செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மரணத்திற்கு காரணம் யார்? சரண்ஜாவின் சோகம் நிறைந்த வாழ்க்கையும் மர்ம மரணமும்...

Posted: 2015-03-19 06:07:50 | Last Updated: 2015-03-19 06:13:16
மரணத்திற்கு காரணம் யார்? சரண்ஜாவின் சோகம் நிறைந்த வாழ்க்கையும் மர்ம மரணமும்...

மரணத்திற்கு காரணம் யார்? சரண்ஜாவின் சோகம் நிறைந்த வாழ்க்கையும் மர்ம மரணமும்...

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். இலங்கை மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் பெண்கள் உரிமை தொடர்பான விழிப்புணர்வுகளும் ஆடம்பர நிகழ்வுகளும் அன்றைய தினத்தில் நடந்தன. ஆனால் சமூகத்தில் இடம்பெற்ற பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை தட்டிக் கேட்பதற்கும் அதனை தடுப்பதற்கும் தான் யாரும் இல்லை. ஏனெனில் சமூகத்தில் அவ்வப்போது ஏற்படுகின்ற சில சம்பவங்கள் அதனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

அந்த வகையில் கடந்த 27ஆம் திகதி வவுனியா, கனகராயன்குளம், மன்னகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய செல்வராஜா சரண்ஜா என்ற சிறுமியின் மர்ம மரணமும் வவுனியா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விதியால் விரட்டப்பட்ட சரண்ஜா

யாழ்ப்பாணத்தையும் கண்டியையும் இணைக்கும் ஏ9 பிரதான வீதியில் கனகராயன்குளத்துக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட ஒரு கிராமமே மன்னகுளம். கடும் யுத்தம் நடந்த காலத்தில் தான் சரண்ஜா அவளது குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தாள்.

மூத்தவர் அண்ணன். இளமைக் காலம் முதல் விளையாட்டு, கல்வி என்பற்றில் சுறுசுறுப்பாக இயங்கிய சரண்ஜாவின் வாழ்க்கையில் விதி விளையாடத் தொடங்கியது. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்த சரண்ஜாவின் தந்தை 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் ஒன்றில் மரணமடைந்தார். அந்த இழப்பின் வலியை இவள் மட்டுமன்றி முழு குடும்பமுமே ஏற்றுக் கொள்ளமுடியாது தினம் தினம் வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது.

IMAGE_ALT

சரண்ஜாவின் தாயின் சகோதரர்கள் மற்றும் பாட்டி ஆகியோரின் வேண்டுதலின்படி சரண்ஜாவின் தாய்க்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டது. அவர்கள் வாழ்க்கை பயணம் தொடர்ந்தபோது அவர்களுக்கும் இரு குழந்தைகள் பிறந்தன. சரண்ஜாவுக்கு இப்போ ஓர் அண்ணன், ஒரு தங்கை, ஒரு தம்பி என அழகாக மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தாள். ஆனால் விதி இவர்களை துரத்திக் கொண்டே சென்றது. கடந்த 2006ஆம் ஆண்டு சரண்ஜாவின் அன்பு தாய் இவர்கள் எல்லோரையும் தனிமையில் விட்டுவிட்டு தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்காது தீ மூட்டி தற்கொலைசெய்துகொண்டார்.

தாயின் இழப்பால் துடித்துப்போன சரண்ஜா மற்றும் சகோதரர்களுக்கு பாட்டியாரான (தாயின் தாய்) சீதையம்மா ஆறுதல் கொடுத்தாள். தாயின் கிரியைகள் முடிந்து 8 நாள்கள் முடிவதற்குள் தந்தையும் நஞ்சருந்தி தற்கொலை செய்தார். மீண்டும் ஏற்பட்ட அந்த இழப்பு கடினமானதாக இருந்தாலும் ஏற்கனவே இரு இழப்புக்களால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுவர்கள் அதனையும் தாங்கிக் கொண்டனர்.

ஆறு பிள்ளைகளுக்கும் தாயான பாட்டி சீதையம்மா

அதன் பின் பாட்டி சீதையம்மாவின் ஆதரவிலேயே அவர்கள் வளர்ந்து வந்தனர். தனது பிள்ளைகள் எல்லோரையும் திருமணம் செய்து வைத்துவிட்டும் சில பிள்ளைகளை காலனிடம் பறிகொடுத்து விட்டும் இருந்த சீதையம்மா, பேரப்பிள்ளைகளுடன் அன்பாக இருந்து கவனித்து வந்தாள். இறுதி யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்துக்குள் இருந்து தனது நான்கு பேரப்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்த போது, சீதையம்மாவின் இன்னொரு மகள் குடும்பம் யுத்தம் காரணமாக காயமடைய அவளின் இரு பிள்ளைகளையும் தானே இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் அழைந்து வந்தாள். செட்டிகுளம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த சீதையம்மா தனது காயப்பட்ட மகளின் குடும்பத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இன்று வரை எந்த தகவலும் இல்லை. அந்த பிள்ளைகளையும் இவளே வளர்க்க வேண்டியதாயிற்று.

IMAGE_ALT

மீள்குடியேற்றம் இடம்பெற்ற போது தனது கிராமமான மன்னகுளத்தில் ஆறு பேரப்பிள்ளைகளுடன் சிறிய கொட்டில் வீடொன்றில் குடியேறிய சீதையம்மா கூலி வேலை செய்து அவர்களைப் பார்த்து வந்தாள். பொருள்களின் விலையேற்றமும் பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிப்பும் சீதையம்மாவை வெகுவாகவே பாதித்தன. யாரும் அவளைக் கண்டுகொள்ளவில்லை. தனது பிள்ளைகளே அவ்வப்போது உதவியுள்ளன. அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் கண்ணில் சீதையம்மாவின் வலி தெரியவில்லை. ஏனெனில் அவள் வறுமையுடன் ஒரு கொட்டிலுக்குள் இருந்ததால்...

சிறுவர் இல்லத்தில் தங்கிய சரண்ஜா

ஒரு பிள்ளையையே படிப்பிக்க கஷ்ரப்படும் பலரைப் பார்த்திருகிறோம். ஆனால் இந்த சீதையம்மா 6 பிள்ளைகளையும் கற்பித்திருந்தாள். வகுப்பு கூட கூட செலவும் அதிகரித்தது. இதனால் சரண்ஜாவின் அண்ணன் படிப்பை நிறுத்தி விறகு வெட்டச் சென்றான். சீதையம்மாவின் முதுமையும் வருத்தமும் அவனை இந்த நிலைக்கு கொண்டு சென்றது. விறகு வெட்டி விற்று வரும் பணத்தில் குடும்ப செலவு போனது. எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற ஒரு கொட்டில் அதற்குள் இருந்து படிக்க முடியாத நிலை. ஏனெனில் மழை காலம் என்றால் இவர்களுக்கு தினமும் சிவராத்திரி. இதனால் சரண்ஜாவை கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கு சிலகாலம் தங்கி சரண்ஜா படித்து வந்தாள்.

பொறுப்பற்ற சிறுவர் நன்னடத்தைப் பிரிவு

கோவில்குளம் பகுதியில் தங்கி படித்து வந்த போது அவளுக்கு சுகவீனம் ஏற்பட்டது. அதற்காக வைத்தியசாலையில் அனுமதித்து சரண்ஜா சுகமடைய சீதையம்மா அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சிறுவர் நன்னடத்தைப் பிரிவும் சரண்ஜா வீடு செல்ல அனுமதி வழங்கியது. அப்போது அவளுக்கு 15 வயது. வீட்டு அடிப்படை வசதியற்ற நிலையும் சூழலும் ஒரு பெண் பிள்ளை வாழமுடியாத நிலையையே காட்டி நின்றன. ஆனால் அது சிறுவர் நன்னடத்தை பிரிவின் கண்ணுக்குள் தெரியவில்லை. அதற்கு ஏற்ற ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாது சரண்ஜா வீட்டிற்கு செல்ல சிறுவர் நன்னடத்தை பிரிவு அனுமதித்தது. அன்று சிறுவர் நன்னடத்தை பிரிவு அவளது வீட்டு சூழல் பற்றியும் குடும்ப நிலை பற்றியும் கவனம் செலுத்தியிருந்தால் இன்று சரண்ஜா இருந்திருப்பாள்.
சிவராத்திக்கு சென்ற சரண்ஜா

இவ்வாறு மீண்டும் தனது பாட்டியுடன் தங்கியிருந்து படித்து வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி சிவராத்திரி வந்தது. சரண்ஜாவின் அண்ணன் விறகு வெட்டச் செல்லும் போது அருகில் இருக்கும் இரு இளைஞர்களுடன் சென்று வந்தான். காலப்போக்கில் அந்த வீட்டிலேயே அவனும் தங்கலானான். அந்த வீட்டில் உள்ள இரு பெண் பிள்ளைகள் சரண்ஜாவின் நண்பிகள். ஒன்றாக படிக்கிறார்கள். அவர்கள் சிவராத்திரிக்கு திருக்கேதீஸ்வரம் சென்ற போது அவர்களுடன் தானும் திருக்கேதீஸ்வரம் செல்லத் தயாரானாள்.

அதற்காக சிவராத்திரிக்கு முதல் நாளே அவர்கள் வீட்டில் போய் தங்கினாள். மறுநாள் சிவராத்திக்கு சென்றார்கள். சிவராத்திரி முடிந்ததும் காலையில் நண்பிகளுடன் வந்த சரண்ஜா அந்த வீட்டிலேயே தொடர்ந்து தங்க தொடங்கினாள். அந்த பிள்ளைகளுடன் நின்று பாடசாலை செல்கின்றேன் என்று கூறி வீட்டில் இருந்த தனது ஆடைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சென்றாள் சரண்ஜா.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சரண்ஜா

பாட்டி வீட்டில் இல்லாத தருணம் பார்த்து ஏனைய புத்தகங்களையும், தன் உடைகளையும் எடுத்துப்போய்விட்டாள். திருவிழா போய் வந்து சில நாள்கள் பாடசாலை செல்லவில்லை. பின்னர் பாடசாலை சென்றாள். பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குகொண்டாள். அன்றைய தினம் இரவு ஏதோ இனந்தெரியாத நோயொன்று அவளைப் பீடித்துள்ளதாக அவள் நின்ற வீட்டில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டனர். மயக்கமடைந்திருந்த அவளை மாங்குளம் மருத்துவமனையில் அவர்கள் அனுமதித்தனர்.

மறுநாள் அவளைப் பாதுகாத்த பாட்டிக்கு அறிவித்தனர். அவரும் பதறியடித்துக் கொண்டு மாங்குளம் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு சரண்ஜாவுக்கு மனநோய் எனத் தெரிவித்ததோடு, மல்லாவி மருத்துவமனைக்கு மாற்றிவிட்டதாக கூறியுள்ளனர். மல்லாவிக்கு ஓடினார் அந்த வறிய பாட்டி. மல்லாவிக்கு அப்படி யாரும் வரவில்லை. கிளிநொச்சி போய் பார்க்கவும் என்றனர் வைத்தியசாலையினர். கிளிநொச்சிக்கு ஓடினார். கிளிநொச்சி மருத்துவமனையில் விசாரித்தார். அப்படி யாரும் வரவேயில்லை என்று கூறிவிட்டனர்.

மீண்டும் மாங்குளத்துக்குப் போனார். கிளிநொச்சி மருத்துவமனையில் 10 ஆம் இல்ல விடுதியில் சேர்க்கப்பட்டதாக அப்போது மாங்குளத்தில் சொன்னார்கள். மீண்டும் கிளிநொச்சிக்கு வந்தார் பாட்டியாகிய சீதையம்மா. 10ஆம் இலக்க விடுதிக்கு ஓடினார். அங்கு சரண்யா படுத்திருந்த கட்டில் வெறுமையாகக் கிடந்தது. இப்போது தான் மைய வார்ட்டுக்கு எடுத்துப் போகிறார்கள் என்றனர் அயல் கட்டில்காரர்கள். சரண்யா தன் அம்மம்மாவைப் பார்க்காமலே கடந்த 27 ஆம் திகதி இறந்துவிட்டாள்.
கூட்டு பாலியல் வன்புணர்வு

அலறியடித்த பாட்டியை மரணங்களுடன் தொடர்புடைய மருத்துவ அதிகாரி தன் அறையில் சந்தித்தார். பூட்டப்பட்ட அறைக்குள் பாட்டியும் அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் பொலிஸ் உறுப்பினர் இருவரும் அந்த அதிகாரியை சந்தித்தனர். மூன்றுக்கு மேற்பட்டவர்களால் சரண்ஜா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள் என தமிழிலும், சிங்களத்திலும் அந்த மருத்துவர் தங்களிடம் கூறினார் என பாட்டி எம்மிடம்கண்ணீரோடு சொல்கிறார்.

வெளிச்சத்தை கொண்டு வருமா மருத்துவ அறிக்கை

வைத்தியசாலையில் கூட்டு பாலியல் வல்லுறவு என்று சொன்னதும் நிலைமை சிக்கலடைந்தது. பொலிஸாரிடம் முறையிட்டனர். ஆனால் மருத்துவ அறிக்கை வரவேண்டும். வந்ததும் விசாரணை என்கின்றனர் பொலிஸார். பொலிஸார் விசாரணை செய்யாது தம்மை மிரட்டுகின்றனர் எனக் கூறுகின்றார் சீதையம்மா. அந்த மருத்துவ அறிக்கை வந்ததுமே வெளிச்சத்துக் வரும் உண்மை.

நன்றாக ஓடித் திரிந்த சரண்ஜா திடீரென மரணமடைந்தமை பலரையும் அச்சம் கொள்ள வைத்துள்ளதுடன் அது தொடர்பாக வரும் முன் பின் கருத்துக்களால் சிறுவர்கள், பெண்கள் மீதான பாதுகாப்பு தொடர்பிலும் சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளன. ஏது எப்படியோ 16 வயது பிள்ளை மரணமடைந்தது. ஆகவே மரணத்திற்கான உண்மை காரணம் கண்டுபிடிக்க வேண்டியது சிறுவர், பெண்கள் அமைப்புக்களின் கடமை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

சரண்ஜா ஏன் அயல் வீட்டில் தங்க ஆசைப்பட்டாள்

சரண்ஜாவின் அண்ணன் அயல் வீட்டிலேயே தங்கியுள்ளான். தம்பியும் அவ்வப்போது போய் நிற்கத் தொடங்கினார். இந்தநிலையில் சரண்ஜாவும் அங்கு செல்கிறாள் ஏன்? சரண்ஜா படிப்பிலும் விளையாட்டிலும் திறமையானவளே. இதற்கு அவளது முத்து முத்தான கொப்பி எழுத்துக்களும் அவளது புத்தக பைகளுமே சான்று. இவர்கள் சொல்லும் மனநிலை பாதிக்கப்பட்டவள் என்பது உண்மையா என்பதை அவை வெளிப்படுத்தும். சரண்ஜா இப்போ பெரிய பிள்ளை. அயலில் உள்ள வீடுகள் எல்லாம் வசதியானவை. எல்லோரும் வசதியாகவே அயலில் வாழ்கிறார்கள்.
ஆனால் சரண்ஜாவின் வீடு மட்டும் ஒரு ஓட்டை கொட்டில். அது தான் எனது வீடு என்று காட்ட முடியாத நிலை. நண்பர்கள் கேலி செய்வார்களா என்ற ஏக்கம். இவையே அவளை வசதியான அருகில் உள்ள வீட்டில் தங்க தூண்டியது. இதுதான் அவளது சகோதரர்களையும் அங்கு இழுத்திருந்தது. இதனாலேயே அவளும் இன்று இவ்வுலகை விட்டு செல்ல நேர்ந்தது..

ஆறு பிள்ளைகளுடன் இருந்த சீதையம்மாவுக்கு ஏன் வீடு வழங்கப்படவில்லை

அரச, அரசார்பற்ற நிறுவனங்களால் மீள்குடியேறிய மக்களுக்காக வீட்டுத் திட்டங்கள் பல வழங்கப்பட்டன. ஆனால் ஆறு சிறுவர்களுடன் இருந்த சீதையம்மாவிற்கு மட்டும் வீடு வழங்கப்படவில்லை. ஏன் என வினவிய போது அவர் இருக்கும் காணிக்கு உறுதி இல்லை என்கின்றனர் அதிகாரிகள். 1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக இடம்பெயர்ந்த சீதையம்மா அன்று தொடக்கம் மன்னகுளம் பகுதியில் உள்ள அந்த காணியிலேயே வசித்து வருகின்றர்.

அது 5 ஏக்கர் காணி. சுமார் 37 வருடமாக அந்த காணியில் இருக்கும் ஒருவருக்கு ஒரு சிறிய அரை ஏக்கர் காணி கொடுத்து வீட்டை வழங்கியிருக்க முடியாதா? இது வரை அந்தக் காணிக்கு என்று எவரும் வரவில்லை. ஒரு தடவை மட்டும் ஒருவர் தனது காணிதான் என்று நெடுங்கேணி பிரதேச செயலக துண்டு ஒன்றுடன் வந்தார். அது பொய்யானது என்று தெரிந்ததால் பொலிஸாரிடம் முறையிட்டோம். அவர்களும் அது போலி ஆவணம் எனக் கூறி துரத்தி விட்டனர். போனவர் இன்று ஒருடம் முடிந்தும் மீண்டும் வரவில்லை. பொதுக் காணியில் ஒரு துண்டை கொடுத்து ஆறு சிறுவர்களையும் சீதையம்மாவையும் வாழ வழி செய்யாத அதிகாரிகள் அருகில் இருக்கும் சீதையம்மாவின் சகோதரியின் உறுதி உள்ள காணியை பிடித்து வேறு ஒருவருக்கு வழங்கி வீடும் வழங்கியுள்ளனர்.

இதைவிட அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கையகப்படுத்தி புத்தர் சிலையும் இராணுவ முகாமுமம் உள்ளது. இவற்றுக்கெல்லாம் அவர்கள் கூறும் சட்டம் எங்கே போனது என்கிறார் சீதையம்மா. மொத்தத்தில் சீதையம்மாவிடம் பணம் இல்லாததால் காணியும் வழங்கப்படவில்லை. அதை கொடுத்து வாங்கும் நிலையிலும் சீதையம்மா இல்லை.

சீதையம்மாவுக்கு வீட்டுத் திட்டம் வழங்கியிருந்தால், சரண்ஜா அங்கேயே தங்கியிருப்பாள். இந்த அசம்பாவிதமும் ஏற்பட்டிருக்காது. அவளின் இழப்புத்தான் மற்றைய ஐந்து சிறுவர்களுக்கும் விடுதலையை கொடுக்கப் போகின்றது என்பதே உண்மை.

- 'மலரும்' இணையத்துக்காக கே.வாசு -