செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அரசாங்கம் சொல்லும் அபிவிருத்தியும் அமைதி வாழ்க்கையும் எங்கே!

Posted: 2015-02-25 07:06:29
அரசாங்கம் சொல்லும் அபிவிருத்தியும் அமைதி வாழ்க்கையும் எங்கே!

அரசாங்கம் சொல்லும் அபிவிருத்தியும் அமைதி வாழ்க்கையும் எங்கே!

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் நிறைவடையும் நிலையிலும் யுத்த பாதிப்புக்களும் அதன் அவலங்களும் இன்னும் மக்கள் வாழ்வியலில் இருந்து அகலவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னாவது தமக்கு நல்லது நடக்கும் என எதிர்பார்த்த மக்கள் அதற்காக தமது வாக்குகளையும் பயன்படுத்தி இருந்தனர். மைத்திரி யுகம் ஆரம்பித்து அதன் 100 நாள் வேலைத்திட்டத்தில் அரைவாசி நாட்களும் நிறைவடையப் போகிறது. ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் மட்டும் விடை இன்றி தொடர்கிறது. அத்தகைய ஒரு கிராமமே மருதங்குளம்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமமே மருதங்குளம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அமையாரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற முக்கியத்துவம் மிக்க இராணுவ நடவடிக்கைகளில் ஒன்று 'ஜயசிக்குறு'. இதன் காரணமாக 1997 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர்.

இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் தாங்கியவர்களாக யுத்தம் முடிவடைந்த பின் 2010 ஆண்டும் மீள்குடியேற்றப்பட்டனர். சொந்த ஊர், மீண்டும் தாம் பிழைத்து விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் வந்து மீள்குடியேறிய மக்கள் இன்று எந்த அரச உதவிகளும் கிடைக்காத மக்களாக வாழ்வதற்காக கண்ணீர் விடுகின்றனர்.
தமது துயர வாழ்வு தொடர்பாக மருதங்குளம் கிராமத்தைச் சேர்ந்த க.சிவபாலன் இவ்வாறு கூறுகின்றார். "ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையால இடம்பெயர்ந்த நாம் 2010 ஆண்டு மீள்குடியேறினோம். அப்போது 12 தகரங்களும், 8 சிமெந்து பைக்கற்றுகளும் தந்தாங்க. அதோட எம்மை எல்லா அரச அதிகாரிகளுக்கும் மறந்து போச்சு. நம்ம முயற்சியால தான் தற்போது உயிரோட வாழுறம்" - என்கிறார்.

இங்கு 59 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்ட போதும் அவர்களுக்கு அபிவிருத்தி என்ற சொல்லைத் தவிர அதன் பயன் என்னவென்று தெரியாது வாழ்கின்றனர். ஒரு குடும்பத்திற்கு கூட இருக்க ஒரு நிரந்தர வீடு கொடுக்கப்படவில்லை. யுத்ததத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு என பல நாடுகள், நிறுவனங்களின் உதவியுடன் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால் எமது கிராமத்தையே மறந்துவிட்டனர் என்கின்றனர் மக்கள்.

கொட்டும் மழையில் ஒழுகும் வீடுகளுக்கும் இடிந்து விழும் மண்சுவர்களுக்கும் வாழும் இவர்கள் கோடை காலத்தில் கூட நிம்மதியாக வாழமுடியவில்லை. எறிக்கும் வெயில் நேரடியாகவே உக்கிய கூரைகள் ஊடாக வீட்டை வந்தடைகிறது.
ஜீ.பேபிசகிலா என்ற இப்பகுதி பெண்ணொருவர் கூறுகையில், "நாம இங்க வந்து மீள்குடியேறிய போதும் சொந்தக் காணி என்ற நிம்மதியைத் தவிர வேறு எதுவும் இல்லை. மலசல கூடம் இல்லை. பொம்புள்ள பிள்ளைகள் கூட காட்டுக்க தான் போறது. அங்க போய் வரக்கு முன் பாம்புகளுடன் போராட்டம். இப்படியே போகுது நமது வாழ்ககை. வீட்டையும் மலசலகூடத்தையும் கட்டித் தந்தால் நாம நிம்மதியாக வாழலாம்" என்கின்றார்.

மலசலகூட வசதியும் இவர்களுக்கு இல்லை. இரவு வேளைகளில் காடுகளுக்கு செல்ல முடியாது இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். காட்டுப்பகுதிக்குள் இருந்து வரும் யானை, பாம்பு என மிருகங்களுடனேயே போகிறது இவர்களது வாழ்க்கை.
இக்கிராமத்திற்கான ஓர் அடையாளம் போக்குவரத்து பாதை மட்டுமே. ஆனால் அது கூட தற்போது சீராக இல்லை. பாடசாலைக்கு செல்வதென்றால் 3 கிலோமீற்றர் நடந்தே செல்ல வேண்டும். மழை காலங்களிலும் கடும் கோடை காலத்திலும் வெள்ளை சீருடையுடன் போகும் மாணவர்கள் செந்நிற சட்டையுடனேயே வீடு வந்து சேருகிறார்கள். நம்ம பிள்ளைகளுக்கு ஆசைக்கு கூட பஸ்ஸை காட்ட முடியாது. ஏன் என்றால் நம்ம ஊருக்க பஸ் போக்குவரத்தே இல்லை. ஒரே ஒரு சின்ன வான் மட்டும் எங்கட கிராமத்திற்கு அண்மித்த பாதையூடாக போகும். அதில போய் தான் போகனும். அது எப்ப வரும். எப்போ போகும் என்பது அதன் ரைவருக்கே தெரியுமோ தெரியாது என்கின்றனர் இக் கிராம மக்கள்.
இக்கிராமத்தில் விதவைகள் கூட அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கான சுயதொழில் உதவித் திட்டங்கள் கூட வழங்கப்படவில்லை. ஆனால் நாட்டில் அபிவிருத்தி நடக்குது. எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்கின்றனர். எமது கிராமம் இலங்கையில் இல்லையா என்ற சந்தேகம் தான் அரச அதிகாரிகளின் கதையை கேட்டால் வருகிறது என்கின்றனர் விதவைப் பெண்கள்.

இவ்வாறு, அடிப்படை வசதிகள் இன்றி தாம் வாழும் துன்ப வாழ்க்கைக்கு மத்தியிலும் 3 கிலோமீற்றர் தூரம் நடத்து வந்து மாற்றத்திற்காகவும் தமது தேவைகளை புதிய அரசாங்கம் என்றாலும் கவனிக்கும் என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு என்ன தீர்வை வழங்கப்போகிறது என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பு.

- கே.வாசு -