செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மூன்று தலைமுறையாக ஏமாற்றத்துடன் சிதம்பரபுரம் முகாம் மக்கள்!

Posted: 2015-04-13 07:08:45
மூன்று தலைமுறையாக ஏமாற்றத்துடன் சிதம்பரபுரம் முகாம் மக்கள்!

மூன்று தலைமுறையாக ஏமாற்றத்துடன் சிதம்பரபுரம் முகாம் மக்கள்!

யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் போர்விழா கொண்டாட்டங்களுக்காக தயாராகிறது புதிய அரசாங்கம்.

ஆனால், யுத்தம் நடைபெற்ற போது தோற்றம் பெற்ற நலன்புரி நிலையங்கள் சில தற்போதும் மிகவும் மோசமான நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இன்றும் இருக்கின்றன.

துரித மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு என ஆட்சியாளர்கள் அடிக்கடி கூறுகின்ற போதும் அவை உண்மையில் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகத்தை உறுதிசெய்யும் வகையில் வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களின் வாழ்க்கைப் போராட்டம் அமைந்துள்ளது.

வவுனியா, ஆசிகுளம் கிராம அலுவலர் பகுதியில் சிதம்பரபுரம் முகாம் காணப்படுகிறது. யுத்தம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைப்பதற்காக 1990 ஆம் ஆண்டு இந்த முகாம் உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வந்தன. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் காரணமாக அனேகமானவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப தற்போது 186 குடும்பங்கள் சொந்தக் காணிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் இந்த முகாமிலேயே வாழ்ந்து வருகின்றன.
ஓட்டைகள் நிறைந்த தார் சீற்றுகளால் அமைத்த உடைத்த கொட்டகைக்குள்ளும், மழைக்குக் கரைத்து ஓடும் மண்சுவர்களை கொண்ட நாலு மறைப்புக்குள்ளும் வாழ்கிறார்கள் இம் முகாம் மக்கள்.

சிறு பிள்ளைகளாக இடம்பெயர்ந்து இவ் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தவர்களில் பலர் இன்று தமது பிள்ளைக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். இவ்வாறு மூன்று தலைமுறையாக இவர்களது வாழ்க்கைப் போராட்டம் தொடர்கிறது.

இங்குள்ளவர்கள் வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகனுக்குச் சென்றே கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தமது சீவியத்தை போக்குகிறார்கள்.

வீட்டுப் பிரச்சினை ஒரு புறம் இருக்க, குடிதண்ணீர்நெருக்கடி மறுபுறம். முகாம் முன்னர் தொழிற்பட்ட காலப்பகுதியில் இருந்த 20 குழாய் கிணறுகளும் செயல்பாட்டை இழந்து விட்டன.

தப்பியொட்டி வாழ்வதற்காக அங்கும் இங்குமாக அலைத்து குடிதண்ணீர் பெறுகிறார்கள் மக்கள். மலசல கூட வசதி கூட அதே நிலைதான். இதனால் சிறுவர்களும்,பெண்களும் கடுமையான சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
மின்சார வசதியும் இந்த முகாமுக்கு நிறுத்தப்பட்டுவிட்டது. சிதம்பரபுரம் முகாமில் வசிக்கும் முதியவர், வறியவர், பாதிக்கப்பட்டோர் என எவருக்கும் எந்த அரச உதவியும் இல்லை. அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரணம், சமுர்த்தி என எந்த கொடுப்பனவும் இவ் முகாம் மக்களுக்கு தற்போது வழங்கப்படவில்லை.

வாழ்வதற்கான போராட்டத்தில் ஈடுபடும் இந்த மக்கள் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் அனைவரிடமும் தமக்கு காணிகளை வழங்கி வாழ வழி செய்யுங்கள் என தினமும் மன்றாடிவருகிறார்கள். ஆனால் அரச அதிகாரிகள் அசமந்தம் காட்ட, அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அவற்றை கைவிடுவதும் ஆக தம்மை தினமும் ஏமாற்றுகின்றனர் என்று மக்கள் கூறுகின்றனர்.

வடமாகாண முதலமைச்சர் மற்றும் வன்னி அபிவிருத்தி குழு தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிசாட் பதியுதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் கடந்த வருடம் ஜுலை மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முகாம் அமைந்துள்ள காணிகளையே இந்த மக்களுக்கு வழங்கி குடியமர்த்த வேண்டும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்ட போதும், அது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை நடைபெற்றதாக தெரியவில்லை. இவையும் தேர்தல் கால வாக்குறுதிகள் போலத் தானா? என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
விரகத்தியோடும் மனவேதனையோடும் உள்ள மக்கள் கடந்த 8 ஆம் திகதி தமக்கு காணிகளை வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது, தாம் காணிகளை வழங்க தயார். மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் அரசாங்கம் அனுமதி தந்தால் வழங்க முடியும் என மாவட்ட அரச அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர தம்மிடம் தெரிவித்தார் என்று மக்கள் கூறுகின்றனர்.

அப்படியாயின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பொய்யானதா? எதற்கு மாவட்ட அபிவிருத்துக் குழுக் கூட்டங்களும் தீர்மானங்களும்? இவ்வாறான கேள்விகள் தவிர்க்கமுடியாதவை.

போராட்டத்தைத் தொடர்ந்து வடக்கு முதலமைச்சரால் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதப் பிரதியுடன் முகாம் மக்களைச் சந்தித்த வடக்கு மாகாண சுகாதார, மீள்குடியேற்ற அமைச்சர் ப.சத்தியலிங்கம், அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இந்த காணியை வழங்குவதற்கு அரச அதிபரே தடையாக இருக்கிறார் என்று மக்களிடம் கூறினார்.

இது தவிர கடந்த 2013 ஆம் ஆண்டு குறித்த முகாம் அமைந்துள்ள காணி 250 குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொது இடங்களுக்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தே, இப் பகுதி மக்களை வெளியேற்றி விட்டு வேறு பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களை கொண்டு வந்து குடியமர்த்துவதற்கான முயற்சி நடைபெறுவதாகவும், அதன் காரணமாகவே அரச அதிபர் காணியை வழங்க மறுக்கிறார் என்றும் வடக்கு மீள்குடியேற்ற அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இக் காணிகளை விரைவில் அப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கே வழங்க தான் நடவடிக்கை எடுப்பார் என்று முதலமைச்சர் உறுதி வழங்கியுள்ளார் என தெரிவித்து வழங்கப்பட்ட கடிதத்தையும் மக்களுக்கு அமைச்சர் கொடுத்திருக்கிறார்.

புதிய அரசாங்கம் வந்த பின்னாவது நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வாக்களித்த இம் முகாம் மக்கள் வாழ்க்கையில் மீண்டும் சோகமே மிஞ்சியுள்ளது. மைத்திரி யுகத்தின் 100 நாள் வேலைத்திட்டமும் நிறைவடையும் நிலையில் நாடாளுமன்றமும் கலைக்கப்படவுள்ளது. அப்படியாயின் இம் மக்களின் காணி வழங்கல் மற்றும் மீள் குடியேற்றம் என்பது இனி எப்போது? என்பதே அவர்களின் கேள்வி.

-கே.வாசு-