செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

யாழ். குடாநாட்டின் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியை எய்துவதற்கு தடையாக நிற்கும் புறநிலைக் காரணிகள்

Posted: 2015-06-24 06:39:50
யாழ். குடாநாட்டின் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியை எய்துவதற்கு தடையாக நிற்கும் புறநிலைக் காரணிகள்

யாழ். குடாநாட்டின் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியை எய்துவதற்கு தடையாக நிற்கும் புறநிலைக் காரணிகள்

உலக மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்பட்டுவரும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையானது கடந்த 2000 ஆம் ஆண்டில் மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் என்று சுமார் 60 இலக்குகள் வரை பிரகடனப்படுதியிருந்தது.

குறிப்பாக 3ஆம் உலக நாடுகளை மையப்படுத்தி வரையறை செய்யப்பட்டு அபிவிருத்தி அடைவதற்கு பிரயத்தனப்பட்டு வரும் நாடுகளுக்கென சில விசேடமான இலக்குகளையும் நிர்ணயித்திருந்தது.

பட்டினி மற்றும் வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி, பாலின சமத்துவம், சிசு மரண வீதத்தை குறைந்த மட்டத்தில் பேணுதல், சூழலியல் சார் அபிவிருத்திக்கான உலகமயமாதல், தாய் சேய் நலன்களைப் பேணல், மலேரியா, எய்ட்ஸ் மற்றும் ஏனைய கடும் தாக்கத்தை விளைவிக்கக்கூடிய நோய்களுக்கு எதிராக போராடுதல் முதலிய 8 இலக்குகளும் முக்கியத்துவதிற்குரியனவாக விளங்குகின்றன.

இந்த இலக்குகள் 2015ஆம் ஆண்டில் எய்தப்பட வேண்டிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் பிரதானத்துவம் பெறுவதும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் ஒன்றான யாழ். மாவட்டதைப் பொறுத்தவரை நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி அடைந்து கொள்வதில் இவ் 8 இலக்குகளும் சவாலானவையாகவே அமைந்திருக்கின்றன.

தற்போதுள்ள சூழலில் யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரை கட்டடங்கள் அதன் அமைப்பு ரீதியாக உயர்ந்து செல்கின்றனவேயன்றி அபிவிருத்தியின் இலக்கை அடையவில்லை என்றே கூறவேண்டும்.

வேற்றினக் கலாசாரங்கள், நடை உடை பாவனைகளின் கட்டற்ற வருகை தமிழ் சமூகத்தின் ஆழமாக வேர் விட்டிருக்கும் பண்பாட்டு பாரம்பரியங்களை சிதைக்கின்றன. ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு சமூக, பொருளாதார, கலாசாரம், சூழல் போன்ற காரணிகள் இன்றியமையாதவை. ஆனால் இந்த அம்சங்களின் போக்குகள் இங்கு எதிர்மறையாகவே காணப்படுவது கண்கூடு. அபிவிருத்தி என்ற போர்வையில் இங்கு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கதாயினும், நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை யாழ்.குடாநாடு அடைந்து வருகின்றதா? எதிர்காலத்தில் அடையுமா? எனும் வினாக்கள் பலர் மனங்களில் எழுவது தவிர்க்க முடியாதது.

எனவே நீண்ட கால அபிவிருத்திக்கு சமூக,பொருளாதார,கலாசார,சூழல் போன்ற காரணிகள் நிலைத்தன்மை பொருந்தியனவாகவும் கட்டமைப்பு ரீதியில் சிறந்த நிலையிலும் இருத்தல் வேண்டும். யாழ் குடாநாட்டை பொறுத்தவரை இத்தகைய காரணிகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை உற்று நோக்கினால், யாழ். குடாநாட்டிற்கு தேவையான பொருள்கள் மற்றும் சேவைகள் வெளி மாவட்டங்களிலும் வெளி நாடுகளிலும் இருந்து இறக்குமதி செய்யப்படுவனவாகவே இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் இங்குள்ள மக்களில் அதிகமானோர் புலம்பெயர்ந்தவர்களின் கடின உழைப்பில் வரும் பணத்தை கண்டபடி ஆடம்பரமாக செலவு செய்து உல்லாச வாழ்க்கை வாழும் நுகர்வோராகவும், வெட்டி பேச்சு பேசும் சொல் வீரர்களாகவும் இருக்க விரும்புகின்றனரே தவிர பிராந்திய வளங்களைப் பயன்படுத்தி சுய தொழில் முயற்சியாண்மை மூலமும் மற்றும் சுய உற்பத்தி மூலமும் தன்னிறைவு காணக்கூடிய மனப்பான்மை பொருந்தியவர்களாக இருப்பதனைக் காண்பது அரிது.

IMAGE_ALT

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அவ் நாட்டின் மூலதன இருப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவு போன்றன செல்வாக்குச் செலுத்துகின்றன.

தென்னிலங்கை உற்பத்திகளுடன் போட்டியிடுவதில் எமது பிரதேச உற்பத்திகள் தோற்றுப்போகும் நிலையிலிருப்பதால் எமது உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கின்றனர். இதற்கு, உற்பத்திகளின் தரம், மற்றும் உற்பத்தித் திறன் என்பன எமது உற்பத்திகளைப் பொறுத்தவரையில் குறைவாக இருக்கின்றமையே ஆகும். சேவைகள் என்னும்போது தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு பற்றாக்குறையாக இருப்பதால் அபிவிருத்தியுடன் தொடர்புடைய வேலைகளைச் செய்வதற்கு ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

உதாரணமாக, கட்டட வேலைகள், வீதி அபிவிருத்தி வேலைகள், புகையிரதப்பாதை அபிவிருத்தி வேலைகள் முதலிய பாரிய வேலைகளை தற்கால தொழில்நுட்பத்திற்கமைய நிறைவேற்றுவதற்குரிய அறிவு குறைவாகக் காணப்படுகின்றது.

அதுமட்டுமன்றி எம்மவர்கள் தொழில் ரீதியான வாண்மையை, அதாவது தொழிற்திறனை பெருக்கிக்கொள்வதிலும் அசிரதைப் போக்கு காணப்படுகின்றது. இவர்கள் பெரும்பாலும் பணத்தினை மையப்படுத்தியே தமது தொழிலை மேற்கொள்வதால் சிறப்பாக தமது தொழிலை மேற்கொள்ளமுடியாமல் போகின்றது.

யாழ். குடாநாடைப் பொறுத்தவரை பெருமளவு ஊழியம் விரயமாக்கப்படுகின்றது. அதாவது வினைத்திறனற்ற வேலையினால் உற்பத்தித் திறன் என்பது குறைவாகவே காணப்படுகின்றது. பெருமளவு பட்டதாரிகள் வேலையற்று இருப்பதால் நாடு பெரும் சமுக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. பெரும்பாலான பட்டதாரிகள் அரச உத்தியோகம் பெறுவதையே தமது இலட்சிய நோக்காகக்க௫தி வருகின்றனர்.

அரச துறை என்றால் தொழில் பாதுகாப்பு, ஓய்வூதியம் முதலான பல சலுகைகளைப் பெறுதல், தனியார் துறையுடன் ஒப்பிடுகையில் அரச துறையில்உடல் வலுவையோ மூளை வலுவையோ அதிகம் பிரயோகிக்காமல் செய்யப்படும் வேலைகள் போன்ற பல்வேறு நன்மைகள் அரச துறையில் இருப்பதால் ஏராளமானோர் அரச துறையை நாடுகின்றனர். அபிவிருத்திக் குறிகாட்டிகளுள் எழுத்தறிவு வீதம் என்ற குறிகாட்டி முக்கியமானது. ஓர் இனம் கல்வியறிவில் முன்னேற்றகரமான போக்கு காணப்படுமிடத்து அவ்வினம் வளர்ச்சியடைந்த இனமாகக் கருதமுடியும். இப் பிரதேசத்தை பொறுத்தவரையில் தற்போது கல்வித் துறைமிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

கல்வியே கருந்தனமாக, மூலதனமாக, கண்ணாக இருந்தநம் சமூகம் கல்வித்துறையில் கீழ்நிலையிலிருப்பது எம்மினத்தின் அபிவிருத்தியில் பாதகமான போக்கையே வெளிப்படுத்தும். தற்போது நாட்டிலுள்ள சனத்தொகையில் வேலையற்றறோர் தொகையானது கணிசமாக உயர்வடைந்துள்ளமையை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இதில் சோகத்திற்குரிய விடயம் யாதெனில் உயர்கல்விகற்றவர்கள் அதிகளவானோர் வேலைதேடி அலைகின்றனர். இந்த நிலைக்கு நாட்டில் அமுலிலுள்ள கல்வித்துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதேயாகும். இன்றைய தொழிநுட்ப வளர்ச்சி மிகுந்த யுகத்தில் தொழிலுக்கு ஏற்ற கல்விமுறை பின்பற்றப்படவில்லை.

அதுமட்டுமன்றி அரசதுறையில் அல்லதுஅரச கூட்டுத்தாபனங்களில் நியமனம் பெறுவது தற்போதுள்ள சூழ்நிலையில் கானல் நீராகிவருகின்றன. காரணம் அரச நியமனங்கள் அனேகமாகஅரசியல் என்றமாயைக்குள் அமிழ்ந்து வருவதேயாகும். இதனால் படித்ததிறமையுள்ள பலர் வேலையற்று கீழுழைப்பில் தமது வாழ்நாளை கழிக்கின்றனர். சிலர் புலம் பெயர்ந்து வேலைதேடி வெளிநாடுகளில் தஞ்சமடைகின்றனர். அரசியல் செல்வாக்கினால் அரசநிறுவனங்களில் தகைமை குறைந்தவர்களின் உள்வருகையினால் அரச இயந்திரம் பலபாதிப்புகளை சந்தித்து வருகின்றது.

அடுத்து சுகாதாதர மருத்துவவசதிகள் இங்கு முன்னேற்றமடைந்திருந்தாலும் இத்துறையும் வியாபாரமாயைக்குள் அமிழ்ந்து வருகிறது. பெரும்பாலான வைத்தியர்கள் நோயாளர்கள் மேல் அக்கறைகொண்டு செயற்படுகிறார்கள் என்பதை விட பணத்தின் மீது அதிக பற்றுவைத்துள்ளனர் எனலாம். யாழ் மாவட்டத்திலுள்ள ஒரே பெரிய வைத்தியசாலையான யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றும் பலவைத்தியர்கள் தனியார் வைத்திய நிலையங்களிலும் கடமையாற்றி வருகின்றனர். தம்மிடம் வரும் நோயாளர்களைதாம் கடமைபுரியும் தனியார் வைத்தியசாலைக்கு வருமாறு பணிப்பதால் பணவசதி குறைந்த மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் தனியார் வைத்திய நிலையங்களில் கடமை புரிவதை கட்டுப்படுத்தும் சட்டங்களை சுகாதார அமைச்சு அமுல் படுத்தினால் ஏழைமக்கள் நன்மையடைவர்.

ஏனெனில் அரசாங்கம் நலிவடைந்த சமூகத்திற்கும் சகலவசதிகளும் கிடைக்கவேண்டும் என்றநன் நோக்கம் கருதி இவற்றை இலவசமாக வழங்கி வருகையில் அரச ஊதியத்தையும் பெற்று நோயாளர்களிடமும் பணம் கறக்கும் செயற்பாடுகள் இடம் பெறுவது தண்டனைக்குரியதாகும்.

எனவே நோயாளர்களின் நலனில் அக்கறைகொண்டு சேவையாற்ற வைத்தியதுறையினர் முன்வரவேண்டும். அத்துடன் இங்கு மருத்துவப் பட்டப்படிப்பைபடித்து முடித்துவிட்டு வெளிநாடுகளில் தொழில் புரிந்துவருகின்ற அல்லது செல்ல விரும்புகின்ற வைத்தியர்களும் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். மக்களின் பணத்தில் உங்கள் படிப்பை முடித்துவிட்டு உங்களின் உறவுகளுக்காக சேவைசெய்யாது அன்னிய தேசங்களில் பணத்திற்காக தாய்நாட்டு மக்களின் ஏக்கங்களையும் தவிப்புகளையும் மறந்து பிழைப்பு நடத்தும் கொடுமை இருக்கிறதே இதனை தாய்நாடு கூட மன்னிக்காது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு பொருளாதாரக் கீழ்க்கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படுவது அவசியமாகும். அந்தவகையில், வீதிகள், பாலங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் முதலியவற்றின் கட்டமைப்புக்கள் சிறந்த முறையில் இருக்கவேண்டியது அவசியமாகும். தற்போது, இங்கு காணப்படும் வீதி மற்றும் வடிகாலமைப்புக்கள் முன்னேற்றமடைந்திருந்தாலும், வீதி ஒழுங்கு விதிகள் உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் வீதி விபத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

IMAGE_ALT

விபத்துக்களினால் ஏராளமான உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுகின்றன. வீதிகளில் பயணிப்பதே ஆபத்தானதாக மாறி வருகின்றது. அத்துடன், வீதி அபிவிருத்தியுடன் வடிகாலமைப்புக்களின் வினைதிறனின்மையால், மழை காலங்களில் நீர் வழிந்தோடுவதற்கு தடையாக இருப்பதால் போக்குவரத்து மார்க்கங்கள் பாதிக்கப்படுகின்றது.

மேலும், கீழ்கட்டுமான அமைப்புகளில் துறைமுகங்கள், விமான ஓடுதளங்கள் என்பவை குறிப்பிடத்தக்கவை. இங்கு,காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை துறைமுகங்கள் மிகவும் பழமை வாய்ந்தவையாகவுள்ளன. பலாலி விமானத்தளமானது ஒரேயொரு விமானத்தளமாக அமைந்துள்ளது.

இவற்றை நவீன வசதிகளுடன் புனரமைத்து,சர்வதேச பாவனைக்கு விடுவதற்குரிய ஏற்பாடுகள் இல்லையென்றே கூற வேண்டும். இதனால்,இத் துறை சார்ந்த அபிவிருத்திக்கான பங்களிப்புகள் இல்லாமல் போகின்றன. குறிப்பாக சுற்றுலாத்துறை அபிவிருத்தியானது இங்கு மிகவும் பின்தங்கியுள்ளது.

மேலும், இங்கு சட்டம் ஒழுங்குகள் சீரழிந்த நிலையில் இருக்கின்றது. இளைஞர்களிடையே அதிகரித்த மதுப்பாவனை, போதைவஸ்து பாவனை, புகைத்தல் பாவனை, வரம்புக்கு மீறிய நவீனரக கைத்தொலைபேசிப் பாவனை, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கட்டுமீறும் வன்முறைகள் போன்ற பல்வேறு சமுக விரோத நடவடிக்கைகள் அரங்கேறி வருவதனால் அபிவிருத்திச் செயற்பாடுகள் தடங்கல் நிலை ஏற்பட ஏதுவாகின்றது.

ஏனெனில், இத்தகைய சமுக விரோத நடவடிக்கைகளில் பெரும்பாலும் இளைஞர்களே சம்பந்தப்பட்டு வருகின்றனர். ஒரு நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இளையோரின் பங்களிப்பு காத்திரமானது. இளையோரின் ஊழியம் மற்றும் முயற்சியாண்மை வீணடிக்கப்பட்டு வருவது கவலைக்குரியதாகும்.

இலங்கை ஒரு விவசாய நாடாக விளங்குகின்றமையால், பொருளாதார வளர்ச்சியில் விவசாயத் துறையானது காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றது.

அத்துடன்,மீன்பிடித் துறையும் கைத்தொழில்துறையும் சிறப்பான பங்களிப்பை வழங்கிவருகின்றன. யாழ் குடாநாட்டினைப் பொறுத்தவரையில்மீன்பிடித் துறை நலிவடைந்திருப்பதைக் காணலாம். விவசாயத் துறையானது இன்றைய காலபோக்குகளுக்கேற்ப நவீனத்துவம் பெறாததாகவே இருக்கின்றதது. அத்துடன்,பருவ நிலையும் சீரற்றிருப்பதால் விவசாயத் தொழிலைச் செய்வதற்கு பின்னடிக்கின்றனர்.

மேலும், தென்னிலங்கை விவசாய உற்பத்திகள் முறையில் கிடைப்பதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்படைகின்றனர். மேலும், உயர் பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் ஏராளமான ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருப்பதால் விவசாயத்தினை நம்பி வாழ்வோர் தொழிலின்றி இருக்கின்றனர். பலர் விவசாயம் செய்வதில் ஆர்வமின்றி இருந்து வருகின்றனர். அதாவது இத் தொழிலைச் செய்வதிலுள்ள கடினத் தன்மையாலும் ஏனைய தொழில்களைச் செய்வதிலுள்ள விருப்பம் காரணமாகவும், இத்துறையிலுள்ள உற்பத்திகள் குறைவடைந்துள்ளன.

அதேபோல, மீன்பிடித் துறையையும் குறிப்பிட்டு கொள்ளலாம். எமது பிராந்திய மீனவர்கள் மீன்பிடித்தலில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். ஆழ்கடல் மீன்பிடி என்பது இவர்களுக்கு எட்டாக்கனி என்பதுடன் மீன்பிடித் துறையில் நவீன முறைகளும் பின்பற்றப்படாமையால் ஏற்றுமதி நோக்கிய மீன்பிடியில் முன்னேற்றகரமான போக்கு காணப்படவில்லை. மேலும், கைத்தொழில் துறையை எடுத்துக்கொண்டால், அச்சுவேலியிலுள்ள கைத்தொழில் பேட்டையின் செயற்பாடுகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

இதனால், உற்பத்திகளுக்கான வளங்கள் இருந்தும் வீணடிக்கப்படுகின்றது. ஏனெனில், இலங்கையைப் பொறுத்தவரையில் பெருமளவு அந்நியச் செலாவணியைச் சம்பாதிக்கும் துறையாக விளங்குவது புடைவை மற்று ஆடைக் கைத்தொழில் துறையே என்றால் மிகையல்ல.

மேற்கூறப்பட்டவாறான குறைகள் இருக்கும் வரையில் நம் தேசம் நிலைபேறான அபிவிருத்தியை அடையமுடியாது. எது எப்படியோ அபிவிருத்தியின் வழி பயணிப்பதற்கு கல்வியானது மிகவும் அவசியமானதாகும்.

தற்போதுநாட்டிலுள்ளபல்கலைக்கழகங்களில் கலைமாணிகளும் கலாநிதிகளும் தத்துவமற்றும் முது தத்துவமாணிகளும் பேராசிரியர்களும் பெருகிவருகிறார்கள். ஆனால் முன்னையகாலங்களில் உள்ளவாறான அறிவு முதிர்ச்சியான கல்விச் சமூகத்தைகாண முடியாமலிருப்பது துரதிஷ்டமானதே. குடாநாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் ஒவ்வொருவரும் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கான வழிகள் பற்றி சிந்திக்கவேண்டும்.

ஓர் இனத்தின் எழுச்சியானது அவ்வினத்தின் கல்வியியலாளர்களின் கைகளிலேயே உள்ளது.

இவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் எமது கலை கலாசாரங்கள் பாரம்பரியங்கள் இனத்துவ அடையாளங்கள் சிதைவுறாது பேணுவதற்கான முனைப்பான எத்தனங்களையும் மேற்கொள்ளவேண்டும். அத்துடன் எமது பிரதேசத்திலுள்ள வளங்களை குறிப்பாக இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

ஸ்ரீ.நதிபரன்