செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பணம் பறிக்கும் பாடசாலைகளும் கேள்விக்குறியாகும் இலவச கல்வியும்!

Posted: 2015-02-06 05:40:04
பணம் பறிக்கும் பாடசாலைகளும்  கேள்விக்குறியாகும் இலவச கல்வியும்!

பணம் பறிக்கும் பாடசாலைகளும் கேள்விக்குறியாகும் இலவச கல்வியும்!

புதிய ஆண்டு பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. மாணவர்களும் புதிய வகுப்புக்களுக்கு சென்று கல்வியை தொடர ஆரம்பித்துள்ளார்கள். தரம் ஒன்றுக்கு கால் எடுத்து வைக்கும் சின்னஞ்சிறுசுகளின் கால் கோல் விழா நடைபெற்று வருகிறது.

பாடசாலை வாசலில் தமது பிள்ளைகளை கொண்டு சென்று இறக்கிட்டு, எனது பிள்ளை படித்து நாளை இந்த ஊரில் ஒரு பெரிய ஆளாக வரவேண்டும் என ஏங்கும் பெற்றோரின் எண்ணங்கள் ஒருபுறம், நாங்கள் பாடசாலைக்குப் படிக்க போகிறோமே என்ற மாணவர்களின் குதுகலம் மறுபுறம் என ஓடிக் கொண்டிருக்கிறது இந்த மாதம்.

ஆனால் பல பாடசாலைகளில் நடைபெறுகின்ற சம்பவங்கள் சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவின் இலவச கல்வித் திட்டத்தை கேள்விக்குட்படுத்தி, மாணவர்களின் கல்வியை மழுங்கடிப்பதாக அமைகின்றது.

குறிப்பாக பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியை பெறச் செல்லும் மாணவர்கள் அந்தப் பாடசலைகளின் நடைமுறைகளால் கல்வியைத் தொடரமுடியாத நிலை ஏற்படுகிறது.

நாட்டில் பல இடங்களில் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன.

அவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட பாடசாலைகளில் நடைபெறும் சில உதாரண, உண்மைகள் இங்கே பதிவிடப்படுகிறது.

பரீட்சைக்கு முன்பு வெளியாகும் வினாத்தாள்களும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும்

கடந்த வருடம் வலய மட்டத்தால் நடத்தப்பட்ட தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் பல வெளியாகி இருந்தன.

குறிப்பாக சில வினாத்தாள்கள் தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்த பாடசாலை ஆசிரியர்கள் சிலர் அதனை மாணவர்களுக்கு வழங்கி பணம் பெற்று கருத்தரங்கை நடத்தியிருந்தனர். இன்னும் சிலர் அவ்வினாத்தாள்களின் வினாக்களை மாணவர்களிடம் தனியார் கல்வி நிலையத்தில் வைத்து வழங்கியிருந்தனர்.

மாகாண மட்டத்தால் நடத்தப்பட்ட சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சையை கூட வழங்கப்பட்ட நேர அட்டவணையை மீறி அதற்கு முதலே நடத்தி வினாத்தாள்ளை வெளியிட்ட பாடசாலையும் வவுனியாவில் உள்ளது.

இவை தொடர்பாக எந்த நடவடிக்கையும் இது வரை இல்லை. இந்த வருட பரீட்சைகளிலும் இந்த நிலை தொடர வாய்புள்ளதா என்ற சந்தேகம் மாணவர் மத்தியில் எழுந்துள்ளது.

மாணவர்களை கட்டாயப்படுத்தும் ஆசிரியர்கள்

வவுனியா நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புக்களுக்கு கற்பிக்கும் ஆசியர்கள் பலர் தமது பாடசாலையில் கற்கும் மாணவர்களை தம்மிடம் கற்பதற்கு தனியார் கல்வி நிலையம் வருமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

பாடசாலை கற்றலுக்கு மேலதிகமாக தமது அடைவுமட்டத்தை எதிர்பார்த்தே மாணவர்கள் தனியார் கல்வி நிலையம் செல்கிறார்கள். ஆனால் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் சிலர் மாணவர்களை பாடசாலைக்கு வெளியிலும் தம்மிடமே கற்க வேண்டும் என கூறி வருகின்றமை பெற்றோர், மாணவர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு செல்லாத மாணவர்கள் பாடசாலையில் குறித்த ஆசிரியரால் பழிவாங்கப்படுகிறார்கள். இதனால் வெளியில் சொல்ல பயந்து பல மாணவர்கள் குறித்த ஆசிரியர்களின் உழைப்புகாகவே தம்மை அர்ப்பணிக்கிறார்கள். பெற்றோரும் இதனை வெளியில் சொன்னால் தமது பிள்ளையின் எதிர்காலம் பாதித்து விடும் எனக் கருதி மௌனமாக இருக்கின்றனர்.

பாடசாலைக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு லஞ்சம் வாங்கும் பாடசாலைகள்

பாடசாலையில் மாணவர்களுக்கு அனுமதி வழங்கும் போது பாடசாலை அபிவிருத்திக்கு நிதி இல்லை. பாடசாலையில் தளபாடப் பற்றாக்குறை உள்ளது எனக் கூறி சில பாடசாலைகள் மாணவர்களின் பெற்றோரிடம் இருந்தும் மாணவர்களிடம் இருந்தும் பணம் பெறுகின்றன. இது பற்றி தெரிந்தும் உரிய அதிகாரிகள் இது வரை நடவடிக்கை எடுத்ததேயில்லை.

மஹிந்தவின் வருகைக்காக பெற்ற பணம் எங்கே?
வவுனியா நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் மஹிந்தோதய ஆய்வு கூடத் திறப்பு விழா நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி வருவார் என்று அறிவிக்கப்பட்டதால், அவரை செங்கம்பளம் விரித்து கோலகலமாக வரவேற்க மாணவர்களிடம் இருந்து 1000 ரூபா பணம் பாடசாலை ஒன்று பெற்றது.

தமது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை பெற்றோர் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, கூலி வேலை செய்து அந்த பணத்தை கொடுத்தார்கள். அந்த பணத்திற்கு நடந்தது என்ன?

பரீட்சை வினாத்தாள்களில் குழப்பம்

கடந்த தவணைப் பரீட்சையில் இடம்பெற்ற சில பாட வினாத்தாள்களிலும் குழறுபடி ஏற்பட்டுள்ளது.

சமய பாட பரீட்சை என இடைநிலைப் பிரிவு மாணவர்கள் பரீட்சைக்கு சென்றிருந்தனர். ஆனால் அங்கு பகுதி ஒன்றில் சமய பாடமும் பகுதி இரண்டில் வேறு பாட வினாக்களும் அமைந்திருந்தன.

பரீட்சைக்கட்டணம் செலுத்தி அச்சிட்டு பெற்றுக் கொள்ளும் வினாத்தாள்களை கூட சரி செய்ய முடியாது தடுமாறும் அதிகாரிகளால் மாணவர்களின் பரீட்சை கனவு சிதறியேபோகிறது.

பாடசாலைக்குள் பணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள்

பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் சில பரீட்சைகளுக்கு தனியார் நிறுவனங்கள் வினாத்தாள்களை வழங்குகின்றன.

இதன் போது தமது விளம்பரத்தை வினாத்தாளில் காட்சிப்படுத்துவதுடன் அம் மாணவர்களின் முழு விவரத்தையும் அவை கோருகின்றன. அவற்றைப் பெற்று தமது நிறுவனங்களில் கணினி, ஆங்கிலம் மற்றும் தொழில் வாய்ப்பு கற்கைகளை கற்கலாம் எனக் கூறி மாணவர்களிடம் இருந்து பணத்தை பெறுகின்றன.

குறிப்பாக கடந்த வருடம், பாடசாலை ஆசிரியர்கள் சிலரின் ஆதரவுடன் பாடசாலைக்கு சென்ற தனியார் கணினி நிறுவனம் ஒன்று தமது கற்கைநெறிகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்துவிட்டு அவற்றை தொடர தமது நிறுவனத்திற்கு வருமாறு பணித்துள்ளது.

அவ்வாறு சென்ற மாணவர்கள் 1000 ரூபா முதல் 4000 ரூபா வரை அந்த நிறுவனங்களுக்கு செலுத்தியுள்ளனர்.

ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் கற்கைகள் இடம்பெறவில்லை. குறித்த நிறுவனம் பூட்டியே உள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என மாணவர்கள் கையில் பணம் செலுத்திய சிட்டைகளுடன் அலைகிறார்கள்.

பாடசாலை அழகுபடுத்தலுக்காக பணம் சேர்ப்பு

பாடசாலையை அழகாக வைத்திருக்க வேண்டும் எனக் கூறி வர்ணப்பூச்சுக்கள் இடுதல், பூங்கன்றுகள் நடுதல், பெயர்பலகைகள் நாட்டுதல் என பல காரணங்களை கூறி பணம் பெறப்படுகிறது. மாகாண, மத்திய அரசுகள் பாடசாலைக்கு நிதி ஒதுக்குவதே இல்லையா என கண்ணீர் விடுகின்றனர் பெற்றோர்.

தாராள தொலைபேசி பாவனை

பாடசாலை நேரங்களில் பாடசாலையில் ஆசிரியரும் சரி, மாணவர்களும் சரி தாராளமாக தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர்.

பாடத்திற்கு செல்லும் ஆசிரியர் தொலைபேசியில் பல மணிநேரம் தன் குடும்ப கதை சோக கதைகளை கதைத்து விட்டு பாடத்தை தொடங்க மணியும் அடித்து விடுகிறது. உடனே பாடம் முடிந்து விட்டது என செல்கிறார்.

அதேபோல் மாணவர்களும் பாடசாலைக்குள் தொலைபேசிகளை கொண்டு செல்கின்றனர். மாணவர்களுக்கிடையில் பாடசாலைக்குள் குழப்பம் வந்ததும் பாடசாலையில் இருந்து வெளியில் உள்ள அவர்களின் நண்பர்களுக்கு பறக்கிறது தொலைபேசி அழைப்பு. உடனே பாடசாலை வாயிலில் குவியும் இளைஞர்களால் சண்டை ஏற்படுகிறது. இதை வேடிக்கை பார்கிறது சமூகம்.

இந்த வருடம் மாற்றத்திற்கான காலம். நாட்டில் பல மாற்றங்கள். புதிய கல்வி அமைச்சர். கல்வி துறை ஊழலை ஒழிக்க நடவடிக்கை என பேசப்படுகின்றன. ஆனால் இவற்றில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லை. இதில் மாற்றத்தை ஏற்படுத்த யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோரும் எதிர்கால கனவுகளுடன் அலைகிறார்கள். விடை தருமா மைத்திரியுகம்.

-கே.வாசு-