செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பிரச்சினையைத் தீர்க்கவல்லது எது - உரிமை அரசியலா? அபிவிருத்தி அரசியலா?

Posted: 2016-07-31 11:24:21 | Last Updated: 2016-07-31 11:26:07
பிரச்சினையைத் தீர்க்கவல்லது எது - உரிமை அரசியலா? அபிவிருத்தி அரசியலா?

பிரச்சினையைத் தீர்க்கவல்லது எது - உரிமை அரசியலா? அபிவிருத்தி அரசியலா?

உரிமை அரசியல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா அல்லது அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா என்று இப்போது சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.

கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை இந்த நாட்டை உலுப்பி எடுத்து வருகின்றது. கூடவே அபிவிருத்தி தொடர்பான பிரச்சினையும் தமிழ் மக்களைப் பல்வேறு வழிகளில் வாட்டிக்கொண்டிருக்கின்றது.

இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே அஹிம்சை ரீதியிலும், ஆயுதமேந்திய வழிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. மென்முறையிலும், வன்முறையிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழர் தரப்பின் வலிமையான போராட்டங்களினால், அரசுகள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகின. அந்த நெருக்கடிகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழிகோலவில்லை. மாறாக தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டங்களை அடித்து நொறுக்கி இல்லாமற் செய்வதற்காக இராணுவ வழிமுறையை அரசுகள் தேர்ந்தெடுத்திருந்தன. அந்த வழிமுறையில் அரச தரப்பினர் இறுதியாக பெரும் வெற்றியை அடைந்துள்ளார்கள்.

இராணுவ ரீதியான வெற்றியை எட்டிவிட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களுடன் சமரசம் செய்து கொண்டு பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு சிங்கள பேரின அரசியல் தலைவர்கள் இன்னுமே தயாராகவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களுக்கு மேலாகின்றது. இருந்த போதிலும் யுத்தத்தில் அடைந்த வெற்றியின் மாயையில் இருந்து பெரும்பான்மையான பேரின அரசியல் தலைவர்கள் இன்னும் விடுபடவில்லை. இராணுவத்தினர் உயிர்த்தியாகம் செய்து அடைந்த வெற்றியைப் போற்றி, பேணி பாதுகாக்க வேண்டும் என்ற மனப்போக்கிலேயே அவர்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

இந்த நாட்டைத் தாயகமாகக் கொண்ட குடிமக்கள் ஒரு தொகுதியினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையானது, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஓர் உத்தியாக அவர்களால் கருத முடியவில்லை. மாறாக, அரசியல் உரிமை கோரி போராடிய அந்த மக்களுடைய போராட்டத்தையும், போராட்ட சிந்தனையையும், போராட்ட குணத்தையும் அடியோடு இல்லாமற் செய்வதற்கான வழிமுறைகளிலேயே பேரின அரசியல் தலைவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கு பொருளாதார நன்மைகளை முதன்மைப்படுத்திய அபிவிருத்தி அரசியலை, அவர்கள் ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தி வந்துள்ளார்கள். அது இப்போது முன்னரிலும் பார்க்க அதிக வலுவோடு முன்னெடுக்கப்படுகின்றது என்றே கூற வேண்டியிருக்கின்றது.

அரச தரப்பினருடைய இந்தச் செயற்பாடுகளை, நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் பல தசாப்தங்களாக நியாயமான அரசியல் உரிமைகளை இழந்து நிற்கும் தம்மை அடக்கி ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற தந்திரோபாயச் செயற்பாடுகளாகவே தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். அரச தரப்பினருடைய இந்தச் செயற்பாடுகள், யுத்த மோதல்கள் ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க தீவிரமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாகவே தமிழர் தரப்பினரால் நோக்கப்படுகின்றது. அரசியல் உரிமைக்காக அஹிம்சை ரீதியில் போராடியபோதும்சரி, ஆயுத ரீதியாகப் போராடியபோதும்சரி, உரிமைக்கான போராட்டத்துடன் அபிவிருத்தி தொடர்பான சிந்தனையும் கூடவே இழையோடியிருந்தது. அன்றாடப் பிரச்சி;னைகளுக்குத் தீர்வு காண வேண்டும், அதேவேளை அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்திருந்தன. பசித்த வயிற்றுக்குச் சோறு போடாது அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் கவனம் செலுத்தியிருந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய தேசிய கட்சிகள் இரண்டும், தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி அரசியலின் முக்கியத்துவம் குறித்து காரசாரமான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தன.

இதற்கு தமிழ் சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களைத் தமது கட்சிகளில் இணைத்து அவர்களுக்கு முக்கிய இடத்தையும் பதவிகளையும் வழங்கி அதன் ஊடாக மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அந்தக் கட்சிகள் தீவிரமாக முனைந்திருந்தன. அரசியல் உரிமைகளுக்கு முன்னதாக வீதிகளும் பாலங்களும் அவசியம் என்பதை அந்தப் பிரசாரங்களின் மூலம் மக்களுக்கு தேசிய கட்சிகளில் இணைந்திருந்த தலைவர்கள் உணர்த்தினார்கள்.

அதுமட்டுமல்லாமல், வாழ்வாதாரத்திற்கான அரச மற்றும் தனியார் துறைகளிலான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் பற்றியும் அவர்கள் வலியுறுத்தினார்கள். உரிமைக்கான போராட்டம் பசித்த வயிற்றுக்கு சோறு போடமாட்டாது என்ற யதார்த்தத்தை அவர்கள் மக்களுக்குப் புரிய வைக்க முயன்றார்கள். இதில் ஓரளவு அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றே கூற வேண்டும்.

இந்த அடிப்படையிலேயே இணக்க அரசியல் போக்கு கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. இணக்க அரசியலின் மூலம் மாத்திரமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். எதிர்ப்பு அரசியலான உரிமைக்கான அரசியல் மேலும் மேலும் அழிவுகளையே ஏற்படுத்தும் என்ற அரசியல் பிரசாரமும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அரசியல் உரிமைக்கான போராட்டம் குறித்து மக்கள் மத்தியில் தீவிர சிந்தனை கிளர்ந்திருந்த சூழலில் தேசிய கட்சிகள் இரண்டும், தமிழ்ப்பிரதேசங்களில் வாக்குப் பலத்தைக் கொண்டிருந்தமை இதற்குச் சிறந்த உதாரணமாகும். அது மட்டுமல்லாமல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட்பட தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து தேசிய கட்சிகளில் தமிழ்ப் பிரமுகர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாகத் தெரிவாகி நாடாளுமன்றத்திற்குச் சென்றிருந்தமையும் அவ்வாறு சென்றவர்களுக்;கு அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் என, சூழலுக்கும் சந்தர்ப்பத்திற்கும் எற்ற வகையில் அவர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டிருந்தமையும் வரலாறாகப் பதிவாகியிருக்கின்றன.

அந்தப் பாரம்பரியம் வீரியமான ஆயுதப் போராட்டத்தின் பின்னர், இப்போதும் தொடர்ந்திருப்பதைக் காணலாம். இனப்பிரச்சினை என்று இலங்கையில் ஓரு பிரச்சினை கிடையாது. இங்கு பொருளாதாரப் பிரச்சினையே உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்து, பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்தால் இப்போதுள்ள பிரச்சினைகள் யாவும் முடிவுக்கு வந்துவிடும் என்ற அரசியல் நம்பிக்கையை பேரின அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள். அத்துடன் இந்த வழிமுறையே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சிறந்த வழி என்பதை தமது கட்சி உறுப்பினர்கள் என்ற ரீதியில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் தலைவர்களின் ஊடாகத் தமிழ் மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

எனவே, உரிமை அரசியலும், அபிவிருத்தி அரசியலும் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தி;ல் அந்த நாள் முதல் இன்று வரை பின்னிப்பிணைந்திருப்பதைக் காண முடிகின்றது. அதேவேளை, உரிமை அரசியலிலும் பார்க்க, அபிவிருத்தி அரசியலின் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற புதிய அரசியல் யதார்த்தத்தை நோக்கி நிலைமைகள் நகர்ந்து செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமை ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், அரசியல் போராட்டத்தில் தோல்வி கண்ட ஓர் இனமாக தாழ்வுச் சிக்கல் நிறைந்த அரசியல் மன நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகக் கூட தமிழர் தரப்பினர் தீவிரமாக உணர்கின்றார்கள். பேரழிவை ஏற்படுத்திய யுத்தமானது, தங்களுடைய அரசியல் போராட்ட வலிமையையும் அடித்து நொறுக்கிவிட்டுள்ளதாக அவர்கள் அரசியல் ரீதியாக எண்ணி உளூர துயருற்றிருக்கின்றர்கள்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், பேரிழப்புகளுக்குக் காரணமான அரசியல் பகைமைகளைக் கடந்து, கசப்பான கடந்த காலச் செயற்பாடுகளை மறந்து ஆளுந் தரப்பினர் தம்முடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அரசியல் ரீதியாக சமரச நிலையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள். அமைதியாகவும் ஐக்கியமாகவும் வாழலாம் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை. மாறாக தட்டிக்கழிக்க முடியாத – வெளிப்படையாக எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள முடியாத வழிமுறைகளின் ஊடாக ஆளுந் தரப்பினர் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதுவும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

மோசமான முப்பது வருட கால யுத்தம் காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் பேரழிவைச் சந்தித்திருக்கின்றன. சமூகக் கட்டமைப்புக்கள் மட்டுமல்லாமல் பௌதிக ரீதியான கட்டமைப்புக்களும் சிதைந்து போயின. இவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் பெரிதும் அவசியமாகியிருந்தன. அதே நேரம் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களும் தீவிரம் பெற்றிருந்தன. அத்துடன் இனப்பிரச்ச்னைக்கு ஓர் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற சர்வதேச நெருக்கடியும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது.

யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரும் ஏதேச்சதிகாரப் போக்கில் நடந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் சீனச்சார்பு கொள்கை சர்வதேசத்தின் வெறுப்பையே சம்பாதிக்க உதவியிருந்தது. இதனால் இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற தேவை அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளுக்கு எழுந்திருந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் யுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும். நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச ரீதியிலான அரசியல் மயப்பட்ட கோஷத்தை அழுத்தமாக முன்னெடுத்திருந்தனர்.

இதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகள் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடித்து, சர்வதேச அணுகுமுறைக்கு ஆதரவான போக்கைக் கொண்ட மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக அரியணையில் ஏற்றுவதற்குக் காரணமாகின. இந்த அரசியல் மாற்றத்தின் ஊடாக அமெரிக்கா பிரிட்டன் போன்ற சர்வதேச நாடுகளின் ஆதரவு சக்தியாக இலங்கை சர்வதேச அரங்கில் மாற்றம் பெற்றது. இந்த மாற்றமே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக முதலில் முன்வைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு கூறுவதற்காக சர்வதேச விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை, சர்வதேச விசாரணை என்ற நிலைமையில் இருந்து நீர்த்து, உள்ளக கலப்பு விசாரணைப் பொறிமுறையே போதும் என்ற நிலைமைக்கு இறங்கி வரச் செய்திருந்தது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கடந்த வருட அமர்வின்போது, உள்ளக கலப்பு விசாரணை பொறிமுறைக்கு அனுசரணை வழங்கி இணக்கம் தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தiலைமையிலான அரசாங்கம், கலப்பு விசாரணை பொறிமுறை உருவாக்கப்படமாட்டாது. முழுக்க முழுக்க உள்ளக விசாரணை பொறிமுறையொன்றே அமைக்கப்படும் என்று அடித்துக் கூறியிருக்கின்றது. ஆனால், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியதன் பின்னர் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணை பொறிமுறையை வலியுறுத்திய அமெரிக்கா இலங்கையின் இந்த மாற்றத்தைப் பெரிதாகக் கவனத்திற்கொள்ளவில்லை.

மாறாக அரசாங்கம் இத்தகைய கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜதந்திரிகளான தெற்கு மற்றும் மத்திய ஆசிய அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால். மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள் தொழில்துறை விவகாரங்களுக்கான உதவிச் செயலாளராகிய டொம் மலிநோஸ்கி ஆகியோர் இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பதைப் பெரிதாகக் கவனத்திற் கொள்ளவில்லை.

மாறாக போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை பொறிமுறையை இலங்கை அரசாங்கம் அமைக்கட்டும் - பொறுப்பு கூறும் விடயத்தில் அது முன்னேற்றத்தைக் காட்டட்டும். அதன் பின்னர் நாங்கள் எமது நிலைப்பாட்டை வெளியிடுவோம் என்று அறிவித்திருந்தார்கள்.

அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள இலங்கை பொருளாதாரத்துறையில் முன்னேற்றம் காண வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். அது விடயத்தில் அமெரிக்கா இலங்கைக்கு உதவிபுரியும் என்பதையும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இவர்களுடைய இந்தக் கூற்றானது, இலங்கை அரசாங்கத்திற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் சிங்களத் தீவிர அரசியல் சக்திகளிடமிருந்து அழுத்தங்கள் ஏற்பட்டு, அதன் விளைவாக அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாகிவிடக் கூடாது என்று அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. அத்துடன் ஆட்சியொன்று நிலைத்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்ற தீவிர மேலாண்மையுள்ள பௌத்தவாத நிலைப்பாட்டைக் கொண்ட சிஙகளத் தீவிரவாத சக்திகளின் அரசியல் ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இழந்து விடக் கூடாது என்பதில் அக்கறை கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

சிங்களத் தீவிரவாத சக்திகளின் ஆதரவுடன் சீன சார்பு அரசியல் சிந்தனையையும் நிலைப்பாட்டையும் கொண்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான அரசியல் சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதிலும் அமெரிக்கா அக்கறையாக இருப்பதும் தெளிவாகியிருக்கின்றது. இந்த நிலையில் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் இழுத்தடிப்பு நிலைப்பாட்டிற்கே ஆளாகும் என்பது புலனாகின்றது. அததுடன் அந்த விசாரணைகளும் சர்வதேச நாடுகள் ஏரல் எழுப்பி வந்தவாறு தாக்கமான ஒரு விசாரணையாக அமையுமா என்பதும் சந்தேகத்திற்குரியதாகின்றது.

பொறுப்பு கூறல் விடயம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடைபெறும்போதே அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்படுவது வழக்கம். அப்போது ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் எற்படுகின்ற அழுத்தத்தைத் தணித்துக் கொள்வதும் வழங்கமாக இடம்பெற்று வருகின்றது. கடந்த வருடம் இடம்பெற்ற அமர்வின்போது அதிரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தனக்கு எதிரான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி ஆதரவளித்திருந்தது.

அபிவிருத்தி அரசியல் மேலோங்குமா.?

அடுத்த முறை ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்வு நடக்கும்போது இலங்கை உள்ளுராட்சி தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கும். அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வசன வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய ஒரு சூழலில் ஐ.நா மனித உரிமைப் பேரவை பொறுப்பு சுறும் விடயத்தில் அழுங்கு பிடியுடன் செயற்பட்டால், அரசுக்கு எதிரான சிங்கள தீவிரவாத அரசியல் சக்திகள் மேலெழுந்து அரசாங்கத்தைப் பதவியிழக்கச் செய்யக்கூடிய ஆபத்தான நிலைமையும் உருவாகலாம் என்பதைச் சுட்டிக்காட்டி, பொறுப்பு கூறும் விடயத்தில் சர்வதேச அரங்கில் தனக்கு சாதகமான ஒரு தளர்வு நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். அத்தகைய நிலைமையொன்று ஏற்படும் பட்சத்தில் நிச்சயமாக அமெரிக்கா இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இத்தகயை ஒரு எதிர்கால அரசியல் நிலைமை காரணமாகவே, அமெரிக்கா, உரிமை அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் பார்க்க, அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்ற வழிமுறையைக் கோடிகாட்டியிருக்கின்றது என்று கருதுவதற்கும் இடமுண்டு.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் உரிமை அரசியலிலும் பார்க்க, அபிவிருத்தி அரசியல் என்பது கவர்ச்சியாகத் தோற்றமளிக்கலாம். மிக மோசமான இழப்புகளுக்கு ஆளாகி எதிர்கால வாழ்க்கை குறித்து பொருளாதார ரீதியில் கவலைகளைக் கொண்டுள்ளவர்கள் மத்தியில் அபிவிருத்தியே முதன்மை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

உரிமைக்கான அரசியலில் அவர்கள் தோய்ந்திருக்கின்ற போதிலும், உரிமை அரசியலை சரியான வழியில் அவர்களின் மனங்களைக் கவர்ந்திழுக்கத்தக்க முறையில் அல்லது அவர்கள் திருப்தி அடையத்தக்க வகையில் அவர்களின் அரசியல் தலைமையகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை என்ற அரசியல் யதார்த்தம் அபிவிருத்தி அரசியல் செல்வாக்கு பெறுவதற்கு வழி வகுத்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது. உரிமைக்கான அரசியலில் வல்லமை உள்ளவர்களாக – காரியங்களைச் சாதிக்கத்தக்க சக்தியுடையவர்களாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயற்படாத வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணமுடியும் என்று சொல்வதற்கில்லை.

செல்வரட்னம் சிறிதரன்