செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வடக்கு மக்களுக்கு மைத்திரி யுகம் விடிவைத் தேடித் தருமா?

Posted: 2015-01-27 05:07:59
வடக்கு மக்களுக்கு மைத்திரி யுகம் விடிவைத் தேடித் தருமா?

வடக்கு மக்களுக்கு மைத்திரி யுகம் விடிவைத் தேடித் தருமா?

பலத்த எதிர்பார்ப்புகள், சூழ்ச்சிகள், மிரட்டல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் நினைத்தமாத்திரமின்றி அமைதியாக நடைபெற்று, மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.

ஆடம்பரம் இல்லாது வெறும் 6,000 ரூபா செலவில் தனது பதவியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, புதிய அமைச்சரவையை அமைத்து, முதல் நாடாளுமன்ற அமர்வையும் நடத்திவிட்டார்.

புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர், புதிய அமைச்சர்கள் என ஏகப்பட்ட மாற்றங்கள்.

முன்னாள் ஜனாதிபதி காலத்தில் அதிக ஊழல்கள் என குவியும் முறைப்பாடுகள் ஒரு புறம், பழைய அமைச்சர்கள் பலரை மீண்டும் புதிய அரசில் உள்வாங்க கூடாது என மக்கள் எதிர்ப்புக்கள் மறுபுறம், இப்படி பல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

மஹிந்த சிந்தனை மறைந்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவாறு மைத்திரியுகம் ஆரம்பித்து 100 நாள் வேலைத் திட்டம் நடைபெறதொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினையை இந்த அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் அவாவாகவுள்ளது. ஆனால் அதற்கு சில வருடங்கள் எடுக்கலாம் என்று சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இதனால் மக்கள் முன்னுள்ள அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாகவுள்ளது.

மைத்திரி யுகம் விடிவைத் தருமா? என்ற ஏக்கத்துடன் இருக்கும் வவுனியாவின் சில கிராம மக்களின் ஏக்கங்கள் இவை...

வவுனியா பாரதிபுரம் மக்கள் இப்படி சொல்கிறார்கள்

IMAGE_ALT

பாரதிபுரம்

வவுனியா, பாரதிபுரம் விக்ஸ் காட்டுப் பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்கள் குடியேறியுள்ளனர்.

இவ்விரு பகுதியினருக்கும் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டன. தமிழ் மக்களின் சிறிய குடிசை வீடுகள் கூட பல தடவைகள் தீக்கிரையாகின. இங்குள்ள பல குடும்பங்களை வெளியேறுமாறு அச்சுறுத்தலும் விடப்பட்டன.

இவை தொடர்பில் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் எனப் பலரிடமும் முறைப்பாடுகள் செய்தும் எந்த தீர்வும் இல்லை.

இதனால், மனுக்கள் வழங்குவதும், ஆர்பாட்டம் செய்வதும் இங்குள்ள மக்களின் வாடிக்கையாகிவிட்டன.

தற்போது மைத்திரி யுகத்தில் ஆவது அரச அதிகாரிகள் நேர்மையான முறையில் தங்களின் பிரச்சினையை அணுகி அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தருவார்களா என்பதே ஆதங்கமாகவுள்ளது என்கின்றனர்.

புதியவேலர் சின்னக்குளம் மக்களின் கவலை

IMAGE_ALT

புதியவேலர் சின்னக்குளம்

ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமம் மகிழங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தாம் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மீள்குடியேறியுள்ளோம்.

மழை பெய்யத் தொடங்கினால் மழை நீரும், வெள்ள நீரும் நேரடியாகவே வீட்டுக்குள் வருகிறன. இதனால் இடம்பெயர்ந்து பொது கட்டடங்களில் நாம் தஞ்சம் புகுவது வழமை.

அப்பொழுது சாப்பாட்டுக்காக நாம் பாடசாலைகளில் தஞ்சமடைகிறோம் என்று பொறுப்பு வாய்ந்த சிலர் கேலி செய்தார்கள். எமது பிள்ளைகளுக்காக வாழவேண்டும் என்பதற்காக நாம் அவமானத்தின் மத்தியிலும் வாழ்ந்தோம். எமக்கு வீட்டுத் திட்டம் தந்தால் நாம் ஏன் இப்படி வரபோகிறோம், வாழப்போகிறோம்?

காணி பிரச்சினை என்று கூறி வீட்டுத் திட்டம் இல்லை என்கிறார்கள். எங்களுடைய இந்த காணிப் பிரச்சினையை தீர்த்து தரவேண்டும் இந்த மைத்திரியுகம் என்கிறார்கள் அவர்கள்.

பூந்தோட்டம் நலன்புரி நிலைய மக்களின் தவிப்பு

IMAGE_ALT

பூந்தோட்டம்

போர்க் காலத்தில் இடம்பெயர்ந்த எம்மை குடியமர்த்துவதற்காக இந்த நலன்புரி நிலையம் உருவாக்கப்பட்டது.

ஆனால் யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் நெருங்கும் இவ்வேளையிலும் காணிகளற்ற எமக்கு இந்த முகாம்தான் தஞ்சம்.

நீண்டகாலமாக முகாமுக்குள் இருக்கும் எம்மை யாருமே கணக்கெடுப்பதில்லை.

எமக்கு காணிகளை வழங்கி குடியமர்த்த வேண்டும் என கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட போதும் அந்த முடிவு கிடப்பிலேயே உள்ளது.

எனவே எமது முகாம் வாழ்க்கைக்கு இந்த அரசாங்கம் விடுதலை தரவேண்டும் என்கின்றனர் இங்குள்ள மக்கள்.

மீடியாபாம் மக்களின் அவலம்

IMAGE_ALT

மீடியாபாம்

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள மீடியாபாம் கிராமம் 1975 ஆம் ஆண்டு படித்த வாலிபர் திட்டத்திற்கு வழங்கப்பட்ட காணிகளின் மூலம் உருவானது.

அடர்ந்த காடுகளுக்குள் இருக்கும் இக் கிராம மக்கள் ஒவ்வொரு மழை காலத்திலும் இடம்பெயர்வது வழமை.

மழைக்காலத்தில் மட்டும்தான் எமது கிராமத்தை பலருக்கு தெரியும். பின்னர் மறந்து விடுவார்கள். போக்குவரத்து பாதை இல்லை. பிரதான வீதிக்கு வருவதற்கு காட்டுக்குள்ளால் 5 கிலோமீற்றருக்கு நடந்து வரவேண்டியுள்ளது. இதனால் எமது பிள்ளைகள் பாடசாலை கூட செல்ல முடிவதில்லை. காட்டு விலங்குகள் எமது வாழ்க்கையில் பழகிப் போய்விட்டன.

முன்னர் வடக்கின் வசந்தம் பல இடங்களில் வீசியது. ஆனால் எமது கிராமத்திற்கு புயல் தான் வீசியது. இந்த மைத்திரியுகம் ஆவது எமது கிராமத்திற்கு வருமா? என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பு.

அரசன்குளம் கிராம மக்களின் பரிதாபம்

IMAGE_ALT

அரசன்குளம்

ஓமந்தை, அரசன்குளம் கிராமம் யுத்த காலத்தில் முன்னரங்க நிலையாக இருந்த பிரதேசம். அப்போது இருந்த முன்னரங்க காவல் நிலைகள் கூட முழுமையாக அகற்றப்படாத நிலையில் தற்போதும் உள்ளன.

இதனால் தோட்டங்களை கூட நாம் ஒழுங்காக செய்ய முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

வீட்டுவசதிகள் எமக்கு எட்டாக்கனியாகியுள்ளது. சிலருக்கு ஒருவருடத்திற்கான தற்காலிக சிப் போட் வீடுகள் தந்தார்கள். தற்போது அவை உக்கி விழுகின்றன. அவ்வப்போது விறகுக்குத் தான் அவை உதவுகின்றன.
இந்த புதிய ஜனாதிபதி மைத்திரி 100 நாள்களில் எமது கிராமத்திற்கு மைத்திரி யுகத்தை கொண்டு வரவேண்டும் என்கின்றனர் அவர்கள்.

மீள்குடியேறிய நிலையிலும் கடந்த அரசாங்கத்தின் 'மஹிந்த சிந்தனையில்' இருந்து தமது தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாதும் அவல வாழ்வு வாழும் சில கிராமங்களினதும் மக்களினதும் இன்றைய நிலையே இவை.

இது போல் பல கிராமங்கள் இன்று வடக்கில் உள்ளன. இவற்றுக்கு 'மைத்திரியுகம்' என்ன செய்யப் போகின்றது?

-கே.வாசு-