செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தேசிய வீரன் பண்டாரவன்னியனின் 212 ஆவது நினைவு தினம் பற்றிய ஒரு பார்வை!

Posted: 2015-08-29 01:31:31 | Last Updated: 2015-08-29 01:37:27
தேசிய வீரன் பண்டாரவன்னியனின்  212 ஆவது நினைவு தினம் பற்றிய ஒரு பார்வை!

தேசிய வீரன் பண்டாரவன்னியனின் 212 ஆவது நினைவு தினம் பற்றிய ஒரு பார்வை!

தமிழர் வரலாறுகளும் அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வரும் நிலையில் சிங்கள கடும் போக்காளர்களின் மனங்களில் தேசிய வீரனாக இன்றும் வாழும் தமிழனே பாயும் புலி பண்டாரவன்னியன்.

மேலைத்தேசத்தவரின் ஆதிக்க வலைக்குள் இலங்கை வீழ்ந்த போது வெள்ளையருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரனே இவன். இலங்கை அந்நியர் ஆதிக்கத்திற்குட்பட்ட காலப்பகுதியில் வன்னி இராச்சியம் சுயாதீன இராச்சியமாகவும், சில சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணம் மற்றும் கோட்டை இராசதானிகளுக்கு கப்பம் செலுத்தும் இராசதானியாகவும் விளங்கியது. இந்த நிலையில் வன்னி இராச்சியத்தின் சுயாதீனத்திற்காக போராடிய மன்னர்களில் தேசிய வீரன் பண்டார வன்னியன் முதன்மையானவன்.

பண்டார வன்னியனின் 212 ஆவது தேசிய தினம் கடந்த 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைத் தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னி மண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழாது இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதி மூச்சு வரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25ஆம் நாள் அம்மன்னனின் நினைவு நாளாக நினைவுகூரப்படுகிறது.

முன்பு, பண்டார வன்னியனின் நினைவு நாளாக ஒக்ரோபர் 31 ஆம் நாள் தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது பண்டார வன்னியன் வீரமரணம் அடைந்த பின்னர் பொறிக்கப்பட்ட நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் 1803 ஒக்ரோபர் 31 ஆம் திகதி 'பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்' எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

IMAGE_ALT

தமிழர் வரலாறுகளையும் அடையாளங்களையும் பாதுகாத்து பேணிவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நினைவு நாளை மாற்றி அமைத்தனர். 'ஜெயசிக்குறு' நடவடிக்கை தொடங்கப்பட்ட பின் 1997ஆம் ஆண்டில் பண்டாரவன்னியன் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என தமிழ் மக்களின் தலைமையால் அறிவிக்கப்பட்டது.

ஏனெனில், முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னி மண் முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.

வெள்ளையரின் பாதுகாப்பு நிறைந்த முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்த நாள் தான் ஓகஸ்ட் 25.

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது.

வன்னியின் வவுனியா மாவட்ட செயலகம் அருகிலும் பண்டாரவன்னியனுடைய நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு வவுனியா மாவட்ட சபையின் தலைவராக இருந்த சட்டத்தரணி மு.சிற்றம்பலம் அவர்களின் முயற்சியின் பயனாக கடும் அழுத்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து இச்சிலை அமைக்கப்பட்டது.

அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் அதனை திரைநீக்கம் செய்து வந்தார். இந்த நிலையில், தமிழர் தேசத்தின் வீர வரலாற்றை அறிந்து கொள்வதற்கு பண்டார வன்னியனின் நினைவுக்கல் உதவுகின்றது. அந்த வகையில் மிகவும் சிறப்பான முறையில் உணர்வெழிச்சியுடன் பண்டார வன்னியனின் 212 ஆவது நினைவு தினம் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றிய அந்த வீரவரலாற்றை அந்நாளில் நினைவு கூர்த்தனர் எம்மக்கள்.

இவ்வாறு காலங்கள் கடந்தும் வாழும் வீரத் தமிழன் பண்டார வன்னியன் வரலாற்றை பாதுகாக்க வேண்டியது தமிழர் கடமை என்பதே உண்மை.

- கே.வாசு -