செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

105 வயதில் ஆரோக்கியமாக வாழும் சதாசிவம் ஐயா!

Posted: 2015-04-17 02:56:39
105 வயதில் ஆரோக்கியமாக வாழும் சதாசிவம் ஐயா!

105 வயதில் ஆரோக்கியமாக வாழும் சதாசிவம் ஐயா!

உலகில் வயதான பெண் என்று கருதப்படும் மிசாவோ ஒகாவா தனது 117 வயதில் ஜப்பானில் கடந்த முதலாம் திகதி காலமானார். கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு 3 பிள்ளைகளும், 4 பேரப்பிள்ளைகளும் மற்றும் ஆறு கொள்ளுப்பிள்ளைகளும் உள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிரோடு வாழ்ந்து வந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகின்றார்.

மிசாவோ ஒகாவா மார்ச் 5, 1898 ஆண்டு பிறந்ததுடன், இவர் பிறந்து ஐந்து ஆண்டுகளில் பின்பே ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பருவ வயதில் இருக்கும் போது தான் முதலாம் உலகப்போர் ஆரம்பம் ஆனதுடன் அவரது 70 வயதில்தான் மனிதன் முதலில் நிலவில் இறங்கினான் என்பது சிறப்பம்சமாகும்.

114 வயதின் போது அவர் உலகின் மிக அதிக வயதான பெண் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். இப்போது மிசாவோ ஒகாவா இறந்துள்ளதால் அமெரிக்காவை சேர்ந்த 116 ஜெர்டுர் வியவர் என்பவர் உலகின் மிக அதிக வயதான பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தெற்காசியாவின் மிக வயதான பெண் என அழைக்கப்பட்ட முதியவர் தனது 117 ஆவது வயதில் கடந்த வருடம் ஜுன் மாதம் காலமானார்.

உக்கு அம்மா என அழைக்கப்பட்ட இவர் 1897 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி பிறந்தவர்.

இவர் மாவனெல்ல - ஹெம்மாத்தகம பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 7 பிள்ளைகளும் 98 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

இவரின் கணவர் 111 வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் கணபதி காத்தி என்பவர் நவாலி தெற்கு மானிப்பாயை சேர்ந்தவர். இவர் 13.11.1902 அன்று பிறந்தவர். தற்போது 112 வயதைத் தாண்டி வாழ்ந்துவருகிறார்.
இலங்கையில் சராசரி ஆயுட்காலம் 75 ஆண்டுகள். விஞ்ஞான வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைக்கோல மாற்றமும் அந்த வயது வரை கூட வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கை முறை மாற்றத்தாலும் நாளாந்த உணவு பழக்கவழக்கங்களாலும் ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல.

நாளாந்தம் வைத்தியசாலைக்கு சென்று வருவோர் தொகை பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தொகையைப் போல் அதிகரித்தே வருகிறது.

ஆனாலும் இவற்றை எல்லாம் வென்று இந்த உலகில் சிலர் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களது வாழ்க்கை முறை ஏனைய மக்களுக்கு முன்னுதாரணமான ஒன்றாகவும் அமைந்துள்ளது.

அந்த வகையில் 105 வயதிலும் தான் உண்டு தனது வேலையுண்டு என வாழ்பவர்தான் வேலாயுதம் சதாசிவம்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள 'குறிஞ்சி இல்லம்' என்னும் தனது வீட்டில் வசித்து வருகிறார்.
அவரைச் சந்திப்பதற்காக வீட்டு படலையை தட்டிய போது வயது முதிர்ந்த அம்மா ஓடி வந்தார். என்ன விடயம்..? யாரை சந்திக்க வேண்டும் என்றார்..? என்னை அறிமுகப்படுத்தி விட்டு சதாசிவம் ஐயாவை சந்திக்க வந்ததாக கூறினேன்.

அப்பொழுது அப்பா.. அப்பா என்று அந்த முதிய பெண்மணி கூப்பிட்டார்.

இவரே முதுமையில் உள்ளார். இவருடைய அப்பா என்றால் அவர் என்ன நிலையில் இருப்பார் என்ற ஒரு ஏக்கம் ஏற்பட்டது.

அவர்களின் வீட்டு விறாந்தையில் ஓம் நவசிமாவாய, ஒம் நமசிவாய என்ற மந்திரம் உச்சரிக்கபடுவது காதில் விழுந்தது.

அவ்வாறு நமசிவாய மந்திரத்துடன் வந்தவர் சதாசிவம் ஐயாவே.

அவரது உடலில் முதுமையும் சோர்வும் தெரிந்தாலும் அவர் மனரீதியாக இன்னும் சோர்ந்து விடவில்லை. ஆரோக்கியமாகவே இருக்கிறார்.

யாழ்ப்பாணம், அனலைதீவுப் பகுதியில் ஏழு சகோதர்களுக்கு பின் 8ஆவது பிள்ளையாக பிறந்த இவர் தனது 7 ஆவது வயதில் தாய், தந்தையை இழந்தார்.

ஆரம்ப கல்வியை அனலைதீவில் தொடர்ந்த போதும், அதன் பின் தனது சகோதரருடன் இணைந்து சிங்கபூர் சென்று அங்கேயே தங்கினார். அங்கு தனது கல்வியைப் பூர்த்தி செய்து அனலைத்தீவு வந்து 1938 ஆம் ஆண்டு அரசாங்க வேலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

யாழ்ப்பாணம், புத்தளம், வவுனியா என பணியாற்றிய இவர் 1945 ஆம் ஆண்டு முதல் வவுனியாவிலேயே குடியேறினார்.
அன்று முதல் இன்று வரை அவர் இங்கேயே வசித்து வருகிறார். வவுனியா நகரசபையின் முதலாவது செயலாளர் இவரே. ஆங்கில உச்சரிப்புக்களும் பேச்சுத் திறமையும் இன்றும் அப்படியே உள்ளன.

இவரது மனைவி 1993 ஆம் ஆண்டு இயற்கை அடைந்து விட்டார். மூன்று பெண் பிள்ளைகளும், ஓர் ஆண் பிள்ளையும் என நான்கு பிள்ளைகள். அதில் வைத்தியராக இருந்த ஆண் பிள்ளை நோயின் காரணமாக மரணித்து விட பெண் பிள்ளைகளில் ஒருவர் கனடாவிலும் இன்னொருவர் யாழ்ப்பாணத்திலும் வசித்து வர ஒருவர் தந்தையுடன் வசித்து வருகிறார்.

இவருக்கு 9 பேரப்பிள்ளைகளையும் 9 பூட்டப் பிள்ளைகளும் உள்ளனர்.

நாளாந்தம் எழுந்து தனது கடமைகளை தானே செய்யும் இவரை வீட்டு படிகளில் ஏறும் போது மட்டும் ஒருவர் பிடித்து விட வேண்டியுள்ளது.

இவரது மூத்த மகளான கணேசலிங்கம் மலர்மதியிடம் தந்தை தொடர்பாக கேட்ட போது -

"எனக்கு இப்ப 76 வயது. அம்மா இல்லாத காலத்தில் இருந்து என்னோடு தான் அப்பா இருக்கிறார். ஆனாலும் எனக்கு அவரால் எந்த கஷ்டமும் இல்லை. கொடுப்பதைச் சாப்பிட்டுக் கொண்டு தன்னுடைய கருமங்களை தானே செய்து கொண்டு இருக்கிறார்.

அவருக்கு வயது போனமையால் இயற்கையான முதுமை ஏற்பட்டுள்ளதே தவிர எந்தவொரு நோயும் இல்லை. வைத்தியர் வீட்டில் வந்து இடைக்கிடை பார்க்கிறவர். ஆனாலும் அவருக்கு எந்த நோயும் இல்லை. ஒரே கடவுள் தியானத்தில் இருப்பார். அப்பாவின் பழக்கவழக்கங்களே அவரை இவ்வாறு வாழ வைத்திருக்கிறது" என்கிறார்.

கடவுள் நம்பிக்கை கொண்ட சதாசிவம் ஐயா சமயம், தமிழ் மொழி, இலக்கிய துறையிலும் ஆர்வம் மிக்கவர். இந்த வயதிலும் வவுனியாவில் நடைபெறும் தமிழ் இலக்கிய, சமய நிகழ்வுகளில் கலந்து கொள்பவர். இதற்காக சில விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.

உலக விடயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவரான இவர் பத்திரிகை வாசிப்பதை பொழுது போக்காக இன்றும் கொண்டுள்ளார்.

சுத்த போசனை உணவுகளையே (சைவ உணவுகள்) விரும்பி உண்டு வருகிறார். மாமிச உணவுகள் அவருக்கு பிடிக்காது. மரக்கறி வகைகள் எதுவாக இருந்தாலும் அவை அவருக்கு பிடித்தவைதான்.

இவருடைய 7 சகோதரர்களும் 80 வயதின் பின் மரணமடைந்து விட்டார்கள். இவர் சாதனை நாயகனாக இன்றும் எம்முடன் வாழ்கிறார்.

"இலங்கை பிரித்தானியரின் ஆளுகைக்குட்டிட்டிருந்த காலம் அது. 1911 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் ஆம் திகதி நான் பிறந்தேன்.

தனது 3 ஆவது வயதில் முதலாம் உலகயுத்தமும் இளைஞனாக இருந்த போது 2ஆம் உலக யுத்தமும் இடம்பெற்றன என்றும், தனது 37 ஆவது வயதில் இலங்கை சுதந்திரம் பெற்றது" என்று பட்டியலிடுகிறார் சதாசிவம்.

"நாங்கள் ஆத்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுகிறோம். நாம் இறப்பதில்லை" எனக் கூறிய சதாசிவம் ஐயாவிடம், இந்த சமூகத்திற்கு என்ன கூற ஆசைப்படுகிறீர்கள் எனக் கேட்ட போது,

எல்லாம் கடவுள் செயல். ஓம் நவசிவாய என்ற மந்திரத்தையும் அதன் அர்த்தத்தையும் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்து இறை பக்தியுடனும் தீய பழக்கவழக்கங்களை விடுத்தும் சுத்த போசனைகளுடனும் வாழ்ந்து அனைவரும் நீண்டகாலம் வாழ வேண்டும்" என்கிறார்.

வவுனியாவில் அதி கூடிய வயது உள்ளவராக வாழ்ந்து வருபவர் இவரே.

இதேபோல் 103 வயது உடன் வவுனியா, கல்மடு பகுதியில் ஓர் அம்மா வாழ்ந்து வந்த நிலையில் அவர் கடந்த வாரமே இறைபதம் அடைந்திருந்தார்.

- 'மலரும்' இணையத்துக்காக கே.வாசு -