மீண்டும் கதவும் பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக யன்னல் ஒன்றை சூத்திரதாரி திறந்து விட்டு சென்றிருந்தார் என விசாரணை செய்யும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் அங்கு காவலாளியாக கடமையாற்றியவரை பொலிஸார் கைது செய்து விசாரித்தனர்.

ஆனால் அவர் சம்பவ நேரம் தான் கடமையில் அங்கு இருக்கவில்லை, வீட்டிற்கு சென்று விட்டார் என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அங்கு ஆவணங்களை தீ வைக்க வேண்டிய தேவை சாதாரண ஒரு மனிதனுக்கு ஏற்படுமா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நம்பிக்கை பெற்ற சமுர்த்தி வங்கி, மக்களிடம் சிறுக சிறுக பணத்தை சேர்த்து இன்று அவற்றுக்கு கணக்கு கூற முடியாதளவுக்கு மாறியுள்ளது.

கிராமிய மக்களின் பெரும் நிதியைக் கொண்ட வங்கிகளாகிய சமுர்த்தி வங்கிகளின் கணக்குகள் சரிப்படுத்த முடியாது காணப்படுவது கிராமிய மக்களின் பொருளாதாரத்தை மேலும் பாதிப்படையச் செய்வதுடன், மக்களுக்கு வங்கிகள் மீதான நம்பிக்கையை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்பதே உண்மை.

-கே.வாசு-