செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

காணாமல் போனோரின் பின்னனியில் படைத்தரப்பு? வெளிக்கிளம்பும் ஆதாரங்கள்! விடை தருமா மைத்திரி யுகம்

Posted: 2015-03-25 08:14:56 | Last Updated: 2015-03-25 08:18:45
காணாமல் போனோரின் பின்னனியில் படைத்தரப்பு?   வெளிக்கிளம்பும் ஆதாரங்கள்! விடை தருமா மைத்திரி யுகம்

காணாமல் போனோரின் பின்னனியில் படைத்தரப்பு? வெளிக்கிளம்பும் ஆதாரங்கள்! விடை தருமா மைத்திரி யுகம்

மழை நின்றும் தூவானம் நிற்கவில்லை என்றது போல் போகிறது தமிழ் மக்களின் வாழ்க்கை. யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. ஆனால் அதனால் ஏற்பட்ட வலிகளும் ரணங்களும் இன்றும் தீர்ந்தபாடில்லை. அந்த வலிகளை அதிகம் சுமப்பவர்கள் காணாமல் போனோரின் உறவுகளே. இறந்து விட்டார்கள் என்றால் ஒரேயடியாக அழுது தீர்த்து விதியைத் திட்டி கண்ணீரால் காயத்தை ஆற்றிவிடலாம்.

ஆனால் நம் உறவுகளுக்கு என்ன நடந்தது, உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா, இன்று வருவார்களா, நாளை வருவார்களா? என தினம் தினம் எதிர்பார்ப்போடு செத்துப் பிழைப்பது எத்தனை கொடுமையானது. இந்த நிலைமை வார்த்தைகளுக்குக் கட்டுப்படாதது. அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய துயரத்தின் உச்சம் அது. இந்த துயரம் விடையின்றி மைத்திரி யுகத்திலும் தொடருமா என்பதே பாதிக்கப்பட்டவர்களின் ஏக்கம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் இருந்து இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்பாட்டங்கள். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணைகளும் தொடர்கின்றன. ஆனால் மக்கள் அதில் நம்பிக்கையற்றவர்களாக போராடிவருகிறார்கள்.

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள் மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையை புறக்கணிக்கப் போவதாகவும் அண்மையில் அறிவித்திருக்கின்றன. தீர்வு இன்றி மரணச் சான்றிதழ் வழங்குவதை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ஆணைக்குழு செயற்பட்டதன் விளைவே அது. இவ்வாறான நிலையில் காணாமல் போனோர் தொடர்பாக வெளிவந்த மற்றும் வெளிவந்து கொண்டிருக்கும் ஆதாரங்கள் இதன் பின்னால் படை தரப்பு உள்ளதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

IMAGE_ALT

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் காணாமல் போனோர் தொடர்பாக 19 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் மக்ஸ்வெல் பரணகம அண்மையில் தெரிவித்துள்ளார். ஆனால் காணாமல் போனோர் தொகை இதை விட அதிகம் என வட, கிழக்கு சிவில் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. ஆணைக்குழு மேல் நம்பிக்கை இல்லாத தன்மை மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக பலர் முறைப்பாடுகள் செய்யவில்லை என்கின்றனர் சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இருந்து கிடைக்கப் பெற்ற 2 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் நீடிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இராணுவத்திடம் சரணடைந்த மகன் நல்லிணக்க ஆணைக்குழுவின் புகைப்படத்தில்...

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்களில் அதிகமானவர்கள் இராணுவத்திற்கு எதிராகவே முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர். இதேவேளை, அண்மைக்காலமாக வெளிவந்துள்ள சில புகைப்படங்களும் படைத்தரப்பு தொடர்புபட்டிருப்பதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. கடந்த 10 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகன் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போயிருந்தார். தனது மகனை காணவில்லை என அவர் தொடர்ந்து போராடி வந்தார்.

IMAGE_ALT

இந்த நிலையிலேயே காணாமல்போன ஜெயக்குமாரியின் மகன் தொடர்பான புகைப்படம் ஒன்று ஜெயக்குமாரியின் கைக்கு கிடைத்தது. முன்னாள் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையில் புனர்வாழ்வு பெறும் முன்னாள் போராளிகளுடன் புனர்வாழ்வு பயிற்சி பெறும் புகைப்படத்தில் ஜெயக்குமாரியின் மகனும் நின்றான். அதன் பின் அந்தப் புகைப்படத்துடனும் நல்லிணக்க ஆணைக்குழு பரித்துரைப் புத்தகத்துடனும் தொடர்ந்து போராடிய நிலையில் ஜெயக்குமாரிக்கு மகனுக்கு பதிலாக ஒரு வருட சிறைத் தண்டனையே கிடைத்தது. புலிகளை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கடந்த வருடம் மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஜெயக்குமாரியும் மகள் விபூசிகாவும் கைதாகிய நிலையில் மகள் மகாதேவா ஆச்சிரமத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன் தாய் ஒரு வருட சிறைத் தண்டனை பெற்று கடந்த 10ஆம் திகதியே நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுதலையானார். அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இராணுவத்திடம் புனர்வாழ்வு பெற்ற மகன் எங்கே? என்று இதுவரை விடை தேட முடியவில்லை.

1990 ஆம் ஆண்டு கொழும்பில் காணாமல் போனவர் அம்பாந்தோட்டையில்..

இது ஒரு புறமிருக்க, 25 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து அப் பகுதியில் கடை ஒன்றில் வேலை செய்த யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (வயது 28) என்ற இளைஞன் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டிருந்தார். கடந்த பல வருடங்களாக அந்த இளைஞனை தேடி அவனது தாயும் தந்தையும் அலைந்த போதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர்கள் இருவரும் மகனைக் காணாது மரணமடைந்தும் விட்டனர்.

IMAGE_ALT

ஆனால் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் அம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் இறந்த தாய், தந்தையருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. தங்கள் மகன் புனர்வாழ்வு பெற்றுள்ளார் எனவும் அவரை வந்து அழைத்துச் செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறந்த தாய், தந்தையர் மீண்டு வரவா முடியும். இல்லை. உறவினர்கள் சென்று டிசெம்பர் 11 ஆம் திகதி அவரை அழைத்து வந்தனர்.

28 வயதில் காணாமல் போன இளைஞன் 53 வயதில் நீதிமன்ற உத்தரவுக்கமைய வெளியில் வந்தார். ஆக இந்த கடத்தல் சம்பவத்துடன் பாதுகாப்பு தரப்பு நேரடியாக தொடர்புபட்டுள்ளது எனபதே உண்மை. நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலையான அவரின் எதிர்காலமம் இளமைப்பருவமம் இன்று...?

2008ஆம் ஆண்டு காணாமல் போன தமிழக மீனவர் இரகசிய முகாமில்....

இதேபோன்று, கடந்த 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அளவில் கடலுக்கு சென்ற நிலையில் மன்னார் கடல் எல்லைக்குள் தமிழ் நாடு, நாகபட்டினத்தைச் சேர்ந்த முருகன் என்ற மீனவர் காணாமல் பேயிருந்தார். முருகனின் மனைவி எங்கு தேடியும் கணவன் கிடைக்கவில்லை. கடலில் ஏதாவது அனர்த்தம் நடந்திருந்திருந்தால் சடலம் என்றாலும் கிடைக்கும். அதையாவது மீட்டுத் தாருங்கள் என மீனவர்களிடம் கேட்டார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.

இவ்வாறு 6 வருடம் கடந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி குறித்த மீனவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுவரை இரகசிய சிறைச்சாலை ஒன்றில் இருந்தார் எனத் தெரிவித்த அவரை யாழ் சிறையில் இருந்த இந்திய மீனவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்த இந்த மீனவருக்கே இரகசிய சிறைச்சாலை என்றால் இன்னும் எத்தனை பேர் அவ்வாறு இரகசிய சிறைச்சாலைகளில் இருப்பர்கள் என்ற அச்சம் எழவே செய்கின்றது.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் திருகோணமலையில் கோட்டா முகாம் என்ற ரகசிய முகாம் இருந்ததாகவும் அதில் 700 பேர் வரை சிறைவைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டமை காணாமல் போனோர் இரகசிய முகாம்களில் உள்ளார்கள் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

காணாமல் போன மகள் ஜனாதிபதி மைத்திரியுடன் புகைப்படத்தில்..

கடந்த மாதம் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்பாட்டத்தின் போது தாயார் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது. வவுனியா, நெடுங்கேணி, பெரியமடு பகுதியைச் சேர்ந்த காசிப்பிள்ளை ஜெயவனிதா என்ற தாயார் கூறுகையில் -

IMAGE_ALT

IMAGE_ALT

2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மாத்தளன் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் எனது மகள் பிடித்து செல்லப்பட்டாள். பிடித்து செல்லப்பட்ட போது 16 வயது. நான் இராணுவத்திடம் சென்று கேட்ட போதெல்லாம் எனது மகளை இராணுவம் பிடித்து செல்லவில்லை என்று கையை விரித்து விட்டார்கள். அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்கள். நான் போவதற்கு ஆயத்தமாகிய போது மறுநாள் அதே தொலைபேசி அழைப்பிலிருந்து அது உங்களுடைய மக்கள் இல்லை என்று கூறினார்கள். நான் கதைத்துக் கொண்டு இருந்த போது தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்கள். நான் மீண்டும் முயற்சித்த போது அந்த இலக்கம் இயங்கவில்லை.

பின்னர் பிள்ளையை பல இடமும் தேடியும் கிடைக்கவில்லை. தற்போது நடைபெற்ற தேர்தல் பிரச்சார காலத்தின் போது பொதுவேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் எனது மகளை கண்டேன். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மஹிந்தா அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சராக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைத் தேர்தலின் போது 'மைத்திரி ஆட்சி.. 100 நாட்களில் புதிய நாடு' என்ற துண்டுபிரசுரத்தில் பிரசுரித்திருந்தார். அதில் வெள்ளை நிற பாடசாலை சீருடையுடன் நிற்கும் சில பிள்ளைகளுடன் குறித்த பிள்ளையும் ஜனாதிபதி மைத்திரி அருகில் காணப்படுகின்றார். இதனையே தனது பிள்ளை எனக் காட்டி அந்த தாய் கதறுகின்றார். இதற்கு புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது. தன் அருகில் நின்றவர் யார் என்பதையும் எங்கு உள்ளார் என்பதையும் ஜனாதிபதி வெளிப்படுத்துவாரா?

2008 இல் காணாமல் போனவர் வெலிக்கடையில் பொங்கல் கொண்டாட்டத்தில்
இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பாக பல ஆதராங்கள் வெளியாகி வரும் நிலையில் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வெலிக்கடை சிறைசாலையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் எடுக்கப்பட்டு இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் தனது மகனைக் கண்டேன் என தாய் ஒருவர் கடந்த கடந்த திங்கள் கிழமை (16) மன்னார் நீதிமன்றல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த அன்ரன் சனிஸ்ரன் பிகிராடோ (வயது-24) என்பவர் தனது உறவினர் வீட்டிலிருந்த போது இனந்தெரியாத நபர்களால் கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11ஆம் திகதியன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மகன் வீடு திரும்பாத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் எந்த பதிலும் இல்லை. 7 வருடங்கள் கடந்த நிலையில் தைப்பொங்கல் தினத்தன்று (14-01-2015) வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டோரின் புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் தனது மகனும் இருகின்றார் என்றே அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் அலெக்ஸராஜா ஆசீர்வாதம் கிறேசியன் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில் பயங்கரவாத மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கைகளின் படி 275 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 49 பேரே புனர்வாழ்வு முகாமில் உள்ளதாக பிரதமர் தெரிவிக்கிறார். அப்படியாயின் ஏனையோர் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? குற்றவாளிகள் யார்? என்பதை வெளிப்படுத்துமா புதிய அரசாங்கம் என்ற ஏக்கத்துடன் வாழ்கிறார்கள் காணாமல் போனோரின் உறவுகள்.

'மலரும்' இணையத்துக்காக கே.வாசு