செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பெண்ணை காயப்படுத்தி தவிக்கவிட்டு உணவருந்த சென்ற அம்புலன்ஸ் சாரதி

Posted: 2016-09-07 09:55:09 | Last Updated: 2016-09-07 10:59:07
பெண்ணை காயப்படுத்தி தவிக்கவிட்டு உணவருந்த சென்ற அம்புலன்ஸ் சாரதி

பெண்ணை காயப்படுத்தி தவிக்கவிட்டு உணவருந்த சென்ற அம்புலன்ஸ் சாரதி

காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, வீதியோரமாக மோட்டார் சைக்கிளுடன் நின்ற பெண்ணொருவரை மோதி வீழ்த்திவிட்டு, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் அங்கிருந்து நழுவிச் சென்ற சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

\இந்தச் சம்பவத்தில் ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலையில் சுகாதாரப் பணி உதவியாளராக கடமையாற்றும் அராலி மத்தியைச் சேர்ந்த ஆர்.சிவகுமாரி (வயது-40) என்பவரே காயமடைந்தவராவார். குறித்த பெண் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இன்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பெண்ணும் மேலும் இரு பெண்களும் ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலையில் பணி முடித்துவிட்டு பொன்னாலை – காரைநகர் பாலத்தினூடாக வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளில் தனியாகச் சென்ற மேற்படி பெண்ணின் தலைக்கவச பட்டி கழன்றமையால் அவர் பாலத்தில், வீதி ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதனைச் சீர்செய்துகொண்டிருந்தார்.

அப்போது காரைநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சுழிபுரம் நோக்கிச் சென்ற, காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி குறித்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளினார்.

இதன்போது மோட்டார் சைக்கிளுடன் பாலத்தின் ஓரமாக வீழ்ந்த குறித்த பெண் காயமடைந்து மயங்கினார். இதனை அவதானித்த மற்றைய இரு பெண்களும் ஓடிச் சென்று அவரைத் தூக்கினர். அவர் அடிக்கடி தண்ணீர் கேட்டுக்கொண்டிருந்த போதும் எவரும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், இவரை மோதித்தள்ளிய அம்புலன்ஸ் சாரதியோ அது தனது சாப்பாட்டு நேரம் என்றும் தான் சுழிபுரத்தில் உள்ள வீட்டுக்கு சாப்பிடச் செல்வதாகவும் கூறினார். காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்குமாறு கூறியபோதிலும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பெண் தொடர்பாக கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத அவர், தான் சுழிபுரத்திற்கு சென்று சாப்பிட்டுவிட்டு வரும்வரை அவர்களை அங்கு நிற்குமாறு கூறிவிட்டுச் செல்ல முற்பட்டார். அதற்கு அந்தப் பெண்கள் சம்மதிக்காததால் தனது அடையாள அட்டையை அவர்களிடம் கொடுத்துவிட்டு தான் வரும்வரை அங்கு நிற்குமாறு கூறிச் சென்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை அறிந்த வீதியால் சென்ற சிலர் அவரை காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். ஏனைய இரு பெண்களும் அந்த இடத்திலேயே நின்றனர்.

இரண்டரை மணிநேரம் கழித்து பிற்பகல் 4.30 மணியளவில் சுழிபுரத்தில் இருந்து காரைநகர் வைத்தியசாலைக்கு மீண்டும் வந்த குறித்த அம்புலன்ஸ் சாரதியை, சம்பவ இடத்தில் நின்றவர்கள் மறித்து உரையாட முற்பட்டபோது தான் வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு உடனடியாகவே அங்கிருந்து நழுவிச் சென்றார்.

சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற குறித்த பெண்ணின் கணவரும் உறவினர்களும் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு சென்று சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவித்தனர். அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் இரு தரப்பினரும் இணங்கிச் செல்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.

அம்புலன்ஸ் சாரதியாக பணியாற்றும் ஒருவர் உயிர்களைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பில் இருந்தும், வீதியில் சென்ற பெண்ணொருவரை மோதித்தள்ளிவிட்டு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் அங்கிருந்து நழுவிச் சென்றமை தொடர்பாக பலரும் விசனம் வெளியிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.