செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

காடாய்ப் போன அரச ஊழியர்களின் வீட்டுத்திட்டம்!

Posted: 2015-01-19 03:48:56 | Last Updated: 2015-01-19 03:55:51
காடாய்ப் போன அரச ஊழியர்களின் வீட்டுத்திட்டம்!

காடாய்ப் போன அரச ஊழியர்களின் வீட்டுத்திட்டம்!

வவுனியா மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்கள் பலர் சொந்த வீடுகள், காணிகள் இன்றி வாடகை வீடுகளிலும் அரச விடுதிகளிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து பல ஆண்டுகளாக வவுனியாவில் தங்கி நின்று பலர் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு சொந்த வீடு, வாசல் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரச ஊழியர்களுக்கு ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் குடியேற்றம் ஒன்று அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த குடியேற்றத்தின் இன்றைய நிலை யுத்தப் பாதிப்புக்குள்ளான பிரதேசத்தின் நிலைமையை விட மிக மோசமானதாக உள்ளது.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டதாக ஏ- 9 வீதி ஒரமாக உட்செல்லும் வீதியில் ஓமந்தை, வேப்பங்குளம் அரச ஊழியர்களுக்கான வீட்டுத் திட்டம் அமைந்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்த பின் 2010 ஆம் ஆண்டு இப் பகுதியில் இருந்த காடுகளை வெட்டி அகற்றி அரச ஊழியர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொருவருக்கும் 4 பரப்பு காணி வீதம் பல்வேறு அரச திணைக்களங்களில் வேலை செய்த 732 உத்தியோகத்தர்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

காணிகள் வழங்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று காடாய் மாறியுள்ள அந்த குடியேற்றத்தில் வெறும் 48 குடும்பங்களே வசித்து வருகின்றன.

IMAGE_ALT

''2011 ஆம் ஆண்டு எனக்கு காணி தந்தார்கள். நான் வங்கியில் கடன்பெற்று ஒரு சிறிய வீட்டைக் கட்டி 3 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். இந்த வீட்டுத்திட்டத்திற்கு செல்லக் கூடிய போக்குவரத்து பாதைகள் எல்லாம் பற்றைகளாகவும் காடுகளாகவும் உள்ளன. றோட்டு சீர் இல்லாததால் பஸ் போக்குவரத்தும் இல்லை. வேலைக்கு போய், வருவதென்றால் ஏ-9 வீதி வரை நடந்தே செல்லவேண்டும். அதனால் அரச உத்தியோகத்தர்களின் குடியேற்றம் என்றால் யாருமே உள்ளே வருவதில்லை''.- என்கிறார் அப் பகுதியில் குடியிருக்கும் சு.வரதகுமார்.

வீதியோரங்களிலும், வீடுகளை அண்டியும் காட்டுத் துண்டங்களே காணப்படுகிறது. காட்டு விலங்குகளுக்கும், ஊர்வனவற்றுக்கும் பழகிப்போய்விட்டனர் இங்கு வசிக்கும் மக்கள். இங்கு திருடர்கள் கைவரிசைக்கும் குறைவில்லை. அரச ஊழியர்கள் வேலைக்கு சென்றுவிட்டால் அந்த வீடுகள் திருடர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறதாம்.

எஸ்.அரசரட்ணம், இவரும் இந்தக்குடியிருப்பில் இருக்கும் ஒருவர். அவரது கருத்து இப்படியிருக்கிறது.

''நான் வீடு கட்டி குறையில இருக்கு. இந்த பொருட்கள் விலையேற்றத்திலையும் கட்டின வீட்டை முழுமையாக கட்டி நிம்மதியாக இருக்க முடியவில்லை. இங்க ஒரு பனடோல் வாங்கக்கூட சின்னக்கடை இல்லை. அந்தரம் ஆபத்து என்றால் கடை தெரு இல்லாமல் நாம் என்ன செய்ய முடியும். அதனால் இன்னும் இங்க இருக்க நான் வரவில்லை''.- என்றார்.

அரச ஊழியர்கள் வேலைக்கு செல்லும் போது அவர்களின் சிறு பிள்ளைகளை கற்பிப்பதற்கு முன்பள்ளிகள் கூட அப் பகுதியில் இல்லை. இதனால் வேலைக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் தமது பிள்ளைகளுடன் பல கிலோமீற்றர் தூரத்திற்கு சென்று பிள்ளைகளை முன்பள்ளிகளில் சேர்த்துவிட்டே வேலைக்கு செல்கின்றனர்.

IMAGE_ALT
எஸ்.ஜெகதீஸ்வரி, இவரும் இந்த குடியிருப்புக்குரியவர்.

''இங்க ஒழுங்கான றோட்டு இல்லை. கடையில்லை. எங்கட மத வழிபாட்டுக்கு கூட ஒரு வழிபாட்டுத் தலம் இல்லை. அரச உத்தியோகத்தர்களுக்கு என்று காணி தந்தார்கள். அதன் பின் இங்க இருக்கின்ற தேவைகள் பற்றி கவனிக்கிறார்கள் இல்லை. அதனால் இது இப்ப ஒரு ஆதிவாசிகளின் வாழிடம் போன்று மாறி வருகிறது'' என்கிறார்.

காணிகளைப் பெற்ற 732 அரச உத்தியோகத்தர்களில் 200 பேர் வரை வீடுகளை முழுமையாகவும், பகுதியளவும் கட்டியுள்ளனர். ஆனால் அவர்களும் அங்கு நிரந்தரமாகக் குடியேறவில்லை. இக் குடியேற்றத்திற்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமையால் சொந்த காணி இருந்தும் வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலையே இவ் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இக் குடியேற்றத்தில் பொறியிலாளர்கள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள் எனப் பல துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கூட காணிகளை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களால் கூட தமது குடியேற்ற தேவைகளை முழுமையாக பெற முடியாத நிலை.

IMAGE_ALT

ஒரு மாவட்டத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச உத்தியோகத்தர்களின் கிராமத்திற்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் கிராமங்கள் தொடர்பில் சொல்லவே தேவையில்லை.

எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் ஆதிவாசிகளின் வாழிடம் போன்று மாறி வரும் ஓமந்தை, வேப்பங்குளம் அரச வீட்டுத் திட்டத்தை பாதுகாக்க என்ன செய்யப் போகிறார்கள் என்பதே பலரதும் ஏக்கங்கள்.

-கே.வாசு-