செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கூட்டு ஒப்பந்தப் பேச்சு நேற்றும் படுதோல்வி!

Posted: 2016-08-27 01:04:36
கூட்டு ஒப்பந்தப் பேச்சு நேற்றும் படுதோல்வி!

கூட்டு ஒப்பந்தப் பேச்சு நேற்றும் படுதோல்வி!

ஒன்றரை வருடங்கள் கடந்தும் இழுபறியில் தொடரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் சம்பள பேச்சுகள் நேற்றும் படுதோல்வியிலேயே முடிந்தது.

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் தொழிற்சங்களுக்கும் இடையில் பலகட்டப் பேச்சுகள் நடைபெற்றுள்ள நிலையில் நேற்று மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாகின.

இராஜகிரியவில் அமைந்துள்ள தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்தப் பேச்சுகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட தோட்ட கமிட்டி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்களும் கலந்துகொண்டன. இதேவேளை, முதலாளிமார் சம்மேளம், தொழில் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் இ.தொ.காவின் தலைவர் முத்துசிவலிங்கம் மற்றும் இ.தொ.காவின் உப தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சத்திவேல் ஆகியோரிடம் வினவியபோது,

"இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 1,000 ரூபா என்ற சம்பளக் கோரிக்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது. இன்றைய (நேற்று) பேச்சுகளின்போது 500 ரூபாவை அடிப்படை சம்பளமாக தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. ஆனால், நாங்கள் 500 ரூபா அடிப்படை சம்பளம் என்ற கோரிக்கையை அடியோடு நிராகரித்துவிட்டோம். தற்போது வழங்கப்படும் 620 மொத்த சம்பளத்தையும் காட்டிய ஒரு உயரிய தொகையை அடிப்படைச் சம்பளமாக கூறும் பட்சத்திலேயே பேச்சுகளுக்கு இணங்குவோம் என்றோம்.

எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. வெகுவிரைவில் மீண்டும் பேச்சுகள் இடம்பெறும். இம்முறை ஒரு இணக்கப்பாட்டை எட்ட முடியும்" - என்றனர்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் புதிய செயலாளராக நியமனம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு இது கன்னி சம்பள பேச்சாகும். இது தொடர்பில் அவரிடம் வினவிய போது,

"நாங்கள் ஒரு நியாயமான சம்பளக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் சாங்கிரஸ் 1,000 ரூபா கோரிக்கையை முன்வைத்துள்ளது. நேற்றைய பேச்சுகளின்போது அவர்கள் கூறிய 500 ரூபா அடிப்படை சம்பளத்தை அனைவரும் நிராகரித்தோம்.

600 ரூபாவுக்கு மேல் ஒருதொகையாக இருந்தால் பரிசீலிக்கலாம். இ.தொ.கா. போல் நாங்கள் ஆயிரம் ரூபாவை வலியுறுத்தவில்லை. தொழிலாளர்களுக்கு நியாயமான ஒரு சம்பளத்தையே கேட்கின்றோம். இரண்டு வருடங்கள் ஆகவுள்ள சூழலில் தொடர்ந்து இது இழுபறியானால் பாரிய சிக்கலைத் தோற்றுவிக்கும்.

தற்போது கொடுக்கப்படும் தற்காலிக கொடுப்பனவும் 2 மாதங்கள் மாத்திரமே வழங்கப்படும். எனவே, விரைவில் ஒரு நியாயமான சம்பளத்துடன், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும்" - என்றார்.

கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது தொடர்பில் இதுவரை 10 சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ள சூழலில் இதுவரை ஒரு இணக்கப்பாடு எட்டப்படவில்லை. 2013ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலாவதியானது. அன்றுமுதல் இன்றுவரை கூட்டுஒப்பந்தப் பேச்சுகள் தொடர் இழுபறில் உள்ளதால் தொழிலாளர்கள் நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாவை இடைக்கால கொடுப்பனவாக அரசு வழங்க நடவடிக்கை எடுத்தது. இதற்கான முயற்சிகளை தமிழ் முற்போக்குக் கூட்டணி எடுத்திருந்தது. தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

என்றாலும், பல தோட்டங்களில் (தனியார் கம்பனிகளுக்குச் சொந்தமான) இந்தக் கொடுப்பனவும் வழங்கப்படாமல் உள்ளதாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றைய பேச்சு தோல்வியடைந்துள்ளன சூழலில் அடுத்தகட்ட பேச்சில் ஓர் இணக்கப்பாடு எட்டப்படும் என்று இ.தொ.கா. கூறுவது எந்தளவு சாத்தியப்படப் போகின்றது எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.