செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

யோகக் கலையின் முக்கியத்துவத்தை நிதர்சனமாக்கும் சர்வதேச யோகா தினம்!

Posted: 2015-06-20 02:29:24 | Last Updated: 2015-06-20 02:32:44
யோகக் கலையின் முக்கியத்துவத்தை நிதர்சனமாக்கும் சர்வதேச யோகா தினம்!

யோகக் கலையின் முக்கியத்துவத்தை நிதர்சனமாக்கும் சர்வதேச யோகா தினம்!

மிகப் புராதனகால கலையான யோகக்கலையானது இன்று பெரும்பாலான உலகமக்களால் இனமதபேதமின்றி பின்பற்றப்பட்டு வருவது அதற்குக் கிடைத்த சிறப்பான அங்கீகாரமாகும்.

முன்னர் இக் கலை பற்றியதான தவறான கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வந்ததனால் மக்கள் அதன்பால் ஈர்ப்புக்கொள்ளவில்லை. காரணம் இந்து மதம் சார்ந்த கலையாக இருப்பதனால் வேற்றுமதப் பிரிவினர் இக்கலை மீது தமது வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வெளிப்படுத்தியமையால் இது அவ்வளவில் பிரபலமடையவில்லை.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உடல் உள ஆரோக்கியம் என்ற விடயத்தில் யோகக் கலையானது அதிகம் செல்வாக்குச் செலுத்துவதால் அதாவது இக்கலையிலுள்ள நோய் குணப்படுத்தும் திறனை இன்றைய மருத்துவ விஞ்ஞானமும் ஏற்றிருப்பதால் சர்வதேச ரீதியாக பிரபலமடைந்து வருகின்ற கலையாக யோகாசன கலை மிளிர்கிறது.

இதனை அங்கீகரிப்பதாகவும் சர்வதேச ரீதியில் இக்கலை பற்றிய சிறப்பை ஆழமான புரிதலை பறைசாற்றும் முகமாகவும் இவ்வாண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச யோகா தினமாக ஜூன 21 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து மதத்திற்கு சனாதனதர்மம் என்ற பெயரும் உண்டு. இதன் உட்பொருள் யாதெனில் இதன் தோற்றம் அனாதியானது என்பதாகும். இந்துப் பண்பாட்டு மரபில் தோன்றி வளர்ந்த யோகக் கலையின் தோற்றமும் அவ்வாறே நிகழ்தது.

இக்கலையின் தோற்றத்தை அறுதியிட்டுக் கூறமுடியாததாயினும் ஆதிசிவனால் பார்வதிக்கு கூறப்பட்டதாகவும் பின்னர் இறையருள் பெற்ற மாகான்கள் வழியாக குரு சீட மரபியலூடாக தொன்றுதொட்டு பேணப்பட்டு வந்ததாகவும் சிவசம்கிதை என்ற யோக நூலில் கூறப்படுகிறது.

யோகத்தின் பிரிவுகளில் ஒன்றான கடயோகத்தில் உடலையும் மனதையும் நன்னிலையில் வைத்திருப்பதற்கான ஆசனப் பயிற்சி முறைகள் மற்றும் நிலைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. இக் கலைபற்றிய கருத்துக்கள் சில இந்து மத நூல்களில் காணப்படுகின்றன. இமயம் முதல் சமாதி ஈறான எட்டுவிடயங்கள் யோகத்தில் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.

IMAGE_ALT

இவற்றை அட்டாங்க யோகம் என அழைப்பர். இந்த எட்டு விடயங்களையும் படிமுறை ரீதியாக முறையாக கடைப்பிடிகுமிடத்து ஒருவனுக்கு சகல சித்திகளும் கிட்டும் என்று கூறப்படுகிறது. யோகம் என்பது வாழ்க்கைநெறி முறை. எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்ற பல வாழ்வியல் தத்துவங்களை நடைமுறைகளை உள்ளடக்கியுள்ளது.

யோகம் என்ற சொல்லுக்கு இணைத்தல் அல்லது ஒன்றுசேர்த்தல் என்றுபொருள். உடலையும் மனதையும் ஆன்மாவையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் யோகக்கலைக்குள்ளது. இதனால் சாதாரண உடற்பயிற்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவம் மிக்க கலையாக திகழ்கிறது. அத்துடன் உடலியக்கத்திற்கு தேவையான பிராணசக்தியை அளிப்பதனால் உடல்வலு மற்றும் அனுசேபத் தொழிற்பாடுகள் தடையின்றி நடைபெறும். தற்காலத்தில் நோய்களின் தாக்கங்கள் அதிகரித்து வருகின்றன.

எவ்வளவுதான் மருத்துவத்துறை பலவித முன்னேற்றங்களை கண்டாலும் அதிகரித்துவரும் நோய்களை தணிவிப்பதில் தோல்வியையே சந்தித்து வருகின்றது. காலமாற்றத்திற்கேற்ப மக்களின் வாழ்வியல் கட்டமைப்புகளும், நடைமுறைகளும் மாற்றமடைந்து வருகின்றன.

இதனால் நவீன மருத்துவத்துறைக்கே சவால் விடும் அளவிற்கு நோய்கள் தீவிரத்தன்மை பெற்றிருக்கிறன. எனினும் இதற்கான தீர்வாக பண்டைக்கால சித்தர்களாலும் முனிவர்களாலும் பேணி பாதுகாக்கப்பட்டு வந்த யோகக்கலை சிறந்த தீர்வை வழங்குவதால் தற்கால மருத்துவ விஞ்ஞானத்தால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

எவ்வித பக்கவிளைவுகளுமின்றி நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இக்கலைக்கு இருப்பதனால் சர்வதேச நாடுகளில் மதிப்பும் மவுசும் அதிகமாகக் காணப்படுகிறது.

உடலிலுள்ள சகல உள்ளுறுப்புக்களும் சுறுசுறுப்புடன் இயங்கச் செய்வதிலும் அந்த உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை சீராக வழங்குதலிலும் உடலுக்கு தேவையில்லாத கழிவுகளையகற்றி தேவையான சக்தியை வழங்குவதிலும் யோகாசனமானது முக்கியத்துவம் பெறுகின்றது.

மருத்துவப் புள்ளிவிபரங்களின் படி இலங்கையிலும் சரி உலகநாடுகளிலும் சரி ஐந்து வகையான நோய்கள் மனிதனை தாக்குவதில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. இருதயநோய்கள், நீரிழிவு, சிறுநீரககோளாறுகள், புற்றுநோய் மற்றும் சுவாசநோய்கள் முதலிய ஐந்து நோய்களும் அதிகமாகப் பீடித்துவரும் நோய்கள் வரிசையில் முதன்மை பெறுகின்றன.

இத்தகைய தொற்றா நோய்களுக்கான சிகிச்சைமுறைகள் நவீன மருத்துவத்தில் கணப்படுகின்றபோதும் பலஎதிர்மறையான விளைவுகளும் ஏற்பட ஏதுவாகின்றன. ஆனால் எவ்விதமான பக்கவிளைவுகளோ செலவுகளோ இல்லாத மருத்துவ விஞ்ஞானமான யோகக் கலையை பயில்வோருக்கு உடல் உளரீதியாக வரும் எந்தவித நோய்களையும் வெற்றிகொள்ளும் ஆற்றல் இயல்பாகவே வருகிறது.

எட்டு யோகபடி முறைகளில் முன்றாவதாக உள்ள ஆசனங்கள் உடலைசுத்தம் செய்வதனூடாக மனதை சீராகவைத்திருக்க உதவுகின்றன. ஆசனங்கள் ஏராளமாக இருந்தபோதும் குறிப்பிடத்தக்க ஆசனங்களை செய்வதனூடாக உடலையும் மனதையும் முன்னேற்றமான நிலையில் அதாவது ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இக் கலையினை பயிலமுடியும். பெண்களுக்கு ஏற்படும் பலபிரச்சினைகளுக்கு தீர்வாகஅமைகிறது. யோக நூல்களின் படி எமது உடலானது நாடிகளினால் கட்டமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது 72000 நாடிகள் உடலில் காணப்படுவதாக சிவசம்கிதை எனும் யோக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநாடிகளின் இயக்கத்தை சரிவரபேணுவதன் மூலம் உடலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இந்தபணியை யோகா பயிற்சியின் மூலம் மேற்கொள்ளமுடியும்.

IMAGE_ALT

அத்துடன் குருதியானது உள்ளுறுப்புக்களுக்கு தடையின்றிகிடைக்கவும் நாளமில்லாச் சுரப்பிகள் சரிவரவேலைசெய்யவும் நரம்புமண்டலங்கள் தசைகள் மூட்டுக்களின் சீரான இயக்கத்திற்கும் இது பெரிதும் துணைபுரியும். அதுமட்டுமன்றி உளரீதியான பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.கோபம் நெருக்கீடுகள் பதகளிப்பு மனஅழுத்தம் மனஉளைச்சல் கவலைவிரக்தி முதலிய பலமிதமான உளவியல் சார் பிரச்சினைகளுடன் பாரிய உளநோய்களும் வராமல் தடுக்கலாம். மொத்தத்தில் சகலஉடல், உளநோய்களுக்கும் நித்திய சிரஞ்சீவியாக யோகாபயிற்சிகள் திகழ்கிறது எனில் பிழையில்லை.

தற்போது உலகநாடுகளில் யோகாசனக் கலை பற்றியதான தப்பபிப்பிராயங்கள் படிப்படியாகவிலகி விழிப்புணர்வு மேலோங்கி வருகையில் எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் அதுபற்றிய ஆழமான அறிவுஆர்வம் குன்றியிருப்பது கவலைக்குரியவிடயமாகும். எமதுபண்பாட்டு பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்பைக்கொண்டுள்ள இக்கலையை பயிலாமல் அறியாமல் அவமாககாலத்தை கழித்து வருகிறோம்.

யோகப் பயிற்சி மூலம் வாழ்வை சிறந்த முறையில் மாற்றியமைத்துக் கொள்ளமுடியும். அத்துடன் மனிதமனங்களில் தோன்றும் மிருககுணங்களை அழித்து ஒழுக்கம்மிக்க வாழ்வுக்கு அடித்தளமிட்டு தெய்வீககுணங்கள் மேலோங்க உதவுகிறது. தற்போது பெருகிவருகின்ற குரோதங்கள் போட்டி பொறாமைகள் வன்முறைகள் குற்றச்செயல்கள் போன்ற பலஎதிர்மறையான செயல்கள் சமூகத்தையும் இனங்களையும் சீரழித்துவருகின்றன. இத்தகைய எதிர்மறை சிந்தனைகளை செயல்களைதடுக்கும் ஆற்றல் யோகக்கலைக்கு உண்டு. மன ஒருமைப்பாடு தன்னம்பிக்கைஆளுமைப்பண்புகள் படைப்பற்றல் திறன் ஆக்கபூர்வமான சிந்தனைகள் முதலிய பல உயர்ந்த பண்புகள்வளர ஏதுவாக அமைகிறது. எனவே யோகப் பயிற்சியை சரியான குரு ஒருவரது வழிகாட்டலுடன்தான் பயிலவேண்டும். தவறான வழிகாட்டல்களுடன் செய்யப்படும் பயிற்சிகள் தவறானவழிக்கே இட்டுச்செல்லும்.

இறுதியாக இவ்வாண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றசர்வதேச யோகா தினமானது பல நோக்கங்களை அடைவதற்கானதாக இருக்கவேண்டுமே தவிர வெறும் கொண்டாட்டமாக மட்டும் இருக்கக்கூடாது. நமது பிரதேசத்தை பொறுத்தவரை யோகாசனம் தொடர்பான பூரண அறிவு பெற்றவர்கள் குறைவு என்றே கூறலாம். அல்லது பூரண அறிவுபெற்றவர்கள் குடத்துள் விளக்குபோல் தம்மைவெளிக்காட்டாமல் தம்முடனே வைத்திருந்து ஈற்றில் அவர்களுடன் அக்கலையும் முடிந்துவிடுகிறது.

சிலர் யோகா பற்றிய ஆழமான சூட்சுமான விடயங்களை வெளிக்காட்ட விரும்புவதில்லை.பக்குவமான நம்பிக்கைக்குரிய சில மாணவர்களுக்கு தான் பயின்றதை பயிற்றுவிக்க முன்வர விரும்புவதில்லை.

எனவே இது விடயத்தில் இந்திய அரசாங்கம் அக்கறை எடுக்கவேண்டும். ஏனெனில் ஐ.நாவால் சர்வதேச யோகா தினத்தை பிரகடனப்படுத்த முன்னின்றுசெயற்பட்ட நாடு இந்தியா. அதுமாத்திரமன்றி இந்தியாவின் பாரம்பரியகலைகளுள் ஒன்று.

எனவே எமது பிரதேசத்தை சார்ந்த மக்களும் பயனடையும் வண்ணம் யோகக் கலையை விஸ்தரிக்கவேண்டியது இந்திய அரசின் கடமையாகும். இதற்கு இங்குள்ள யோகாசனத்தில் தகுதியும் தரமும் வாய்ந்தவர்களை தெரிவுசெய்து புலமைப்பரிசில் மூலம் இந்தியாவலுள்ள அங்கீகரிக்கப்பட்ட யோகாசன நிறுவனங்களில் பயிற்சியளித்து அவர்களைக் கொண்டு எமது பிரதேச மக்களுக்கான சேவையை வழங்கவேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பமுடியும்.

ஆக்கம் : எஸ்.நதிபரன்