செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இங்கிலாந்தை வீழ்த்தி ருவென்டி 20 உலகக் கிண்ண சம்பியனானது மேற்கிந்தியத் தீவுகள்!

Posted: 2016-04-03 14:39:30
இங்கிலாந்தை வீழ்த்தி ருவென்டி 20 உலகக் கிண்ண சம்பியனானது மேற்கிந்தியத் தீவுகள்!

இங்கிலாந்தை வீழ்த்தி ருவென்டி 20 உலகக் கிண்ண சம்பியனானது மேற்கிந்தியத் தீவுகள்!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ருவென்ரி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றது.

நாணச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஜேசன் றோயின் விக்கெட்டை இழந்தது. முதல் ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரீ, 2ஆவது பந்தில் ஜேசன் றோயை கிளீன் போல்டாக்கினார்.

அடுத்த ஓவரை வீசிய அன்ட்ரூ ருசேல் அலெக்ஸ் ஹேல்ஸை வீழ்த்தினார். பின்னர் வந்த இயன் மோர்கன் 5 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேற, 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.

இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தார் ஜோஸ் பட்லர். பவுண்டரி அடித்து ஆட்டத்தை ஆரம்பித்த பட்லர், சுலைமான் பென் வீசிய 9ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரையும், 11ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களையும் விளாசினார். இதனால் 11 ஓவர்களில் 83 ஓட்டங்களைப் பெற்றது இங்கிலாந்து.

தொடர்ந்து வேகம் காட்டிய அவர், பிராத்வெயிட் வீசிய அடுத்த ஓவரில் பிராவோவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 36 ஓட்டங்களை எடுத்தார். ஜோஸ் பட்லர் - ஜோ ரூட் ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்காக 40 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்க, ஜோ ரூட் 33 பந்துகளில் அரை சதம் கண்டார். 14ஆவது ஓவரை வீசிய பிராவோ, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோரை வீழ்த்த, இங்கிலாந்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.

பிராத்வெயிட் வீசிய அடுத்த ஓவரில் ஸ்வீப் அடித்த ஜோ ரூட், பென்னிடம் பிடிகொடுத்தார். அவர் 36பந்துகளில் 7 பெளண்டரிகளுடன் 54 ஓட்டங்களை எடுத்தார். இதையடுத்து 7 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது இங்கிலாந்து.

இதன்பிறகு கிறிஸ் ஜோர்டானுடன் இணைந்தார் டேவிட் வில்லே. பிராவோ வீசிய 17ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய டேவிட் வில்லே, பிராத்வெயிட் வீசிய அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்த கையோடு ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த பிளங்கெட் 4 ஓட்டத்துடன் வெளியேற, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களைக் பெற்றது இங்கிலாந்து.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் பிராவோ, பிராத்வெயிட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சாமுவேல் பத்ரீ இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

156 ஓட்டங்களை எடுத்தால் இரண்டாவது உலகக் கோப்பையை கைப்பற்றலாம் என ஆட்டத்தை தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. டேவிட் வில்லே வீசிய முதல் ஓவரில் ஒரு ஓட்டத்தை மட்டும் பெற்றது.

இதையடுத்து இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் புது முயற்சியாக இருபது ஓவர் வரலாற்றிலேயே மொத்தமே 10 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த ஜோ ரூட்டை பந்துவீச அழைத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

முதல் பந்தில் சார்லஸை வெளியேற்றிய ரூட், மூன்றாவது பந்தில் அதிரடி வீரர் கெயிலையும் வெளியேற்றினார். இருவருமே பந்தை தூக்கி அடிக்க முயன்று எல்லைக்கோட்டுக்கு அருகில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர்.

மூன்றாவது ஓவரை வீசிய வில்லே, அரையிறுதியில் இந்தியாவின் வெற்றியை பறித்த சிம்மன்ஸை வெளியேற்றினார். சிம்மன்ஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ ஆனார். மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓவரில் 13 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து சாமுவேல்ஸுடன் இணைந்தார் பிராவோ. இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளித்து மெதுவாக ஓட்டங்களைச் சேர்த்தனர்.

பிளங்கெட் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்தார் சாமுவேல்ஸ். பவிலியன் நோக்கிய திரும்பிய சாமுவேல்ஸை தடுத்துநிறுத்திய நடுவர், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பட்லர் பிடித்த பிடி குறித்து மூன்றாவது நடுவரிடம் விசாரித்தார். தொலைக்காட்சி 'ரீ-பிளே' யில் பந்து மைதானத்தில் பட்டது தெளிவானது. இதையடுத்து தப்பிப் பிழைத்தார் சாமுவேல்ஸ்.

சாமுவேல்ஸ் - பிராவோ ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 11.3 ஓவர்களில் 75 ஓட்டங்கள் எடுத்தது. ரஷீத் வீசிய 14ஆவது ஓவரில் சிக்ஸர் விளாசிய பிராவோ, அதே ஓவரின் கடைசிப் பந்தை தூக்கி அடிக்க முயன்று ரூட்டிம் பிடிகொடுத்தார். அவர் 27 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனிடையே பிளங்கெட் வீசிய 15வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசிய சாமுவேல்ஸ் அரசை சதம் கடந்தார்.

அடுத்து வந்த ரஷல் மற்றும் சமி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் சூடு பிடித்தது. வில்லே வீசிய 16வது ஓவரில் ரஷல் வெளியேற, மூன்றாவது பந்தில் அவரைப் பின் தொடர்ந்தார் சமி. ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் தனி மனிதனாகப் போராடினார் சாமுவேல்ஸ்.

மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெறுவதற்கு 2 ஓவர்களில் 27 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஜோர்டன் வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தை பெளண்டரிக்கு விரட்டினார் சாமுவேல்ஸ். அந்த ஓவரில் 8 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது.

கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆட்டம் பரபரப்பானது. பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தில் சிக்ஸர் அடிதத்த பிராத்வெயிட், அடுத்து வீசிய மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டினார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உலகக் கிண்ணத்தை தம்வசமாக்கியது.

சாமுவேல்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 66 பந்துகளில் 8 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 85 ஓட்டங்களை எடுத்தார். பிரத்வெயிட் 10 பந்துகளில் 34 ஓட்டங்கள் குவித்து மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்க வழிசமைத்தார்.

85 ஓட்டங்களைக் குவித்த சாமுவேல்ஸ் ஆட்டநாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் விராத் கோலி தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேவேளை, ருவென்டி 20 மகளிர் இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.